வெ. சுரேஷ், தியாகு, அன்பழகன், புஷ்யமித்திரன், செந்தில்குமார், நித்யா ஆகியோருடன் எழுத்தாளர் சு.வேணுகோபாலிடம் பதாகை இணைய இதழுக்காகச் சென்ற ஆண்டு எடுத்த பேட்டி.
சு.வேணுகோபால் – இருபது ஆண்டுகளாகப் பல காத்திரமான இலக்கிய ஆக்கங்களைப் படைத்து வருபவர். குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற தனது முதல் நாவலான ‘நுண்வெளி கிரகணங்கள்’ மூலமாக இலக்கிய உலகில் அறிமுகமான போதும், இன்னமும், தீவிர இலக்கியங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களின் சிறிய வட்டத்துக்குள் மட்டுமே பெரிதும் சிலாகிக்கப்படுபவராக இருக்கிறார். வேணுகோபால் விவசாயப் பின்னணியில் நிறையப் புனைவுகள் எழுதியுள்ளார் என்பதை மட்டுமே அவரைப் படித்துள்ள வாசகர்கள் அறிவார்கள். ஆனால் வேணுகோபால் யார், அவரது பின்னணி என்ன, அவரது ரசனை எத்தகையது, அவரது இலக்கியப் பார்வை என்ன, பயணம் எத்தகையது, அவரது ஆதர்சங்கள் யார் என்பது குறித்து அறிந்தவர்கள் மிகச் சிலரே. இணைய உலகுக்கு அவரது அறிமுகம் முற்றிலுமாகக் கிடையாது என்றே சொல்லலாம்; இணைய உலகின் அறிமுகம் அவருக்கும் கிடையாது. அவரை இணைய இலக்கிய வாசகர்களுக்கு விரிவான முறையில் அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த நேர்காணலை எடுத்தோம். நம்மிடையே உள்ள ஒரு முக்கியமான படைப்பாளி, சு.வேணுகோபால் அளிக்கும் முதல் விரிவான நேர்காணல் இதுதான் என்பது எங்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது; அதேவேளை,இந்த முதல் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாகவும் இருந்தது.
வேணுகோபால் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று பல இலக்கிய வகைமைகளை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’, ‘களவு போகும் புரவிகள்’, ‘வெண்ணிலை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், பால்கனிகள், கூந்தப்பனை, திசையெல்லாம் நெருஞ்சி ஆகிய குறுநாவல் தொகுப்புகளும், நுண்வெளி கிரகணங்கள், நிலமென்னும் நல்லாள், ஆட்டம் ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன. அவரது எழுத்து உக்கிரமாகவும் இருக்கும்; மென்மையாகவும் இருக்கும். அப்பட்டமாய் முகத்திலும் அறையும்; கூர்ந்து கவனித்தால் மட்டுமே புலப்படும் நுட்பங்களோடும் இருக்கும். கிராமிய வாழ்க்கையின் அவலங்களையும் அழகுகளையும் ஆழங்களையும், நகரத்துக்குப் பெயர்ந்துவிட்டவர்களின் போக்குகளையும் பல்வேறு தளங்களில் அவர் எழுதியுள்ளார்.
இந்த நேர்காணலை நடத்திய நண்பர்களான வெ. சுரேஷ், தியாகு, அன்பழகன், புஷ்யமித்திரன், செந்தில்குமார், நித்யா, கண்ணன் ஆகியோர் கொண்ட எங்கள் குழுவுக்கு வேணுகோபால் ஏற்கனவே மிகவும் பரிச்சயமானவர்தான். கோவையில் உள்ள தியாகு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் நிகழும் இலக்கிய உரையாடல்களில் அடிக்கடி எங்களோடு வேணுகோபாலும் இணைந்துகொள்வார். ஒரு படைப்பாளியாக அவரை நாங்கள் நேசிக்கும் அளவுக்கு, ஒரு நண்பராக ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் நேசத்தோடும் மிகந்த அக்கறையோடும் நடந்துகொள்பவர் அவர்.
அத்தகைய ஒரு நண்பரோடு, அதே தியாகு நூலகத்தில் ஒரு விரிவான நேர்காணலை நிகழ்த்த முடிந்தது அனைவருக்கும் இனிமையான அனுபவம். ஐந்து மணிநேரம் தொடர்ந்து நிகழ்ந்த இந்த உரையாடலின் பெரும் பகுதியைப் பதிவு செய்துள்ளோம். வேணுகோபால் சுவாரசியமான பேச்சுக்காரர். செந்தமிழும், போடி வட்டாரத்து கிராமியப் பேச்சுவழக்கும், நகரத்துப் பாதிப்பும் மாறிமாறி இயல்பாக அவரது பேச்சில் வெளிப்படும். ஏற்ற இறக்கங்களுடன், உணர்ச்சிப் பரவசத்துடன், அவ்வப்போது நாடகீய பாவனைகளுடன் பேசக்கூடியவர். அவரது பேச்சின் சுவையை எழுத்தில் முழுமையாய்க் கொண்டுவருவது சிரமமானதுதான். இலக்கியத்தின் மீது, குறிப்பாய் தி.ஜானகிராமன் மீது, பெரும் காதல் கொண்டுள்ளவர் என்பதை நாங்கள் அறிவோம். அதைவிட ஆழமாய்த் தன் மண்மீதும் மனிதர்கள்மீதும் அளப்பிலாப் பேரன்பு கொண்டவர் என்பதும் அறிவோம். அவரது ஊரும் நிலமும் அவர் எங்கிருந்தாலும் அவருள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நிலமென்னும் நல்லாள் நாவலுக்கு அவர் முதலில் வைக்க விரும்பிய தலைப்பு, ‘நிலம் சுமந்தலைபவன்’ என்பதையும் அறிவோம். அவரும் அவர் சுமந்துகொண்டு இருக்கும் நிலமும், இலக்கியக் கனவுகளும் பார்வையும் இந்த நேர்காணலில் வெளிப்படும் என்று நம்புகிறோம்.
இனி நேர்காணல்.