பியூஷ் மனுஷ் – ஒரு பன்முகப் போராளி

 

(‘பியூஷ் – ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக‘ என்று நான் முன்பு எழுதிய பதிவினை, சர்வோதயம் மலர்கிறது இதழில் பதிப்பிப்பதற்காக விரிவுபடுத்தி எழுதியுள்ளேன். செப்டெம்பர் மாதம் தான் வெளிவரும் வாய்ப்பிருப்பதால், இங்கே இப்போது பதிவிடுகிறேன். பியூஷ் பற்றி அறியாதவர்களுக்கு அவரைப் பற்றி ஓரளவு முழுமையான சித்திரத்தை இக்கட்டுரை வழங்கும் என்று நம்புகிறேன்.)

13220634_10154257572344617_7402894432340803922_o

பியூஷ் மனுஷ் நம் சமகாலத்தில் வாழ்ந்து வரும் மிகச் சிறந்த சமூகச் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவர். அவரது செயல்பாடுகளுக்காக அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டிய இவரது பெயர், இப்பொதுதான் நிறையப் பேரின் கவனங்களை ஈர்த்தது – அவர் மீது இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அநீதிக்காக.

சேலம் முள்ளுவாடி கேட் ரயில்பாதையின் மேலாக ஒரு மேம்பாலம் அமைக்கும் வேலை, மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமலும், சாலையோடு இணைக்கத் தேவைப்படும் நிலம் விலைக்கு வாங்கப்படாமலும், போக்குவரத்துக்குச் சரியான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாமலும் தொடங்கப்பட்டது. இதை ஆட்சேபித்து, சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி சேலம் மக்கள் குழுவைச் சேர்ந்த பியூஷ் மனுஷ், ஈசன் கார்த்திக்  மற்றும் முத்து ஆகியோர் முற்றிலும் அமைதியான வழியில் போராடிய போது, 8-7-2016 அன்று பிணையில் வரமுடியாத சில பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், 14-7-2016 அன்று ஈசன் கார்த்திக்கும் முத்துவும் பிணையில் வெளியில் விடப்பட்டனர். ஆனால், அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபம் எழுப்பப்பட்டு பியூஷ் மனுஷுக்கு பிணை மறுக்கப்பட்டது.

இதுவரையில் நடந்தவை, பல நகரங்களில் அடிக்கடி நடப்பதுதான்; நம் மனங்கள் மரத்துப்போய் இவற்றைக் கவனிக்காமற் போகப் பழகிவிட்டோம். ஆனால் பின்னர் நடந்த செயல்கள் தான் சமூக அக்கறை கொண்ட அனைவரையும் உலுக்கியது.

பியூஷ் தனிச்சிறையில் வைக்கப்பட்டார். அவர் பல சிறைக்காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இச்செய்தி பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், மிகக் குறைந்த கால அவகாசத்தில், சமூக ஆர்வலர்கள் பலரும் சேலத்தில் கூடினர். பியூஷின் மனைவியும், தமக்கையும், வழக்கறிஞரும் சிறையில் அவர் படும் அல்லல்களைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறினர்.

அதன்பின் இதனை பொதுமக்கள் மத்தியில் பல்வேறு போராட்ட வடிவங்களில் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அவற்றில் முக்கியமானவை:
1. அவரது நண்பர்களிடம் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, ஒரு பசுமைப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றினை நட்டு, அதனைப் புகைப்படம் எடுத்து, இணையத்தில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. பலரும் அவ்வாறே செய்தனர்.
2. பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில், ஒரு நாள் எல்லாரும் இப்பிரச்சனை பற்றிய பதிவுகளை எழுதி, #StandWithPiyush என்கிற குறியட்டையை (hashtag) பிரபலமடையச் செய்யும் (trend) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இம்முயற்சிகள் அறிவிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட உடனேயே, ஏராளமனவர்கள் தன்னிச்சையாக பியூஷுக்கு ஆதரவு தெரிவித்து எழுதத் தொடங்கினர். பியூஷ் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை தேசிய அளவில் கவனம் பெற்றது. இப்படியான ஒரு சமூகப் போராளியை அறிமுகப்படுத்திய காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக்கூடப் பதிவுகள் எழுதப்பட்டன. இணையத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மனுக்களில் தம் பெயர்களை இணைத்துக்கொண்டனர். சிறை அதிகாரிகளோடு அநேகம் பேர் தொலைபேசி மூலம் பேசித் தம் ஆட்சேபத்தைப் பதிவு செய்தனர். முதலமைச்சர், மனித உரிமை ஆணையம், நகர ஆட்சியர், காவல் ஆணையர் என்று பலருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.

சமூகத்தின் மனசாட்சியை விழிப்புறச் செய்த இந்த பியூஷ் மனுஷ் யார்? நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், இணையத்திலும் பொதுவெளியிலும் இவருக்காகப் போராட வேண்டிய அவசியம் என்ன?

சேலம் மக்கள் குழு என்ற அமைப்பினை உருவாக்கி சேலம் நகரத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டவர் பியூஷ்.  மூக்கனேரி, அம்மாப்பேட்டை குமரகிரி ஏரியில் தொடங்கி, சாக்கடைகளாக மாறிக்கொண்டிருந்த பல ஏரிகளையும் குளங்களையும் மீட்டெடுக்க மக்களைத் திரட்டிப் பணியாற்றினார். ஏரிகளுக்கு இடையில் தீவுகள் அமைத்து அவற்றில் பல ஆயிரம் மரங்கள் நடப்பட்டன. அந்த மரங்களே காற்றையும் நீரையும் சுத்தப்படுத்தின. ஏரிக்குள் வெளியேற்றப் படும் கழிவு நீரினைத் தடுக்கவும் சுத்திகரிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களிடம் திரட்டப்பட்ட பணத்தில், மிகக் குறைந்த செலவில் பலரது உழைப்பினை ஒருங்கிணைத்து இப்பணிகள் நடக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் இதில் பெருமளவு உண்டு. இன்றைக்கு மூக்கனேரி பொதுமக்கள் கூடி, ஓய்வெடுத்து, மரம் நட்டு மகிழும் ஒரு முக்கியமான தளமாக உருவாகியுள்ளது.

தரும்புரி மாவட்டத்தில், ஒரு வரண்ட பகுதியில், 150 ஏக்கர் நிலத்தில் ஒரு கூட்டுறவுக் காட்டினை (Co-op forest) உருவாக்கியுள்ளார் பியூஷ். வற்றிவிட்ட ஓர் ஓடை அவர்களது காட்டிலிருந்து மீண்டும் உயிர்பெற்று ஓடத் தொடங்கியுள்ளது; சுற்று வட்டாரத்தின் பல விவசாயிகள் இதனால் பயனடைந்துள்ளார்கள். இந்த இடத்திற்குப் பல குழந்தைகளும் விவசாயிகளும் ஆர்வலர்களும் தொடர்ந்து வந்து பல்வேறு செய்திகளைக் கற்றுச் செல்கின்றனர். மிகக் குறைவாக மழை வரும் வருடங்களிலும் பசுமையுடன் காட்சியளிக்கும் இந்த இடம் ஒரு மிகப் பெரிய சாதனைதான்.

இந்தக் கூட்டுறவுக் காட்டின் அருகிலேயே அய்யப்பன் வனம் என்ற ஓர் இயற்கை வழிபாட்டுத்தளத்தையும் உருவாக்கிவருகிறார் பியூஷ். ஏரிகளை மாரி ஸ்தலங்கள் என்றும் அழைக்கிறார். இன்றைய மதச் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் காற்றினை, காட்டினை, நீர்நிலைகளை, நிலத்தை மாசுபடுத்துவனவாகவே உள்ளன. இயற்கை வழிபாட்டினை மீட்பதன் மூலம், மக்களை இயற்கையை மதிக்கவும் அரவணைக்கவும் பாதுகாக்கவும் வைக்க முடியும் என்று பியூஷ் நம்புகிறார்.

சென்னையிலும் கடலூரிலும் பெருவெள்ளம் வந்தபோது, பியூஷும் சேலம் மக்கள் குழுவினரும் மீட்புப் பணிகளில் மிகத் தீவிரமாகவும், வேகமாகவும் இறங்கியது. 200 மூங்கில் படகுகள் செய்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பிவைத்தனர். 40 லாரிகளில் நிவாரணப் பொருட்களைத் திரட்டி அனுப்பினர். வீடுகள் இழந்த மக்கள் வசிப்பதற்காக மூங்கில் வீடுகள் கூட வடிவமைக்கப்பட்டன. வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு கூட்டுறவுப் பண்ணையில் வேலைவாய்ப்பு தருவதாகவும் கூறி பியூஷ் அழைப்பு விடுவித்தார். பின்னர் சேலத்திலிருந்து சென்னைக்கு நீர்நிலைகளைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். (மாரி) ‘அம்மா உத்தரவு’ என்ற அடைமொழியுடன் பல்வேறு செய்திகளையும் வழியெங்கும் பகிர்ந்து சென்றனர்.

1669992_10152199459429617_1501068491_o

பள்ளப்பட்டி ஏரி போன்ற இடங்களைத் தூர்வார அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காத போது, தொடர்ந்து சுத்தம் செய்வதையே ஒரு போராட்டமாக அறிவித்துச் செயல்பட்டிருக்கிறார்.
12963822_10154161763109617_6891017330529207955_n
சேலத்தில் ஏற்காடு சாலையில் மரங்கள் வெட்டப்பட இருந்தபோது, குழந்தைகள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியருக்கு மனுக் கொடுக்கச் சென்றனர். வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலிச் செய்திகளைப் பதாகைகளில் எழுதி வைத்தனர். இன்னொரு முறை சாலையில் ஐந்து மரங்கள் வெட்டப்பட்டிருந்ததைக் கண்டவுடன், வெட்டியவரிடம் ஆட்சேபித்து அதற்கு மாறாக 1000 மரங்கள் நடவேண்டும் என்று உறுதிமொழி வாங்கினார். அது நடவாத போது, தான் கட்டைப் பஞ்சாயத்து செய்ததாகவும், மரங்கள் வெட்டப்படுவதைக் காக்கத் தவறியதாகவும் கூறித் தன்னைக் கைது செய்யுமாறு கேட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

11722664_10153239660024760_6427011837571530717_o

இதற்கு முன்னரும், ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்க நேர்ந்ததால், தான் சட்டத்திற்குப் புறம்பான ஒரு காரியத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அப்போதெல்லாம் அவரைக் கைது செய்ய காவல் துறை மறுத்தது. ஆயினும் சிறைக்குச் செல்வது அவருக்குப் புதிதல்ல. சத்திஸ்கர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நடந்த தேசியப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு அறிக்கைகள் விநியோகித்தற்காக தேசவிரோதக் குற்றம் சாட்டப்பட்டு 23 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

முறைதவறிக் கட்டப்படும் ஒரு மேம்பாலத்தைத் தடுப்பதற்காக ஒரு சிறு போராட்டம் நடத்தியதற்காக மட்டும் பியூஷ் தற்போது கைது செய்யப்படவில்லை என்பதை அவரைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.  சேலத்திலும் பிற இடங்களிலும் நடக்கும் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதில் பியூஷ் முன்னனியில் இருந்தார்.  மதுவிலக்குப் போராட்டத்தில் இறந்த சசிப்பெருமாளுக்காக, போலீஸ் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காதபோது, இணையத்தில் மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை ஒருவர் வெளியிட்டதால் தற்கொலை செய்துகொண்ட வினுப்ரியாவுக்காக, கோயிலில் அனுமதி மறுக்கப்பட்ட தலித்களுக்காக, ஏரிகளை நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக, ஏரிகளில் நடத்தப்படும் சமயச் சடங்குகள், ரசாயன விநாயகர் சிலை கரைப்பு போன்றவற்றிற்கும் எதிராக, கெம்பிளாஸ்ட வேதாந்தா போன்ற பெருநிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிராக, ஈஷா போன்ற நிறுவனங்களின் தவறான சூழியல் நடவடிக்கைகளுக்கு எதிராக, போப்பால் சத்திஸ்கர் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, கிராமங்களில் ஒலிபெருக்கிகளோடு வளரும் கோயில் கலாச்சாரத்துக்கு எதிராக, தனது சொந்த சமண சமூகத்தினரின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதற்காக, தனியார் கல்விநிறுவனக் கொள்ளைக்கு எதிராக என்று பல செயல்பாடுகளில் ஈடுப்பட்டார்; மிகமிக அகலக்கால் வைத்தும் அனைத்திலும் சிரத்தையோடும் கடும் உழைப்புடன் செயல்பட்டார். பல சமயங்களில், கலெக்டர், கமிஷனர், கவுன்சலர் என்று பேதம் பார்க்காமல் அரசு எந்திரத்தோடு அனைத்து மட்டங்களிலும் நேரடியாக மோதினார். ஆனால் அவருக்கு வன்முறைப் போராட்டம் மீது நம்பிக்கை இருந்ததில்லை – ஆயுதம் ஏந்தியவனை அரசு மிக எளிதாக நசுக்கிவிடும் என்பதை உணர்ந்திருந்தார். அமைதி வழியில் வெவ்வேறு நூதன முறைகளில் செயல்பட்டுவந்தார்; தகவலறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்டது இந்தப் பல்லாண்டுச் செயல்பாடுகள் அனைத்தின் காரணமாகவும்தான்; அல்லது அண்மைக்காலத்தில் அவர் ஏற்படுத்திய பல நிர்ப்பந்தங்களின் நேரடி விளைவாகவும் இருக்கலாம்.

இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக நடத்தப்பட்டவை. அநீதிக்கு எதிரான இப்படியான போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு மக்களின் ஆதரவு அவசியம்; இத்தகைய ஆதரவு இருப்பதை அரசு அறிவதும் அவசியம். நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒருபுறமிருந்தாலும், நீதிமன்றத்தில் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியப்படாது. மக்கள் குரல் ஆட்சியாளர்கள் செவிகளில் ஒலித்தாக வேண்டும். ஒலிக்கத் தொடங்கியது.

மேலும் பியூஷ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டுமே இத்தனை எதிர்க்குரல்கள் எழவில்லை. பியூஷ் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தார் உறுதியாகக் கூறுகின்றனர். அவர் மீதான தாக்குதல் தான் இத்தனை பேரின் மனசாட்சிகளைத் தீண்டியுள்ளது.

பியூஷ் சமூகப் போராளி என்கிற அடையாளத்தைத்தான் தனது முதன்மையான அடையாளமாய் முன்வைத்து வந்துள்ளார். அநீதிக்கு எதிராகப் போராடுவதையும் இயற்கையில் மூழ்குவதையுமே தலையாய கடமைகளாகக் கருதுகிறார். ஆனால், அவர் ஒரு சமூகப் போராளி என்பதைத் தாண்டி, ஒரு பெரும் கூட்டுறவு காட்டினை உருவாக்குவது, ஏரிகளை மீட்பது என்று பல ஆக்கப்பூர்வமான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார்; பாக்கு மட்டைகள் தயாரிப்பது, மூங்கில் அறைகலன்கள் தயாரிப்பது என்று பசுமையான சிறுதொழில்களை லாபகரமாக நடத்தியும் பிறரை வழிநடத்தியும் இருக்கிறார்; அவர் மிகச் சிறப்பான பேச்சாளர்; குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்கள் மூலம் மாற்று அரசியல், இயற்கை நலன் என்று அவர்களது சிந்தனையை விரிவாக்கத் தூண்டுபவர்; கழிப்பறை முதல் மின்சார உற்பத்தி வரை கூட்டுறவுக் காட்டில் பல பசுமைச் சோதனைகள் செய்து வருபவர்; வலுவான குடிமைச் சமூகமே ஜனநாயகம் வெற்றிபெற அவசியமானது என்பதை வலியுறுத்தி வருபவர். வலுவான சமூகப் போராளி என்கிற அடையாளத்தோடு சேர்ந்த இந்தப் பன்முகத் தன்மைதான் அவரைத் தனித்துக் காண்பிக்கிறது.

ஊழலும் அதிகார மோகமும் மண்டிய அரசு எந்திரம் அவர் போன்றவர்களைத் தனக்கு எதிரியாகக் காண்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் சமூகம் அவரை உற்ற நண்பனாக உணர்ந்துகொள்ளவேண்டும்.

அவர்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு, அவர் தாக்கப்பட்டது உண்மையெனில் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரது ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்ந்து நடைபெறச் சாதகமான சூழல் உருவாக்கப்படும் வரை, களத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நீதியை நிலைநிறுத்தும் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் எதிர்காலத்துக்காகத் தொடர்ந்து உழைக்கின்ற ஒருவருக்காக நாம் செய்யக்கூடிய சிறு உதவி இதுதான். எதிர்காலத்தில் அநீதியை எதிர்க்கும் எவருக்கும் இப்படியொரு நிலை நேர்ந்துவிடாமலிருக்கவும் நம் குரல்கள் இப்போது பலமாக ஒலித்தே ஆகவேண்டும்.

காந்தியையும் காமராசரையும் எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில், நம்மிடையே வாழும் பியூஷ்களையும், நம்மிடையே தோன்றக்கூடிய புதிய பியூஷ்களையும் நாம் இழந்துவிடலாகாது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: