ஆதார்

(முகநூல் பதிவு, 23-Sep-2016)

நீண்ட நெடுநாளாகப் பிடிவாதமாகச் செய்ய மாட்டேன் என்றிருந்த ஒரு செயலைச் செய்ய நேற்றிரவே கோவை வந்துசேர்ந்து, இன்று காலை 8 மணிக்கே கிளம்பினேன் – ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க. எனக்கு முன்னரே 30 பேருக்குப் பக்கம் இருந்திருக்கக்கூடும். இடையிடையில் அவரவர் குடும்பத்தினர் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர். 30 டோக்கன் தான் தருவார்கள் என்று சொன்னதால், கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயத்தோடுதான் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன். வரிசையில் பெரும்பாலும் வயதானவர்கள்; பல முறை வந்து கிடைக்காமல் திரும்பியவர்கள். மற்றவர்கள் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துவிட்டு வந்தவர்கள். ‘ஆதார் அட்டை கிடைத்து, ரேஷன் கார்ட் ஸ்மார்ட் கார்ட் கிடைத்துவிடும்; எனக்கு வேலைதான் போய்விடும் போலிருக்கிறது,’ என்றார் ஓர் இளைஞர்.

இந்து முன்னணித் தலைவர் என்று சொல்லப்படுகிற ஒருவர் கொலை செய்யப்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நான் இதுவரை கேள்விப்பட்டிராத அந்த மனிதர் கொல்லப்பட்டதில் வருத்தம்தான். ஒரு மாநகரையே தன்னிச்சையாக வருந்தச்செய்து, பல பகுதிகளில் பேருந்துகளையெல்லாம் நிறுத்தவைத்த ஒரு பெருந்தலைவர் யாரென்றே தெரியாமல் இதே ஊரில் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்ட என் அறியாமையை நொந்து கொண்டேன். எங்கள் பகுதியில் நிறையப் பேருந்துகள் ஓடிக்கொண்டிருந்ததால், எங்கள் ஊர் அடைந்திருந்த துயரத்தின் உக்கிரத்தை நான் அப்போது முழுமையாக உணரவில்லை; அந்த உக்கிரத்தில் பல வண்டிகள் பொசுங்கி, கடைகள் உடைந்துவிடும் என்பதும் அப்போது தெரியவில்லை. வயதானவர்கள் பலர் ஜெராக்ஸ் எடுக்கவும், காலை 5 மணியிலிருந்து காத்திருந்ததில் பசியாறவும் வழியின்றித் தவித்துக் கொண்டிருந்தனர். (எனக்கு வீட்டிலிருந்து டிபனில் இட்லிகள் மனைவியோடு வந்துவிட்டன.)

பத்தரை ஆகியும் அலுவலகம் திறக்கப்படவில்லை. அப்போதுதான் வந்து சேர்ந்த ஒரு பாட்டி, வரிசையில் நின்றிருந்த தன் கணவரிடம், ‘இங்க ஏன் நிற்கிற? அங்க முன்னாடி நின்னிருக்க வேண்டியதுதானே?’ என்று அர்ச்சனை செய்தார். அதுவரை எங்கள் யாரோடும் ஒரு சொல் பேசாமல் நின்றிருந்த அந்த தாத்தா, ‘அங்க இடம் கிடைச்சா நின்னிருக்க மாட்டேனா,’ என்றார் பரிதாபமாக. இன்னொரு பாட்டியின் பேரன், ‘பாட்டிக்கு ஆதார் அட்டை எடுக்கணும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கேண்டா,’ என்று கைபேசியில் தூய தமிழில் பேசியபடி, கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில், வரிசையில் முன்னே சென்று நின்று கொண்டான். அருகில் அமர்ந்திருந்த அந்தப் பாட்டி, ‘நம்ம இடம் அங்கில்லடா, இங்க இவருக்குப் பின்னாடி,’ என்றார். ‘மூடீட்டு உக்கார மாட்டியா நீ, நான் தான நிக்கறேன்’ என்று இனிய தமிழில் கனிவுடன் கடிந்துகொண்டு அவன் பின்னே வந்தான்.

வெகுநேரம் கழித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் வந்து, புகைப்படம் எடுக்கும் பெண்கள் வருவதற்கு வழியில்லை என்றும், இன்று விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாவென்றும் கூறிச்சென்றார். எல்லோரும் புலம்பிக் கொண்டே கலையத் தொடங்கினர்.

5 மணியிலிருந்து காத்திருந்த ஒரு வயதான தம்பதியினருக்கு அப்போதுதான் காப்பி கிடைத்திருந்தது. அடுத்த நாளும் அலுவலகம் இயங்குமா என்பது தெரியாத நிலையில் திங்களன்று திரும்பி வர முடிவு செய்தனர். மறுபடியும் காரையும் ட்ரைவரையும் 5 மணிக்கு வரவழைக்கச் செய்வது எப்படி என்ற கவலையோடு காப்பியை ஆற்றிக்கொண்டிருந்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: