கிராமத்தில் எங்கள் பயிலகத்திற்கு வரும் ஒரு மாணவன் பத்தாவது முடித்திருக்கிறான்.மிகக் குறைந்த மதிப்பெண்கள். மேலே படிப்பதற்கான ஆர்வம் இல்லை. ஆனால், நல்ல துடியான பையன். தொழிற்பயிற்சி பெற்று, சீக்கிரம் வேலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். வீட்டிலோ எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள். எங்களுக்கு அவனை ITIல் சேர்த்தால் நல்லது என்று தோன்றியது. நண்பர் அன்பழகன் ஐடிஐ.யில் பணியாற்றுகிறார். அந்த மாணவனையும் அவனது தந்தையையும் ஐடிஐக்கு அழைத்துச் சென்று நண்பரைச் சந்தித்தோம். அவர் அங்கு படிப்பதன் சாதகபாதகங்களைப் பற்றிக் கூறி, வளாகத்தைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். அங்கு சேர்ப்பது என்று ஒருமனதாக முடிவு செய்தோம். நண்பரே விண்ணப்பத்தை இணையத்தில் பூர்த்தி செய்தார். அதற்குப் பிறகும் அடிக்கடி விண்ணப்ப நிலவரம் பற்றி மிகுந்த அக்கறையுடன் அழைத்துக் கூறிவந்தார்.கவுன்சலிங் நடக்க ஒரு மாதத்திற்கும்
மேலாகும், அவனுடைய மதிப்பெண்களுக்கு இடம் கிடைப்பது சற்றே சந்தேகம் என்பதால், தற்காலிகமாகப் பள்ளியில் சேர்ந்து கொண்டான்.
நேற்றைக்கு கவுன்சலிங். சென்ற வாரம் முழுவதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இடம் கிடைக்குமோ கிடைக்காதோ, அவன் ஆர்வத்தை எப்படி மட்டுப்படுத்துவது என்று சிந்தித்த வண்ணம் இருந்தோம். வெள்ளிக்கிழைமை கோவைக்கு வந்துவிட்டோம். ஞாயிறு அன்று கைபேசியில் அவன் தந்தையோடு பேசினோம். ஒரு திருவிழாவிற்குப் போக வேண்டியிருக்கிறது, அவன் தனியாகத்தான் வருவான் நீங்களே அழைத்துச்செல்லுங்களேன் என்றார். கொஞ்சம் அதிர்ச்சியடைந்த என் மனைவி, ‘இல்லை, நீங்களும் வாங்க – என்ன கோர்ஸ் கிடைக்கும் என்பதெல்லாம் பார்த்து நிறைய முடிவெடுக்கவேண்டியிருக்கும்’ என்று நிர்ப்பந்தித்தாள். அவர் சரி என்றிருந்தார். ‘கண்டிப்பா முதல் பஸ் பிடிச்சுடுங்க. வர்றதுக்கு எப்படியும் மூணு மணிநேரம் ஆயிடும்.’
நேற்று காலை, கதர் சட்டை அணிந்து கொண்டு கிளம்பினேன். ஐடிஐ செல்லப் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வழியில், அவர்கள் வந்துவிட்டார்களா என்று உறுதிசெய்துகொள்ள அவன் தந்தையை அழைத்தேன். ‘நானே பேசணும்னு இருந்தங்க. போன்ல காசில்லை. பிரக்காசுக்கு இன்னிக்கு ஸ்கூல்ல ஃபுட்பால் மேட்ச் இருக்குன்னு கட்டாயம் வரணும்னாங்க. நேத்து மேட்ச்ல ஜெயிச்சு பைனல்ஸ் வந்துட்டாங்க. அவன் கிணத்துக்கடவு கிட்ட எங்கயோ விளையாடப் போயிட்டான்.’
வீட்டிற்கு வந்து கதர் சட்டையைக் கழட்டி வைத்துவிட்டு, பியூஷ் மனுஷுக்கான இணையப் போராட்டத்தில் முழுமூச்சுடன் பதிவிட ஆரம்பித்தேன்.