இரா. முருகவேளின் முகிலினி – நதியின் வழியில் ஒரு சமூகப் பயணம்

நாவல் அனுபவம் என்கிறார்கள். முகிலினி எனக்குப் பல முதல் அனுபவங்களை அளித்த ஒரு நாவல். முகிலினியின் புத்தக ஆக்கத்தில் (அறிந்தும் அறியாமலும்) மிகச்சிறு பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருந்தது. முன்னுரையில் என்னையும் என் மனைவியையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது மிகவும் நெகிழ்ச்சியாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தியாகு நூலகத்து நண்பர்களும், எங்கள் கிராமத்தில் நாங்கள் நடத்தும் பயிலகத்தின் மாணவர்களும் சூழ, முகிலினி நூல் வெளியீட்டு விழா எங்கள் தோட்டத்தில் நடந்தது விழாக்காலக் களிப்பினை அளித்தது. இங்கேயே பிறந்து வளர்ந்தும், நானறிந்திராத கோயமுத்தூரை இந்நாவல் எனக்கு அறிமுகம் செய்தது வெட்கத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

கோவை தியாகு நூலகத்தில் அறிமுகமாகி, மிளிர் கல் மூலமாக அறிந்து, ஒரு சில சந்திப்புகளில் மிக நெருக்கமான நண்பராக இரா.முருவேளை உணர்ந்து கொண்டேன். நூலகத்தில் சனிக்கிழமை சங்கமங்களின் போதும், விஷ்ணுபுரம் விழாவின் போதும் சுற்றிலும் உள்ள அனேகரும் அவருக்கு முரணான கருத்துகளை அடித்துப் பேசும்போது, புன்சிரிப்பு மாறாமல் அனைவரையும் தனியொருவராய் அவர் எதிர்கொண்ட விதம் அவர்மீது ஒரு தனியான மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. விவசாயப் பின்னணியில் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னதும், எங்கள் தோட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அடுத்த வாரமே வந்திருந்தார். பல விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினோம். மார்க்சியப் பார்வையில் அவரும் காந்தியப் பார்வையில் நானும் வெகுசில முரண்களையும் பெரும்பாலும் ஒத்த நோக்கும் கொண்டிருந்ததாகவே உணர்ந்தேன். இயற்கை வேளாண்மை என்பது ஆரோக்கியமான உணவு சார்ந்ததாகவோ, தொழில்நுட்பமாகவோ மட்டும் குறுகிவிடக்கூடாது, ஒரு சமூக மாற்றத்துக்கான அடித்தளமாக அமையவேண்டும் என்கிற புள்ளியில்தான் நாங்கள் சந்தித்தோம் என்று நினைக்கிறேன். இந்த அம்சத்தை மிக அழகாக நாவலின் பிற்பகுதியில் வளர்த்து எடுத்திருக்கிறார். ஒரு சிறு புள்ளி, ஒரு தேர்ந்த படைப்பாளியின் கைகளில் எப்படி ஒரு அழகான சிற்பமாக மாறுகிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது ஒரு பேரனுபவம் தான்.

DSC_2932
முகிலினி ‘உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு’ என்று முருகவேள் முன்னுரையிலேயே இந்நாவலை அடையாளப்படுத்துகிறார். அதிலும் அண்மைக்கால வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலில், புனைவு எது, உண்மை எது என்கிற குறுகுறுப்பு வாசகனுக்கு இருந்துகொண்டே இருக்கும். புனைவு மிகுந்தால் நம்பகத்தன்மை சிதைந்துவிடும்; வரலாறு மிகுந்தால் வாசிப்பின்பம் குறைந்துவிடக்கூடும். இரண்டும் நேர்ந்துவிடாமல், 487 பக்கங்கள் பெரும்பாலும் விறுவிறுப்பாக நகர்கின்றன.

ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பல இழைகள் நாவலில் வருகின்றன. டெக்கான் ரேயான் (விஸ்கோஸ்) ஆலையின் வரலாறு, கோவையின் தொழிற்சங்க வரலாறு, இந்தி எதிர்ப்பு, திராவிட இயக்கம், சாதியச் சிக்கல்கள், சுற்றுச்சூழல் போராட்டங்கள், நவீன இயற்கை விவசாயத்தின் தோற்றம், ஓர் இளம் வழக்குரைஞனின் வாழ்க்கை, பழங்குடியினர் பிரச்சனைகள் என்று பல்வேறு திரிகள்; இவையனைத்தும் கோவை மாவட்டத்தின் அறுபது ஆண்டுகால மாற்றத்தைச் சித்தரிப்பனவாகவும் அமைந்துவிடுகின்றன; ஒருவகையில் மனித வரலாற்றின் ஒரு காலகட்டத்தை விவரிப்பதாகவும் கொள்ளலாம்; நம் காலத்தின் முக்கியமான பொருளாதார, சுற்றுச்சூழல் சித்தாந்தங்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், மோதல்களையும் முரண்களையும் சமரசங்களையும் காட்சிப்படுத்தும் படைப்பாகவும் முகிலினியைப் பார்க்கலாம். எல்லாத் திரிகளையும் இணைத்து நொய்யல் நதியும், முகிலினி என்ற செல்லப்பெயருடன் பவானியும் நாவல் முழுவதும் ஓடுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டைக் கண்டுவிட்ட என் தாத்தா மரணமடைவதற்குச் சில மாதங்கள் முன்னால் நொய்யல் நதிபற்றி என்னோடு நீண்ட நேரம் பேசினார். நொய்யலிருந்து குறிச்சிக் குளத்திற்கு (அது ஒரு தாசியால் நிர்மாணிக்கப்பட்டதால், தாசி குளம் என்று அறியப்பட்டது என்றார்) நீர் பாயும் வழித்தடத்தில் தான் அவரது வயல் இருந்தது. நெல் பயிரிட்டிருக்கிறார். நொய்யல் நதிமீது 32 சிறு அணைகள்  இருந்ததாகச் சொன்னார். இருட்டில் கைக்குக் கிடைத்த குமுதத்தையோ விகடனையோ எழுத்துக்கூட்டி உரக்கப் படிப்பார். நிறையப் படித்துவிட்டதாய் நினைத்திருந்த எனக்கு நொய்யல் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. என் தாத்தா பெயரும் ராஜு. நொய்யலை நேசித்த முகிலினியின் ராஜு என் தாத்தாவின் அடுத்த தலைமுறைதானெனினும், அவர்களது நொய்யல் அனுபவங்கள் ஓரளவு ஒரே மாதிரி இருந்திருக்கக்கூடும். என் அப்பாவும், தன் ஒரே பள்ளிச்சீருடையைத் துவைத்துக்கொண்டிருந்தபோது, நொய்யலின் ஓர் அணைமீதிருந்து விழுந்து காவிரியில் கலந்திருக்கவேண்டியவர்தான்; எப்படியோ பிழைத்துக்கொண்டார். முருகவேளின் நொய்யல் பழைய குடும்ப நினைவுகளைக் கிளறிக்கொண்டே இருந்தது.

இன்றைக்குப் பெரும் சிதைவை உருவாக்கும் பல தொழில்நுட்பங்களை, விடுதலைக்குப் பின்னான ஆரம்ப கட்டத்தில் அறிமுகப்படுத்தியவர்களை மிக எளிதில் கொடியவர்களாய், சதிகாரர்களாய்ச் சித்தரித்துவிடும் அபாயம் உள்ளது. பலரும் இன்று அதைச் செய்து கொண்டும் இருக்கிறோம். ஆனால், கஸ்தூரிசாமியையும், சௌந்திரராஜனையும், சௌதாமினியையும் முருகவேள் கருப்பு வெள்ளையில் காட்டிவிடவில்லை. தொழிற்சங்கப் போராளியான ஆரானைப் படைத்துள்ள அதே அக்கறையோடும் கவனத்தோடும் கரிசனத்தோடும்தான் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளான இவர்களையும் படைத்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில், உலகம் முழுவதும் நவீனத் தொழில்நுட்பத்தின் மீது ஒரு விமர்சனமற்ற ஈர்ப்பு இருந்திருக்கிறது. இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இதில் பெரிய மாறுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. வளரும் மக்கள் தொகையையும், அதைவிட வேகமாக வளர்ந்துவந்த மக்களின் தேவைகளையும் நிறைவு செய்ய அதி நவீன தொழில்நுட்பத்தாலும் விஞ்ஞானத்தின் பாய்ச்சலாலும் சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை அன்றைய தலைமுறைக்கு முழுமையாக இருந்திருக்கிறது. நேருவும் காமராஜரும் திராவிட இயக்கங்களும் அன்றைய இடதுசாரிகளும் முதலாளிகளும் முகிலினியில் இந்த நம்பிக்கையைப் பிரிதிபலிக்கும் வகையில் வருகின்றனர். அதற்கு எதிர்க்குரல் காந்தியிடமிருந்தும் குமரப்பாவிடமிருந்தும் கிளம்பின. தாகூருடையது அவர்களது கருத்தை ஒட்டியும் வெட்டியும்  ஒலித்த இன்னொரு மாற்றுக்குரல் (முருகவேள் தாகூருக்கும் காந்திக்குமிடையில்  அடிப்படையான வேறுபாடுகள் இருந்ததாக நினைக்கிறார். நான் அடிப்படையான ஒற்றுமைகளும் வழிமுறைகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க முரண்களும் இருந்ததாகவே நோக்குகிறேன்). இந்த மாற்றுக்குரல்களின் மெல்லிய எதிரொலியையும் முகிலினியில் கேட்கலாம். வரைமுறையற்ற தொழில் வளர்ச்சியின் போதாமைகளுக்கும் பெரு நிறுவனப் பேராசைகளுக்கும் எதிரான வலுவான குரலை எழுப்புகிறது இயற்கை – மாசுபட்ட முகிலினியின் சீற்றமாய்.

இத்தகைய தொழில் வளர்ச்சிக்கு எதிராகவும் மாற்றாகவும் எழும் சுற்றுச்சூழல் போராட்டங்கள், இயற்கை வேளாண்மை சார்ந்த தனிநபர் முயற்சிகள், பிற மாற்றுகளுக்கான தேடல் என்று சித்தாந்தங்களைத் தாண்டிய அடுத்த கட்டத்திற்கு இளம் வழக்குரைஞர் கௌதம் வாயிலாக முகிலினி பயணிக்கிறது. அமெரிக்காவிலிருந்து திரும்புகிற இரு இளைஞர்கள் மூலமாய் மேலும் இரு எதிர்நிலைகளை முருகவேள் படைக்கிறார். டெக்கான் ரேயானைத் தோற்றுவித்த அதே குடும்பத்தைச் சார்ந்த ராஜ்குமார் சுற்றுச்சூழல் மீதான அக்கறையை வியாபார லாபத்திற்குப் பயன்படுத்துகிறான். துணையாக நாமறிந்த பல கார்ப்பரேட் சாமியார்களின் சாயலில் ஆஸ்மான் ஸ்வாமிகள். அதே வேளையில் உண்மையான தேடலில் தன் வாழ்வையே சோதனைக்கூடமாக்கிக் கொள்கிற திருநாவுக்கரசு. இயற்கை வேளாண்மையின் நோக்கங்களும் கிராமப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அதன் இடமும் அதன் போதாமைகள் குறித்த ஐயங்களும் பல விவாதங்கள் மூலமாக வலுவாக வெளிப்படுகின்றன.

இடையில் ஜான் க்ரிஷாம் நாவல்களின் விறுவிறுப்போடு ஒரு தனித் திரி நாவலில் பிரிகிறது. மூடப்பட்ட ஆலையில் கொள்ளை, வாகனங்களின் துரத்தல் காட்சி, நீதி மன்ற விவாதங்கள் என்று திடீரென்று வேறொரு தளத்திற்கு திசைமாறுவது போலிருந்தது. இது அவசியம்தானா என்கிற கேள்வியும் எழாமலில்லை. ஆனால், இந்தத் திரியையும் நாவலின் மையமான தேடலோடு அழகாக இணைத்து விடுகிறார் முருகவேள். தொழில் வளர்ச்சியால் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் எதற்கு நகர்கிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள் என்பதன் தேடல் இந்த வழக்கின் மூலமாக நிகழ்கிறது.   ‘ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டு அவர்கள் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று குற்றமும் சாட்டுவது நியாயமானது அல்ல. இந்த அணை கட்ட உழைத்தவர்கில் இவர்களின் முன்னோர்களும் உண்டு. அந்த அணை டெக்கான் ரேயானுக்கும் பயன்பட்டது. அதற்கு நிதியுதவி அளித்த அனைத்து நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இந்த கம்பெனி ஏற்படுத்திய பேரழிவில் பங்குண்டு. அடித்த கொள்ளையிலும் பங்குண்டு. இவர்கள் நஷ்டப்படக்கூடாது என்று அரசு முனைந்து நிற்கிறது. ஆனால் எல்லாவற்றையும் இழந்த இந்த மக்கள் நீதி மன்றத்தில் குற்றவாளிகளாக நிற்கிறார்கள்,’ என்று பல நெருடலான வாதங்களை இந்த வழக்கின் வாயிலாக முன்வைக்கிறார் முருகவேள்.

திருநாவுக்கரசு பாத்திரம் நான் எனது அண்மைக்காலப் பயணங்களில்  சந்தித்த பல உண்மை மனிதர்களை நினைவுபடுத்துகிறது. தேவைகளைக் குறைப்பதும், தற்சார்பை அடைவதுமே ஒரு நிலையான தீர்வுக்கான வழி என்கிற தரப்பின் பிரதிநிதியாய்த் திருநாவுக்கரசு வருகிறான். ‘தமிழகம் முழுவதும் அறிவு ஜீவிகள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்து பரிசோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆயுதப் புரட்சியின்போது செய்யப்படுவதைப் போன்றே இந்த சோதனை முயற்சிகளிலும் தியாகங்கள் செய்யப்படுகின்றன,’ என்கிற சொற்கள் நானறிந்த பலருக்கும் நெருக்கமாகப் பொருந்துகிறது.

டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ், இயற்கைக்குத் திரும்புவோம் போன்ற அமைப்புகளாக டெக்கான் ரேயான் மறு அவதாரம் எடுக்கிறது.

ராஜூவும் ஆரானும் தொடங்கிய தேடலை கௌதமும், திருநாவுக்கரசுவும் தொடர்கிறார்கள்.

நொய்யல் சாக்கடையாகிவிட்டாலும் முகிலினியின் கலகலவென்ற சிரிப்போடு நாவல் முடிகிறது.

மிகுந்த சமூக அக்கறையுடனும் நிறைந்த இலக்கிய நேர்த்தியுடனும் ஒரு சிறப்பான படைப்பினை அளித்துள்ள முருகவேளுக்கு வாழ்த்துகள்.

நூல்: முகிலினி
ஆசிரியர்: இரா.முருகவேள்
பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்

பி.கு.
நாவலின் முன்னுரையில் தோழர் முருகவேள் எங்களைப் பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.
‘இந்நூலை முடிக்கும் தருவாயில் இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபடுபவர்களின் நோக்கம் பற்றிய குழப்பம் ஏறக்குறைய ஒரு பெரிய மனத்தடையை ஏற்படுத்திவிட்டது. அந்த நேரத்தில் நண்பர் வெ.சுரேஷ் மூலம் அறிமுகமான நண்பர் கண்ணன், நித்யா ஆகியோருடனான உரையாடல் நல்ல புரிதலை வழங்கியது. கண்ணன் வழங்கிய அறிவார்ந்த, கூர்மையான, அதேநேரம் சுருக்கமான கருத்துகள் இல்லையென்றால் நான் மேலும் பலபக்கங்கள் எழுதி வாசகரின் மதிப்பிற்குரிய நேரத்தை வீணடித்திருக்கக்கூடும்.’

இவ்வளவு பெருந்தன்மையுடன் அவர் இப்படி எழுதியிருக்காவிட்டாலும், இதே மாதிரியான ஓர் உணர்வைத்தான் முகிலினி எனக்கு அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.

3 Responses to இரா. முருகவேளின் முகிலினி – நதியின் வழியில் ஒரு சமூகப் பயணம்

  1. Manojkumar சொல்கிறார்:

    முகிலினி வாசித்து இருக்கிறேன். உங்களின் கட்டுரை அருமையாக இருக்கிறது. முருகவேள் அய்யா பற்றி ஒரு bio data உடன் கூடிய அறிமுகம் தேவைப்படுகிறது. கிடைக்குமா அய்யா?
    அவரது நூல்களில் ஆய்வு செய்து வருகிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக