முகநூலில் இருந்து ஒரு பழைய பதிவு:
அன்றிரவு கிராமத்திலிருந்து பொள்ளாச்சிக்குச் செல்லும் பேருந்தில் ஏறும்போதே பழைய எம்.ஜி.ஆர். பாடலொன்று வரவேற்றது. சற்றே வயதானவர், நின்றபடி உணர்ச்சி ததும்பப் பாடிக்கொண்டிருந்தார். பேருந்தின் நகர்வைவிட அவர் அருந்திய திரவம் அவரை அதிகம் தள்ளாட வைத்துக்கொண்டிருந்தது. சுருதிகூடவில்லையெனினும் மெட்டில் குறையில்லை. உச்சரிப்பில் நல்ல தெளிவு.
பின்புறம் கடப்பாரையுடன் அமர்ந்திருந்த பயணி, மஞ்சள் நிற வொயர் கூடையுடன் இருந்த சகபயணியிடம் சிலாகித்துக்கொண்டிருந்தார்.
‘இவரைக் கிண்டல் பண்ணக்கூடாதுங்க. அவருடைய வாழ்கை அனுபவம் தான் அவரைப் பாட வைக்குது.’
ஆர்வமாய்த் திரும்பிப் பார்த்த என்னிடம் மேலும் சொன்னார், ‘எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்த ஜனங்க. இப்ப விடுதலைக்கப்புறம் இந்த அளவுக்குப் பாடறார்னா அப்ப எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பாங்க பாருங்க.’
‘இவரைக் கிண்டல் பண்ணக்கூடாதுங்க. அவருடைய வாழ்கை அனுபவம் தான் அவரைப் பாட வைக்குது.’
ஆர்வமாய்த் திரும்பிப் பார்த்த என்னிடம் மேலும் சொன்னார், ‘எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்த ஜனங்க. இப்ப விடுதலைக்கப்புறம் இந்த அளவுக்குப் பாடறார்னா அப்ப எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பாங்க பாருங்க.’
எந்த விடுதலையைச் சொல்கிறார்? ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றதையா? பாடுபவர் வயதானவர்தான்…ஆனாலும் அந்த விடுதலையைச் சொல்கிற மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை சாதி விடுதலை குறித்துப் பேசுகிறாரோ?
பாடியவருக்குப் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டது. நடத்துனர் பத்திரமாக இறக்கிவிட்டார். இரவு நேரங்களில் நடத்துனர் பாடு படு திண்டாட்டம்தான் – மற்றவர் உயிரையும் தமது உயிரையும் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு செயல்படவேண்டும்.
சகபயணி பதிலளித்துக்கொண்டிருந்தார், ‘அவர் பார்த்த மொதல் படம் எதுன்னு கேட்டேன். மதுரை வீரன்னு சொன்னார். அதனாலதான் இப்படிப் பாடறார். என்னமாப் பாடறார்.’
‘நான் படிக்கும்போது பள்ளிக்கூடத்தில பெஞ்சிலதான் உட்கார வைச்சாங்க.’
‘அடப் போப்பா, நான் படிக்கும்போது பெஞ்சே கிடையாது,’ என்று வொயர் கூடைக்காரர் சொல்ல, உரையாடல் தொடர்ந்தது.
கூர்ந்து கவனித்து, கூட்டிக் கழித்துப் பார்த்ததில் விடுதலையின் அர்த்தம் புரிந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த தினமாம்.