சர்வோதய தின நிகழ்வுகள் – சில நினைவுகள்

சர்வோதயம் மலர்கிறது மார்ச் 2016 இதழில் வெளிவந்த கட்டுரை.


 

சர்வோதய இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் பங்காற்றி, உயிர்ப்புடன் வழிநடத்திய ஜெகந்நாதன் அவர்களை நினைவுகூரும் கருத்தரங்கம் ஒரு மாறுபட்ட முயற்சியாக ஆண்டுதோறும் (பிப்ரவரி 10,11,12 தேதிகளில்) மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது. ஜெகந்நாதன் என்கிற ஒரு தனிநபரைப் பற்றிய அஞ்சலிகளாகவும், பலராலும் மதிக்கப்படுகிற ஒரு தலைவரைப் பற்றிய புகழுரைகளாகவும் மட்டும் குறுக்கிவிடாமல், அவர் விரும்பிய சமூக மாற்றத்திற்கான ஒரு தேடலாக இந்த மூன்று தினங்கள் அமைந்துவிடுகின்றன. இவ்வாண்டு கல்வி, மருத்துவம் ஆகியவை குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றன. துறை வல்லுனர்களும், இளம் மாணவர்களும் ஒன்றிணைந்து சிந்தித்து, கருத்துகளைப் பரிமாறி, செயலூக்கம் பெற்றுச் செல்வதற்கான ஒரு களமாக இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது.

முதல் நாளன்று, மருத்துவர் பூமிக்குமார் வரவேற்புரையாற்ற, க.மு.நடராஜன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.   ஜகந்நாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆசிரியராக இருந்தபோது ஜகந்நாதன் தனது கைக்கடிகாரத்தை மகாத்மா காந்தியிடம் ஹிரிஜன் சேவை நிதிக்காக நேரடியாக அளித்ததைப் பற்றிப் பேசினார். மு.அருணாசலம் போன்ற பல சர்வோதயத் தலைவர்கள் அவரது மாணவர்களாக இருந்து உருவானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஜகந்நாதன் ஜவ்வாது மலையில் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவித்ததையும் நினைவுகூர்ந்தார்.

அடுத்து பேசிய காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முனைவர் பங்கஜம், பள்ளிமுதல் பட்டப்படிப்புவரை ஆதாரக்கல்வி முறையில் தான் பயின்றதாகக் கூறினார். எதிர்காலக் கல்வித்திட்டம் மாணவர்களிடமிருந்து வரவேண்டும் என்றார். எல்லாருக்குமான கல்வி மறுக்கப்படுவது, தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்காதது, ஊரகப் பகுதிகளில் அதிக மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிவிடுவது, கற்றவர்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பது, திறன்மிக்கவர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது, ஆசிரியர்களின் தரத்தில் வீழ்ச்சி என்று இன்றைய கல்வித்துறை எதிர்நோக்கும் சவால்களைப் பட்டியலிட்டார்.  ஆதாரக் கல்வி முறை காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் வளர்க்கப்பட வேண்டும்; ஆய்வுகள் பட்டங்களும் பதவியுயர்வும் பெறுவதற்காகவன்றி, செயல்படுத்தப்படக்கூடிய தீர்வுகளை நோக்கியனவாக இருக்க வேண்டும்; தில்லியிருந்து பாடத்திட்டம் வகுக்கப்படாமல், கிராமங்களின் தனித்தன்மைக்கேற்ப உள்ளூரில் வடிவமைக்கப்படவேண்டும்; இளவயதிலேயே திறமைகளை அடையாளம் காணவேண்டும்; ஆரம்பக்கல்விக்கும் முன்பிருந்தே குழந்தைகளும் அதிக அறிவூட்டம் அளிக்கவேண்டும்; மாணவர்கள் தேர்வு செய்யப் பல்வேறு மாற்றுகளை வழங்கவேண்டும்; நீடிக்கத்தக்க வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும் என்று மேலும் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்து பேசிய ஜெனிஃபர் லேட், அமெரிக்காவில் ‘Class Action’ என்ற அமைப்பை நடத்தி வருபவர்.  பொருளாதார மாற்றங்களும், பருவநிலை மாற்றங்களும் நிகழ்ந்துவரும் சூழலில் உறுதியான சமூகக்கட்டமைப்பினை உருவாக்குவது எப்படி என்கிற கேள்வியை எழுப்பி அதனுள் கல்வியின் பங்கினைப் பற்றிப் பேசினார். கல்வியின் அடித்தளம் என்று ஆறு அம்சங்களை அடையாளப்படுத்தினார்: ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஒளி உள்ளது – கல்வியின் நோக்கம் அந்த ஒளியை வெளிக்கொணர்வது; சூழலுக்கேற்ப, காலத்திற்கேற்ப மாறும் தன்மை; குடும்பம், சமூகம், சரித்திரம் ஆகியவற்றை கணக்கில் கொள்ளும் அமைப்பு சார்ந்த சிந்தனை; பெருமாற்றம் விளைவிக்கும் வழிகளைக் கண்டடைதல்; நீடிக்கும்திறன் மீதான கவனம் – ஏழு தலைமுறைகளின் மீதான பாதிப்பினை மனதில் வைத்து முடிவெடுத்தல்; துணிவு. அதைத் தொடர்ந்து, ஜெனிஃபர் என்னோடும் என் மனைவி நித்யாவோடும் ஓர் உரையாடலை நிகழ்த்தியது இனிய அனுபவமாக அமைந்தது. பெருநிறுவன வாழ்விலிருந்து விலகி கிராமத்திற்கு இடம்பெயர்ந்து விவசாயத்தையும் கிராமக் குழந்தைகளுக்கு கற்பித்தலையும் மேற்கொண்டிருப்பதையும், எங்கள் மகள் வீட்டிலேயே கற்றுக்கொள்வதையும் கவனப்படுத்தினார்.

பின்னர் குழுமியிருந்த அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிந்து, கல்வி குறித்து உரையாடி, தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். குழுவிவாதங்களின் சாரமாகப் பின்வரும் கருத்துகள் அமைந்தன:

கல்வி சார்ந்து திட்டமிடுதல் பன்முகப்படுத்தப்படவேண்டும். உள்ளூர் தேவைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப அமைய வேண்டும்.
ஆதாரக் கல்வியின் அடிப்படையில் கைத்தொழில் மூலமாகப் பல செய்திகள் கற்றுத்தரப்பட வேண்டும்.
அறம் குறித்தும் விழுமியங்கள் குறித்தும் கவனத்தை ஏற்படுத்தவேண்டும்.
மாணவர்களின் திறன்கள் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே அளவிடப்படக்கூடாது.
எல்லாருக்கும் தரமான கல்விக்கான சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.
தாய்மொழி பயிற்று மொழியாக அமையவேண்டும்.
ஆசிரியர்கள் பயிற்சியிலும் மதிப்பிடலிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும்.
அச்சமின்றி எல்லாரும் கற்கும் நிலை உருவாகவேண்டும்.

இரண்டாம் நாளுக்கான கருப்பொருளாக மருத்துவம் அமைய, நிகழ்ச்சிகளை டாக்டர்.சத்யா ஒருங்கிணைத்தார். அரவிந்த் கண்மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரான கண்மருத்துவர். நாச்சியார் தன் நிறுவனத்தின் சமூகப்பயணம் குறித்து உரையாற்றினார். உலகில் 39 மில்லியன் மக்களும் இந்தியாவில் 12 மில்லியன் மக்களும் கண்பார்வை இழந்துள்ளதாகவும், 80 விழுக்காடு பார்வைக் குறைபாடுகளை மருத்துவம் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்றார். அரவிந்த் மருத்துவமனை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 56 ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமாக மக்களை நேரடியாகச் சென்றடைவதாகக் கூறினார். நகரங்களிலுள்ள பெருமருத்துவமனைகளைவிட கிராம மையங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை; அவற்றில் உள்ளூர் மக்களுக்கே பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும் என்றார். இலவச மருத்துவம் அளித்தாலும் நோயுற்றவர்களுக்கு அது இலவசமாக இருப்பதில்லை; அந்த உதவியைப் பெற அவர்கள் குறிப்பிடத்தக்க விலையை அவர்கள் வழங்க வேண்டியிருக்கிறது என்று அவர் கூறியது முக்கியமான திறப்பாக எனக்கு அமைந்தது.

மனநல மருத்துவரும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனருமான ராமசுப்பிரமணியன் சமூக மனநல மருத்துவத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இன்றைய சமூகம் மனநிலைக் குறைபாடுகளை ஒரு சாபமாகக் கருதுகிறது; தனிநபர்கள் மட்டுமல்லாமல் குடும்பம் முழுவதும் பாதிக்கப்படுகிறது என்றார். அறியாமையாலும், பயத்தாலும், அதிக கட்டணத்தாலும் மனநல மருத்துவர்களைப் பெரும்பாலானவர்கள் அணுகவதில்லை; ஆனால் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் எல்லா மனநோய்களும் குணப்படுத்தகூடியவையே என்றார். அவரது அறக்கட்டளை வாயிலாக முசுண்டகிரிப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு மனநல மருத்துவமனை தொடங்கியதன் பின்னணியைப் பகிர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் கிராம மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை; ஆனால் அதே கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் குணப்படுத்தி, அவரையே பணியில் அமர்த்தியபிறகு கிராம மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்றார். ஏர்வாடி தீவிபத்துக்குப் பிறகு, அங்கு இருந்த மத நிறுவனங்களோடு இணைந்து, அவர்கள் மூலமாகவே மனநல மருத்துவர்களிடம் நோயாளிகளை அனுப்பும்படியான ஒரு ஏற்பாட்டினைச் செய்ததாகக் கூறினார். சமூக மாற்றங்களுக்கான நடவடிக்கைகளின் போது, மத நம்பிக்கைகளோடு முரண் ஏற்படும்போது கையாள்வதற்குச் சிறந்த வழியாக இது தெரிந்தது.

நார்வே நாட்டில் ஸ்டாவெங்கர் பல்கலைக்கழக மருத்துவமனையின் பல்பண்பாட்டு மையத்தில் மனநல மருத்துவராக உள்ள ஜோனே சான்சே ஓல்சன் (Jone Schanche Olsen), போரில் பாதிக்கப்பட்டவர்களோடும் அகதிகளோடும் பணிசெய்ததில் கிடைத்த அனுபவங்களைப் பதிவுசெய்தார். எரித்ரியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலிருந்து நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆண்டுகளாக அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது சிரியாவிலிருந்தும் அகதிகள் பெருமளவில் வரத்தொடங்கியுள்ளனர். பல நாடுகளைத் தரை வழியாகவும், நீர் மார்க்கமாகவும் இவர்கள் கடந்து வரவேண்டியுள்ளது. இவர்களில் பலரும் சிறுவர்கள்; பதின்பருவத்தினர். பல கோர சம்பவங்களைக் கண்டதாலும், பாலியல் ரீதியான துன்பங்களை அனுபவித்ததாலும் இவர்களது மனநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இவர்களோடு பணி செய்ய செவிலியர்க்கும், சமூகப் பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. குழு சிகிச்சை வழங்கப்படுகிறது.

டேவிட் ஆல்பர்ட் இந்தியாவிற்கு நாற்பது ஆண்டு காலமாக வந்துகொண்டிருப்பவர்; ஜகந்நாதன்- கிருஷ்ணம்மாள் தம்பதியினரோடு நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பிலிருப்பவர்; இல்லக்கல்வி (Homeschooling) குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். Friendly Water for the World என்கிற நிறுவனத்தின் மூலமாக ஆப்ரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். கல்விக்கும் சுகாதாரத்துக்கும் குடிநீருக்குமான தொடர்பினைக் குறித்துப் பேசினார். இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட நீரின் தரம் குறைந்துவிட்டது. நிலத்தடி நீர்நிலை தாழ்ந்துவிட்டது. 48 விழுக்காடு குழந்தைகள் பிறப்பின்போது ஊட்டச்சத்துக்குறைவால் வளர்ச்சி குன்றிப் பிறக்கின்றனர். குழந்தைகள் நீரினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவிலும்கூட கறுப்பினக் குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இந்தியா அளவிற்கே உள்ளது. அவர்களிடம் இறப்புவீதமும் இந்தியாவின் அளவிலேயே உள்ளது. நீர் சுத்திகரிப்பு, நீர் மேலாண்மை குறித்த அறிவினை நமது கல்வி நிறுவனங்கள் வழங்கத் தவறிவிட்டன. ஒவ்வொரு ஆசிரியரும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்; ஒவ்வொரு குழந்தைக்கும் சுத்தமான நீர் குறித்தும் கைகளைச் சுத்தம் செய்வது குறித்தும் கற்றுத்தர வேண்டும். காந்தி கழிப்பறைகள் தொடர்பாகச் செய்த சோதனைகள் அனைத்தும் சத்திய சோதனைகள். ஊழலும், சுகாதாரமற்ற நிலையை ஏற்றுக்கொள்வதும் மனநலக் குறைபாடுகளே என்று பல விஷயங்களைத் தொட்டுப் பேசிய டேவிட், அவற்றையெல்லாம் நீருடனான தொடர்பால் இணைத்தார்.

மூன்றாம் நாள் (பிப்ரவரி 12) ஜகந்நாதனின் நினைவுநாள். சர்வோதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. காந்தியப் பணிகளில் ஈடுபட்டுவரும் பல ஊழியர்கள் ஒன்றுகூடும் தினம் இது. கிருஷ்ணம்மாள்-ஜகந்நாதன் பணியாற்றிய நாகப்பட்டினம் பகுதியிலிருந்து பல கிராம மக்களும் வந்து கூடியிருந்தனர். ம.பா.குருசாமி, பாதமுத்து, மார்க்கண்டன், மருத்துவர் ஜீவானந்தம் ஆகியோர் உரையாற்றினர். இனாமுல் ஹசன், ராஜேந்திரன் ஆகியோர் வெள்ள நிவாரணப் பணிகளின் போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர். மருத்துவப் பணியில் நெடுங்காலமாகப் பெருஞ்சேவை செய்துவரும் மருத்துவர் கௌசல்யா தேவி, சர்வோதய இயக்கங்களில் தொடர்ந்து பணியாற்றித் தன் பாடல்கள் மூலம் உணர்வெழுச்சி ஏற்படுத்திவரும் வேங்கையன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. காந்திகிராம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். நடராஜன் மருத்துவர் கௌசல்யா தேவி குறித்தும், க.மு.நடராஜன் வேங்கையன் குறித்தும் பேசினர்.

இந்த மூன்று நாட்களும் மேலும் உத்வேகத்துடன் நாம் மேற்கொண்டுள்ள பணிகளைச் செய்வதற்கும் இன்னும் பல பணிகளை மேற்கொள்வதற்கும் ஊக்கம் தருவனவாக அமைந்தன. மூன்று நாட்களின் முத்தாய்ப்பாக அமைந்த நிகழ்வு, கடைசி நாள் காலை நிகழ்வுகள் முடிவுக்கு வரும் போது நடந்தது. பலரும் பேசிய பிறகு, உணவு வேளையும் நெருங்க, குழுமியிருந்தவர்களின் கவனம் சற்றே குலையத் தொடங்கியிருந்த போது, கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பேச வேண்டிய தருணம் வந்தது. மேடையில் அமர்ந்திருந்த அவர் எழுந்து வேகமாக நடக்கத்தொடங்கினார்; அறையின் நடுவில் நின்று ஒரு சிறு பிரார்த்தனைக்குப் பின் உருக்கமான பேச்சுத் தமிழில் உரையாடத் தொடங்கினார்.  அவர் தட்டிவிட்ட மைக்கை ஒருவர் பிடிவாதமாக நீட்ட வேண்டியிருந்தது.  என்னருகில் மொழிபுரியாதபோதும், மரியாதை நிமித்தம் அத்தனை நேரம் பொறுமையாக அமர்ந்திருந்த அமெரிக்க நண்பர், ‘This is the way to do it,” என்று எழுந்துவிட்டார். கூட்டம் நடந்த அதே இடத்தில், 1948ல் தான் ஒரு விடுதியில் தலைவியாக இருந்து, அங்கிருந்த ஆதரவற்ற பெண்களைச் செவிலியராக்க உதவியதையும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்தபோது கீழவெண்மணிப் படுகொலை பற்றிக் கேள்விப்பட்டவுடன் அங்கு விரைந்து சென்று, அங்கேயே தங்கி நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வாங்கித் தரும் பணியைத் தொடங்கியதையும் நினைவு கூர்ந்தார். “பேப்ர்ல வந்துச்சு – எல்லாருக்கும் பொங்கலுக்கு அரிசி, வெல்லம், ஒரு துண்டு கரும்பு….வக்கத்தா போனீங்க, கழுதைகளா? வக்கத்துப் போனீங்களேடா – பத்து ரூபாய்க்கு அரிசியும், வெல்லமும், கரும்பும் வாங்க. இத்தனை வருஷமா ஆட்சியில இருந்தவங்க, அறுபது ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவங்கெல்லாம் என்ன வேலை செய்தாங்க. மக்களுக்கு நிலம் கொடுத்தானா, வீடு கட்டுனானா, அல்லது எல்லாரையும் படிக்க வைச்சானா, மிஞ்சினதெல்லாம் ‘இவன் தாழ்ந்தவன்’னு பேரு,” என்று முடித்துவிட்டு சட்டென்று திரும்பிவிட்டார். அதுவரை நீடித்திருந்த துல்லியமான அமைதி, சில நொடிகள் திக்கற்று நின்று, பின் கரவொலியில் கலைந்தது. அந்த சில கணங்கள், கூட்டத்துள் மின்சாரம் பாய்ந்த உணர்வு எழுந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: