சர்வோதயம் மலர்கிறது இதழில் வெளிவந்த கட்டுரை.
………………………..
மார்ச் 15, 2015. காந்தியோடு நெருங்கிய நேரடித் தொடர்பில் இருந்தவர்களில், நம்முடன் வாழ்ந்துகொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவரான நாராயண் தேசாய் காலமானார். “காந்தியைக் கண்டிராத ஒரு தலைமுறைக்கு, காந்தி இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை உணரச் செய்தவர்,” என்று ‘காந்தி இன்று’ தளத்தை நடத்தும் நண்பர் சுனில் கிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து வருத்தத்தோடு தெரிவித்தார். என் மனதில் ஓடிக்கொண்டிருந்தவையும் அதே சொற்கள்தாம். இரண்டரையாண்டுகளுக்கு முன்பு, நாராயண் தேசாய், மதுரை காந்தி அருங்காட்சியம் ஒருங்கிணைத்த அவரது ‘காந்தி கதா’ நிகழ்வுக்காக வந்திருந்தபோதுதான் நாங்கள் இருவரும் அவரைச் சந்தித்தோம். அதன் பின் நாராயண் தேசாயோடு தனியே ஒரு நீண்ட நேர்காணலை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அந்த நேர்காணலையும், சுனில் எழுதிய ஒரு கட்டுரையையும், மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை ‘காந்திய காலத்துக்கொரு பாலம்’ என்ற புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டது. நாராயண் தேசாயுடனான அந்தச் சந்திப்புதான் எனக்கு ஒரு புதிய உலகத்துக்கான வாயிலைத் திறந்துவிட்டது; பல காந்திய அன்பர்களோடு தொடர்பினை ஏற்படுத்தித் தந்தது. அதற்குப் பிறகும் அவரை இரண்டு முறை சந்தித்தேன். அவரோடு சில நாட்கள் என் குடும்பத்தோடு தங்கியும் இருந்திருக்கிறேன். இன்று அவர் நம்மோடு இல்லை என்பதை ஒரு காந்தியத் தலைவர் மறைந்துவிட்டார் என்பதைவிடக் கூடுதலாய், குடும்பத்தில் நெருக்கமான ஒரு மூத்தவரை இழந்துவிட்டதாகவே உணர்கிறேன். அதே சமயம், நாராயண் தேசாய் ஏன் என் மனதுக்கும் என்னைப் போன்ற பலருடைய மனங்களுக்கும் அவ்வளவு நெருக்கமாகவராகத் தோன்றினார் என்பதை விளக்குவதற்கான வாய்ப்பாகவும் இந்த கனமான தருணத்தைக் காண்கிறேன்.
நாராயண் தேசாய் பிறந்ததுமுதலே காந்தியின் அண்மையில் வளர்ந்தவர். காரணம், அவர் மகாதேவ் தேசாய்-துர்காபென் தம்பதியர்க்கு 1924ல் பிறந்தவர். மகாதேவ் தேசாய் காந்தியின் செயலராகவும், நண்பராகவும், இன்னொரு மகனாகவும் இருந்தவர். கடுமையான உழைப்பாளி. காந்தியுடன் இருந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரண்டுமுறைதான் விடுப்பு எடுத்திருக்கிறார். வாரயிறுதி, பண்டிகைநாள் என்று எதுவும் அவருக்கு இருந்ததில்லை. பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் விரவிக்கிடக்கும் காந்தியின் எழுத்துகளில் கணிசமான பகுதி மகாதேவ் தேசாயின் எழுதுகோள் வழியாக வெளிப்பட்டவை. காந்தி சொல்ல நினைத்தவற்றை காந்தியின் சொற்களில் அவரளவுக்குச் சிறப்பாக எழுதக்கூடியவர் மகாதேவ் தேசாய். மகாதேவ் எழுதிய கட்டுரைகள் பலவற்றோடு முற்றிலும் உடன்பட்டு, எந்த மாற்றமும் இல்லாமல், காந்தி தனது கையொப்பமிட்டு தன் பெயரில் ஹரிஜன் இதழில் பதிப்பித்திருக்கிறாராம். அந்த அளவுக்கு, காந்தியின் குரலாகவும் எழுத்தாகவும் விளங்கியவர் மகாதேவ். காந்தியின் அன்றாட வாழ்க்கையைத் தனது நாட்குறிப்புகள் மூலமாகப் பதிவுசெய்து உலகம் அறிய வழிவகுத்தவர். அத்தகைய ஒருவருடைய மகனாகப் பிறந்ததால், காந்தியின் நேச நிழல் அவரது இளமையில் அவர்மீது எப்போதும் படர்ந்திருந்தது. மகாதேவ் மறைந்து, பின் காந்தியும் மறைந்தபின்னும் அவர்மீது படர்ந்த அந்த நிழல் இறுதிவரை அவரைவிட்டு அகலவில்லை. “என் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கினை காந்தியின் பௌதிக இருப்பில் கழித்ததும், மீதி வாழ்வை அவரது ஆன்ம இருப்பில் கழித்ததும் எனக்கு பேருவகையூட்டும் அனுபவமாக இருந்ததுள்ளது,” என்று அவரது வாழ்வில் காந்தியின் நிரந்தர இருப்பைப்பற்றிக் கூறுகிறார்.
காந்தியின் மடியில் வளரும் வாய்ப்பு நாராயண் தேசாயைச் சரியான வழியில் செலுத்தியது. அவர் அருகிலிருந்து அறிந்துகொண்ட காந்தியைப்பற்றிப் பல கோணங்களில் எழுதினார். காந்தியின் மீது எத்தனையோ ஆயிரம் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன; எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், அப்படி எழுதுபவர்களில் அனேகமாய் எவருக்கும் கிடைக்காத ஒரு தனித்துவமான கோணம் நாராயண் தேசாய்க்குக் கிடைத்திருந்தது. “(காந்தி) ஆசிரமம் முழுவதற்கும் பாபு-தந்தை, நாட்டின் தலைவர்; பொதுமக்களின் மகாத்மாகவாக இருந்தார். ஆனால் அவை எல்லாவற்றையும்விட எங்களுக்கு அவர் ‘நண்பன்’ஆகவே இருந்து வந்தார். எங்களுக்கு அவர் நண்பனைத் தவிர வேறுவிதமாகத் தோன்றியதே இல்லை. உலாவப்போகும்போது வழியில் எங்களுடன் வேடிக்கையாக விளையாடுவார். அதிகாலையில் நாங்கள் உடற்பயிற்சிக்காக பயிற்சிக்கூடத்திற்குப் போயிருக்கும்போது அங்கு சில சமயம் வந்து எங்களுக்கு ஊக்கமளிப்பார். பிரார்த்தனை நேரத்தில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருக்கும் போது, ஹ்ருதய குஞ்சில் தேசத்தலைவர்களுடன் மாபெரும் விஷயமாக ஆலோசனை நடத்திவரும்போது எங்களுக்கு அவர் நண்பனாகவே தோற்றமளிப்பார்,” என்று காந்தியை ஒரு சிறுவனின் பார்வையில் உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார் நாராயண் தேசாய். அரசியல் தலைவராய், தேசத் தந்தையாய், சத்யாகிரகப் போரட்டங்களின் முன்னோடியாய், சமூகநீதிப் போராளியாய், புதியதொரு பொருளாதாரமுறையைத் தோற்றுவித்தவராய், கல்வியாளராய், மகாத்மாவாய் எத்தனையோ அவதாரங்களில் நாம் அறிந்த காந்தியை, குழந்தைகளின் நண்பனாய் நமக்கு அறிமுகப்படுத்தினார் நாராயண் தேசாய். ‘மகாத்மாவுக்குத் தொண்டு’ என்ற அவரது நூல், நகைச்சுவையோடு உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்ட ஓர் அற்புதமான, அபூர்வமான படைப்பு.
“காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலானோர் அவரது அரசியல் வாழ்க்கையிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், அவ்வாறு செய்யும்போது, அவர்களில் சிலர் அவரது வாழ்வின் மற்ற கூறுகளைப் புறக்கணித்துவிடுகின்றனர். காந்தியைப் பகுதிகளாகப் புரிந்துகொள்ளவே முடியாது. அவரது முழுமைதான் அவதானிக்கப்படவேண்டும். நிர்மாணப் பணிகளோடும் ஆசிரம நியதிகளோடும் இணைத்துப்பார்க்காமல், ஒருவரால் சத்யாகிரகத்தைப் புரிந்துகொள்ளவே முடியாது. காந்தி என்கிற தேர்ந்த அரசியல் தலைவரும், விடுதலைப் போராளியும் உருவாகியிருக்க, காந்தி என்கிற சமூக சீர்திருத்தவாதியும், காந்தி என்கிற மகானும் இல்லாமல் சாத்தியமே இல்லை. முரண்பட்டவை போலத் தோன்றும் காந்தியின் வாழ்க்கையின் இந்த நான்கு பன்முகக் கூறுகளுக்கிடைய இருக்கும் பொதுத் திரியைப் பின்தொடர்ந்து, இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்த முயல்கிறேன். அதன் அத்தனை மகிமையுடனும், உண்மைக்கான தேடல்தான் காந்தி என்கிற மனிதனை உருவாக்குகிறது,” என்று நாராயண் தேசாய் தான் எழுதிய ‘என் வாழ்வே எனது செய்தி’ (My life is my message) என்கிற காந்தியின் வாழ்க்கைவரலாற்று நூலுக்கான முன்னுரையில் கூறுகிறார். காந்தியின் எல்லா அம்சங்களையும் ஒருங்கிணைத்து ஓர் ஒட்டுமொத்த சித்திரத்தை வரைந்துகாட்டுகின்ற தன்மையை, நேர் பேச்சிலாகட்டும், காந்தி கதா உரைகளிலாகட்டும், அவரது எழுத்துகளிலாகட்டும், நாராயண் தேசாயின் எல்லா செயல்பாடுகளிலும் நாம் காணலாம்.
அவர் எழுதிய இந்த வாழ்க்கை வரலாற்று நூல் குஜராத்தியில் எழுதப்பட்டு, பின் ட்ரிதிப் ஸுகுருத் என்பரால் ஆங்கிலத்தில் 4 பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டது. நாராயண் தேசாய் ஒருமுறை கூறினார் – அவரது குரலில் வருத்தம் கலந்திருந்ததா என்று என்னால் உறுதியாகக் கணிக்கமுடியவில்லை – “ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நான் ஒரு விமர்சனக் கட்டுரையைக்கூடப் பார்த்ததில்லை.” அவரது இப்பெரும் படைப்பினைப் படித்திராத குற்றத்தினை நானும் அப்போது செய்திருந்தேன். இம்முறை மதுரை வந்திருந்த போதுதான், நான்கு பாகங்களையும் வாங்கிவந்தேன் – அவர் இருக்கும்போதே ஒரு விமர்சனக் கட்டுரை எழுதிவிட வேண்டும் என்கிற நோக்கத்தோடு. அது சாத்தியப்படவில்லை. நம்மோடு வாழ்ந்த மாபெரும் மனிதர்களுக்குக்கூட நாம் நிராகரிப்பையே வழங்கியிருக்கிறோம் என்பது தானே கசப்பான உண்மை. பெரும்பாலான பிரபல இதழ்களில் வெளிவந்த அவரது மரணச் செய்தியின் மூலமாகத்தான் அவரைப் பற்றி பலரும் அறிய நேர்ந்தது. நான் எழுதி, தி இந்து நாளிதழில் வெளியான அஞ்சலிக் கட்டுரையைப் படித்த பலரும் இத்தகைய கருத்தைத் தெரிவித்தனர். இப்போதேனும் ஒளி விழவேண்டிய இடத்தில் விழுந்ததே என்கிற திருப்தியுடன்தான் அவரைப் பற்றி மேலும் விரிவாக எழுதும் முனைப்பில் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
மேடையிலாகட்டும் நேர்பேச்சிலாகட்டும், நாராயண் தேசாய் ஓர் அற்புதமான கதைசொல்லி. ‘காந்தி கதா’ – இந்திய மரபிலிருந்த கதாகாலாட்சேப முறையைத் தழுவி, புதிய பொலிவு சேர்த்து நவீன வடிவம் கொடுத்து, காந்தியின் கதையை அடுத்த தலைமுறைக்கு எடுத்தச் செல்ல நாராயண் தேசாய் எடுத்த முயற்சி. அவரும் காந்தியும் வாழ்ந்திருந்த குஜராத் மாநிலத்தில், 2002ல் வெடித்த மதக் கலவரங்களுக்கும் படுகொலைகளுக்கும் பின், காந்தியை வேகத்துடன் மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்யவேண்டிய தேவையை உணர்ந்து அவர் முன்னெடுத்த முயற்சி இது. 108 காந்தி கதா நிகழ்வுகள் நடத்தவேண்டும் என்னும் இலக்கோடு தொடங்கி, இலக்கைத்தாண்டியும் சில உரைகளாற்றினார். காந்தி கதா நிகழ்வுகளுக்கு வந்திருந்தவர்களுக்குத் தெரியும் – இசையின் மூலமாகவும், உணர்ச்சிகரமான உரையின் மூலமாகவும், நமக்குத் தெரிந்த, தெரியாத பல கதைகளின் மூலமாகவும் காந்தியை நாம் அருகிலிருந்து பார்த்த ஓர் உணர்வை அவரால் ஏற்படுத்தமுடிந்தது.
காந்தியைப் பற்றி நான் கொண்டிருந்த பார்வையை மேலும் கூர்மையாக்கிக்கொள்ள அவருடனான உரையாடல்கள் உதவின. இந்தியப் பிரிவினையைத் தடுக்க, காந்தி ஜின்னாவைப் பிரதமராக்கலாம் என்று சொன்னது, உண்மையிலேயே அப்படிச் செய்யவேண்டும் என்பதற்காகச் செய்தாரா, அல்லது வெறும் சம்பிரதாயமான செயல்பாடா என்கிற ஒரு சிறு சந்தேகம் எனக்கிருந்தது.
“அதை நான் சாலமனின் தீர்ப்பு என்பேன். அரசர் சாலமனிடம் இரு பெண்கள் ஒரு குழந்தை மீதான சர்ச்சையைத் தீர்க்க வந்தனரே – இருவரும் குழந்தை தமது என்றனர். சாலமன், ‘சரி, குழந்தையை இரண்டாய்ப் பிரித்து ஆளுக்கொருவர் வைத்துக்கொள்ளுங்கள்’ என்றதும் உண்மையான தாய், ‘ஐயோ வேண்டாம்…குழந்தை உயிரோடிருக்கவேண்டும்…அவளிடமே இருக்கட்டும்’ என்றாளே. My god! காந்தியும் அதைத்தான் செய்தார். நாட்டை ஜின்னாவிடம் ஒப்படைப்போம், ஆனால் ஒன்றாக இருக்கட்டும்,” என்று கூறி எனது ஐயத்தைத் துடைத்தெறிந்தார் நாராயண் தேசாய். அந்த யோசனை எப்படி மவுன்ட்பேட்டன், நேரு, பட்டேல் ஆகியோரால் நிராகரிக்கப்பட்டது என்பதையும் விளக்கினார். பிரிவினையைத் தடுப்பதற்கு, காந்தி மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கத் தயாராக இருந்தபோது, எப்படி எவரும் துணைக்கு வரவில்லை என்பதையும் ஜெயப்பிரக்காஷ் நாராயண் சொற்களின் மூலமாகக் கூறினார்: “அவர் எங்களிடம் போராடுவதற்கான வாய்ப்பை அளித்தார். எங்கள் கால்கள்தாம் உறைந்துபோய்விட்டன.”
காந்தி ஆரம்பத்தில் கலப்பு மணங்களுக்கு எதிராக இருந்திருக்கிறார். இந்த நிலைப்பாடுதான் இன்றும் பலராலும் மேற்கோள் காட்டப்பட்டு விமர்சிக்கப்படுகிறுது. ஆனால் பின்னர் தீண்டாமையை ஒழிக்கக் கலப்பு மணங்கள் அவசியம் என்பதை உணர்ந்து வலியுறுத்தத்தொடங்கினார். மணம்செய்துகொள்ளும் தம்பதியரில் ஒருவரேனும் ஹரிஜனாக இருந்தால் மட்டுமே, தன்னால் அவர்களது திருமணத்தில் கலந்துகொள்ள முடியும் என்று அறிவித்தார். நாராயண் தேசாய் கலப்பு மணம் செய்துகொண்டார். அவரது மனைவி உத்தரா, பின்னாளில் ஒரிசாவின் முதலமைச்சராக இருந்த நபக்கிருஷ்ண சவுத்ரியின் மகள். தம்பதியர் வெவ்வேறு மொழிகளையும் சாதிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தபோதும், இருவரும் தலித் அல்லாதவர்கள். அதனால், தனது பிரியத்துக்குரிய மகாதேவ் தேசாயின் மகனுடைய திருமணத்துக்கே காந்தி வர மறுத்துவிட்டாராம். இருப்பினும், கலப்பு மணம் என்பதால், அதை ‘இரண்டாம் வகுப்பு மணம்’ (Second class wedding) என்றுகூறி அவரது ஆசிகளை மட்டும் தங்களுக்கு வழங்கியதாக நாராயண் தேசாய் குதூகலத்துடன் கூறினார்.
நாராயண் தேசாய் வார்தாவில் ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, அங்கிருந்த சூழலை ஏற்றுக்கொள்ள சற்றும் மனமின்றி, இனி பள்ளிக்கே செல்வதில்லை என்று முடிவுசெய்தார். அவரது தந்தை அவரை காந்தியின் ஆலோசனை பெறுமாறு அனுப்பினார். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக அப்போதுதான் சேர்ந்திருந்த ஆரியநாயகம், நாராயணின் முடிவை எதிர்த்து காந்தியிடம் வாதாடினார். ஆனால் நாராயண் தரப்பு நியாத்தை உணர்ந்துகொண்ட காந்தி அவர் பள்ளிக்கு முழுக்குப் போடுவதற்கு முழு ஆதரவை அளித்தார். அதோடு நின்றுவிடாமல், ஆரியநாயகம் தம்பதியரையும் அப்பள்ளியிலிருந்து விலகச்செய்து ஆதாரக் கல்வி இயக்கத்தில் ஒன்றச்செய்தார். பலவகைகளில், தனது வாழ்வின் இந்நிகழ்வுதான் ஆதாரக் கல்விமுறை காந்தியின் உள்ளத்தில் கூர்பட்டு வெளிப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்தது என்று நாராயண் தேசாய் கருதினார். அவரே பின்னர் தனது சமூகப்பணியை ஒரு ஆதாரக்கல்விப் பள்ளியில் தான் தொடங்கினார். தானே ஒரு பள்ளியையும் தொடங்கவும் செய்தார். இறுதிவரை ஆதாரக்கல்வி முயற்சிகளை ஊக்குவிப்பவராக இருந்தார்.
பள்ளிப்படிப்பை முடித்திராத ஒருவர், பின்னாளில் காந்தி தோற்றுவித்த காந்தி வித்யாபீடத்தின் தலைவராக (Chancellor) உயர்ந்தது, காந்தியக் கல்வியின் இலக்குகளுக்குப் பொறுத்தமானதுதான். பள்ளியிலிருந்து விலகிவிட்டபோதும், நாராயண் கற்பதற்கு சேவாகிராம் ஆசிரமத்தைவிடவும் சிறந்த பள்ளிக்கூடம் என்னவாக இருந்திருக்கமுடியும்? அவர் வாழ்வில் அவர் பார்த்து, உடனிருந்து பயில நேர்ந்த மாமனிதர்களைவிடச் சிறந்த ஆசிரியர்கள் எந்தப் பள்ளியில் காணமுடியும்? அவரது வாழ்க்கைச் சூழல் அவருக்கு அளித்ததைவிடச் சிறந்த கல்வியை வேறு எவர்தான் புகட்டிவிட முடியும்?
குஜராத் வித்யாபீடத்திற்கு நாங்கள் சென்றிருந்தபோது நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பல நூறு மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாகக் குழுமியிருந்து, ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருந்தவாறே, சமீபத்தில் மறைந்திருந்த நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக அமைந்த அவரது உரையை உன்னிப்பாக எல்லாரும் கவனித்துக்கொண்டிருந்ததைக் காண்பது ஓர் அரிய அனுபவமாக அமைந்தது.
நாராயண் தேசாய் தானும் இறுதிவரை ராட்டையில், தினமும் மாலை ஒரு மணிநேரமாவது நூல் நூற்றுக்கொண்டுதான் இருந்தார். இந்தியாவில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு கதர் துணியை வாங்கினால், இரண்டு கோடி பேருக்கு ஆண்டுமுழுதும் வேலை கிடைக்கும் என்று கூறினார். தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருந்த உயரமான மனிதர், கட்டிலில் நிமிர்ந்து அமர்ந்த படி தன் கவனம் முழுமையையும் திரட்டிச் செலுத்தி ஒரு தியான நிலையில் நூற்றுக்கொண்டிருந்த காட்சியை எப்போதும் மறக்கமுடியாது. நினைவிழந்த (கோமா) நிலைக்குச் சென்று அதிலிருந்து சற்றே மீண்டபோதும் கூட, மருத்துவமனையில் இருந்தபடியே ராட்டையை இயக்க முயன்று கொண்டிருந்ததைப் புகைப்படங்களில் காணமுடிந்தது.
காந்தி என்ற மகாத்மாவின் அண்மை அவரது இளமையை நிறைத்தது போல, அவரது வாழ்வின் அடுத்த கட்டத்தை மேலும் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் நெருக்கம் நிறைத்தது: வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண். நாராயண் தேசாயின் வாழ்வில் காந்தி வகித்த இடத்திற்கு வருவதற்கு அவர்களைவிடத் தகுதியானவர்கள் வேறு எவர் இருந்திருக்க முடியும்?
நாராயண் தேசாய் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் இணைந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் பயணித்தார். குஜராத்தில் அவரது நடைபயணங்களின் மூலமாக ஏராளமான நிலங்களைத் தானமாகப் பெற்றார். பூமிதான இயக்கம் ஓரளவு வெற்றிபெற்ற போதும், அதன் வீச்சு இன்னும் அதிகம் இருந்திருக்கவேண்டும் என்பதை நாராயண் தேசாய் ஏற்றுக்கொண்டார். அலட்சியமும் ஊழலும் அதன் பல சிக்கல்களுக்கும் காரணமாக இருந்தன என்றார். “கிராம தானம், மாநில தானம் என்று விரிந்துசெல்லாமல், தனி நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட பூமிதான இயக்கமாகவே இருந்திருந்தால் இன்னும் அதிக தாக்கம் செலுத்தியிருக்க முடியுமா?” என்று அவரிடம் கேட்டபோது, “வினோபா இதை வெறும் நிலப்பகிர்ந்தளிப்புச் செயல்பாடாக மட்டும் பார்க்கவில்லை. சமூகத்தின் கட்டமைப்பை மாற்றியமைத்து உண்மையான சர்வோதயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு இயக்கமாக அது வளர்வதையே விரும்பினார். அது கிராம தானம் மூலமாக சாத்தியப்பட்டிருக்கும்,” என்றார்.
காந்தியின் மிக புரட்சிகரமான, ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒரு சிந்தனையாகத் தொடங்கி, சுதந்திர இந்தியாவில் ஒரு மிக முக்கியமான அகிம்சைச் சோதனையாக நடந்தது ‘சாந்தி சேனா’ இயக்கம். வினோபாவால் தொடங்கப்பட்டு, ஜெ.பி.யால் வழிநடத்தப்பட்ட ‘சாந்தி சேனா’ இயக்கத்தில், அதன் தேசியச் செயலராக இருந்து, பெரிய பங்காற்றினார் நாராயண் தேசாய். சமூக, மத, சாதிக் கலவரங்கள் வெடிக்கிறபோது, ஆயுதம் ஏந்திய போலீசாரின் தலையீடு, பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதையோ அல்லது ஒரு செயற்கையான தற்காலிக அமைதியைக் கொணர்வதையோதான் நான் காண்கிறோம். உள்ளூரிலிருந்து அமைக்கப்பட்ட ஒரு தொண்டர் படை, தன் தொடர்ந்த ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலமாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கலவரங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதையும், கலவரங்கள் தவிர்க்கமுடியாது வெடித்துவிடுகிறபோது அமைதியான முறையில் கலவரங்களை எதிர்கொண்டு தீர்வுகள் காண்பதும் சாந்தி சேனாவின் நோக்கங்கள். காந்தி இப்படியான ஒரு அமைதிப்படை இந்தியாவின் அனைத்து ஊர்களிலும் இயங்க வேண்டும் என்று கனவுகண்டார். அந்த அளவிற்குப் பெரும் இயக்கமாக சாந்தி சேனை வளரவில்லையெனினும், பல இடங்களில் முக்கியமான பங்காற்றியுள்ளது. குஜராத்தில் 60களில் மதக்கலவரங்கள் நடந்தபோது, சாந்தி சேனா தொண்டர்கள் எப்படி போலீசாருடனும் அனைத்துத் தரப்புகளின் பிரதிநிதிகளுடனும் இணைந்து செயல்பட்டனர் என்பதை நாராயண் தேசாய் கூறக் கேட்டிருக்கிறேன். ஆண்டுதோறும் நடைபெற்ற தருண் சாந்தி சேனா முகாம்களின் மூலமாக அகிம்சைப் பயிற்சி பெற்றவர்களில் பலர் இன்றும் முக்கிய சமூகப்பணிகளை ஆற்றிவருகின்றனர்; ஒரு சிலர் மாநிலங்களின் முதலமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘துரதிர்ஷ்டவசமாக, அவர்களும் மற்றவர்களைப்போலவே மாறிவிட்டனர்….மற்றவர்களிடமிருந்து நகலெடுத்துக் கற்றுக்கொண்டது அதுதான்,’ என்று ஒரு வரண்ட புன்னகையுடன் குறிப்பிட்டார்.
வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திர இந்தியாவின் ஆரம்ப ஆண்டுகளில் தொடர்ந்து நீடித்துவந்த பதற்றமான சூழலில் அங்கே இணக்கமான நிலை உருவாவதற்கு ஜெயப்பிரக்காஷ் நாராயணன், நாராயண் தேசாய் ஆகியோர் தலைமையில் சாந்தி சேனை அரும்பணியை ஆற்றியுள்ளது. சீனப்போரின் போது அகிம்சை வழியில் சீன ராணுவத்தை எதிர்கொள்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு சாந்தி சேனைத் தலைவர்களுக்குத் துணிவும் நம்பிக்கையும் இருந்திருக்கிறது.
‘இவ்வாறு நீங்கள் பெரிதாக எதுவும் செய்துவிடமுடியும் என்று நான் நினைக்கவில்லை. அகிம்சை இந்த வழிகளில் இயங்க முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் நீங்கள் முயற்சிப்பதை நான் தடுக்கவிரும்பவில்லை. உங்களுக்கு என்னுடைய அனுமதி கொடுப்பது மட்டுமல்ல, உங்களுக்கு என்ன உதவிகள் தேவையோ அனைத்தும் கிடைக்கச் செய்கிறேன்,’ என்று நேரு தன்னிடம் கூறியதாக நாராயண் தேசாய் தெரிவித்தார். தனக்கு முழு உடன்பாடில்லாத ஒரு செயலையும் ஊக்குவித்த நேருவின் ஜனநாயகப் பண்பைப் பாராட்டினார். நேருவின் ஆதரவு கிடைத்தபோதும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், சாந்தி சேனா தனது முழு வீச்சோடு செயல்படாத சூழலே நிலவியது. இந்திராவுக்கு எதிரான இயக்கத்தை ஜெயபிரக்காஷ் நாராயண் தொடங்கியவுடன், அவர் தலைமையில் இயங்கியது என்பதாலேயே சாந்தி சேனாவுக்கும் சோதனைகள் வந்தன. வடகிழக்கில் இருந்து சாந்தி சேனைத் தொண்டர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர். ‘நாங்கள் பணியாற்றிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டோம். அங்கு தூரம் கிலோமீட்டரில் அறியப்படுவதில்லை…நாள் கணக்கில்தான்….எங்கள் மையம் திப்ருகர்ரிலிருந்து 45 நாள் நடைபயண தூரத்தில் இருந்தது. அதனால் ரயிலைப் பிடிப்பதற்குச் சில நாள்கள் நடக்கவேண்டியிருந்தது. அப்போது பலரும் எங்களைப் பின்தொடர்ந்தனர் – கண்ணீரோடு. ‘யார் எங்களுக்காகப் பணியாற்றுவார்கள்?’ என்ற கேள்வியோடு,’ என்று கனமான மனத்தோடு பகிர்ந்துகொண்டார் நாராயண் தேசாய்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனும் வினோபா பாவேயும் வெவ்வேறு வழிகளில் செல்ல நேர்ந்தது, தேசாய்க்குச் சோதனையான காலம். அவர்கள் இருவரோடும் மிகவும் நெருக்கமானவர். ஜெபியோடு கைகோர்த்துச்செல்லும் கடினமான பாதையையே தேர்ந்தெடுத்தார். வினோபாவிடமிருந்து பிரிய நேர்ந்த அந்த கணத்தைப் பற்றி தேசாய் கூறினார் : ‘ “நாம் பிரிகிறோம். நான் எதிர்க்குழுவில் இருக்கப்போகிறேன்” என்று அவர் மடியில் சாய்ந்து அழுதவாறே சொன்னேன். அவரைத் தொடுவதை அவர் பொதுவாக அனுமதிப்பதில்லை…நமஸ்கார் – அவ்வளவுதான்….ஆயினும் அவர் தனது கைகளை என் தலைமீது வைத்து அரைமணிநேரம் என்னைத் தேற்றினார். ‘நீ உனக்கு எது சரியானதோ அதைச் செய்கிறாய். இதுதான் உனக்கு மிகவும் சரியானது.’ என்றுதான் சொன்னார். அத்தகைய சுதந்திரம் எங்களுக்குத் தந்தார்.’
ஜெயபிரக்காஷ், வினோபா ஆகியோராடு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிய நாராயண் தேசாயின் பகிர்வுகள், அதிகமாக அறியப்படாத அவர்களது ஆளுமையை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.
நாராயண் தேசாய் ஒருமுறை விளையாட்டாகக் கூறினாராம்: ‘நம் சர்வோதய இயக்கத்தில் இரண்டு தலைவர்கள் இருக்கின்றனர் – ஒருவர் துறவி; மற்றவர் அரசியல்வாதி. அந்தத் துறவி – ஜெயப்பிரகாஷ்.’ இது வினோபாவின் செவிகளை எட்டியபோது, வினோபா அதை எதிர்கொண்ட விதத்தை நாராயண் தேசாய் ரசித்து விவரித்தார். ‘வினோபாவுக்கு ஒரு பழக்கம் – அவருக்கு ஏதாவது பிடித்துப்போய்விட்டால், இருக்கையிலிருந்து எழுந்து நின்று கைதட்டுவார். அப்போதும் அதைத்தான் செய்தார்…’நாராயண் சொன்னது சரிதான். நான் அரசியல்வாதி, ஜெயப்பிரகாஷ் துறவி.’ அதன்பிறகு பொதுக்கூட்டங்களிலும் இதைச் சொல்லத்தொடங்கிவிட்டார். அதற்குக் காரணம் அந்த மனிதரின் நேர்மை. தெளிவான தூய்மையான நேர்மை. அவரோடு 20 ஆண்டுகள் பணியாற்றியதில், இது ஒரு மகத்தான அனுபவம்.’
ஜெயபிரக்காஷ் நாராயணை ஏன் அவர் இவ்வளவு உயர்ந்த பீடத்தில் வைத்திருந்தார் என்பதற்கு காரணமாய் அமைந்த பல நிகழ்வுகளில் ஒன்று நெகிழ்ச்சியானது. ‘ஜெயபிரக்காஷ்தான் இந்திரா தேர்தலில் தோற்றபின் முதன்முதலில் அவரைச் சந்திக்கச் சென்றார். அவரது சகபணியாளர்கள் அனைவரும் அதை எதிர்த்தனர் – ‘உங்களுடைய பிரதான எதிரி அவர். அவரையா சந்திக்கப்போகிறீர்கள்?’
‘எது எப்படியோ, அவர் இந்து (இந்திரா). அவர் கமலாவின் மகள்,’ என்றார்.
ஜவகர்லாலின் மகள் என்றுகூடச் சொல்லவில்லை. கமலாவின் மகள். கமலாவும் பிரபாதேவியும் நெருக்கமானவர்கள். சகோதரிகளைப்போல் இருந்தவர்கள். அவர் கமலாவின் மகள். ‘தோல்வி அடைந்ததால், தனிமையும் கழிவிரக்கமுமாய் இருப்பார். நான் அவரைப் பார்க்கவேண்டும்,’ என்று சென்று சந்தித்தார். இந்திரா அழுதுவிட்டார். ‘
ஜெயபிரக்காஷ் நாராயண் தொடங்கிய இயக்கத்தின் நினைவாக ‘சம்பூர்ண கிராந்தி(பூரண புரட்சி) வித்யாலயா’ என்ற ஒரு ஆசிரமத்தை நாராயண் தேசாய் குஜராத்தில் உள்ள வேட்சி என்ற கிராமத்தில் நிறுவினார். அகிம்சைப் போராட்டாங்களிலும் நிர்மாணப்பணிகளிலும் ஈடுபடுபவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியை இந்த இடத்திலிருந்து மேற்கொண்டார்.
நாராயண் தேசாய் பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். அவரது எண்பத்தொன்பதாவது பிறந்த நாளன்று, தாகூரின் வங்காளப் பாடலொன்றை, இனிய பாவனைகளுடன் அவர் பாடிக் கேட்டோம். குஜராத் வித்யாபீடத்தில் அவர் ஆற்றவிரும்பிய முக்கிய செயல்களில் ஒன்று, இந்தியாவின் எல்லா மொழிகளிலிலும் உள்ள குறிப்படித்தகுந்த இலக்கியங்களை நேரடியாக குஜராத்தி மொழியில் மொழிபெயர்ப்பது.
நாங்கள் அவரோடு தங்கியிருந்த கடைசி நாளன்று, அவரோடு சேர்ந்து வேட்சியிலிருந்து அகமதாபாத் வரை பயணிப்பதாக இருந்தது. வண்டி வருவதற்குத் தாமதமானதால், காத்துக்கொண்டிருந்த நேரத்தில் குஜராத்தியில் வெளிவந்த ஒரு சிற்றிதழிலில் திருவள்ளுவர் பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்திருந்ததைக் கண்டார். எனக்குத் திருக்குறள் மீதிருந்த நாட்டத்தை அறிந்திருந்த நாராயண் தேசாய், அந்த நீண்ட கட்டுரையை எனக்காக உடனுக்குடன் மொழிபெயர்த்துப் படித்துக் காண்பித்தார். அது மற்றுமோர் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.
அணு உலைகளின் ஆபத்தினை உணர்ந்து, அவற்றுக்கு எதிராகப் போராடிய முன்னோடிகளில் ஒருவர் நாராயண் தேசாய். குஜராத்தில் அமையவிருந்த ஓர் அணுவுலை குறித்து கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களைத் திரட்டியபோது அரசு இயந்திரத்தின் முழு சக்தியையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. உள்ளூர் தினசரிகள் சில, நாட்டுக்காகத் தன் வாழ்வு மொத்தத்தையும் அர்ப்பணித்த அவருக்கு, ‘தேச துரோகி’ என்ற பட்டம் கொடுத்தன என்கிற வினோதமான தகவலை அவர் குடும்பத்தினர் என்னோடு பகிர்ந்துகொண்டனர். “நமது செய்தி-நிறுவனங்கள் அரசு சொல்வதை மட்டுமே கூறுகின்றன. என்ன நடக்கிறது என்பதைக் குறித்துத் தாமாய்ச் சேகரித்த நடுநிலைச் செய்திகள் வெளிவருவதே இல்லை. அரசும் இதை தேசியப்பாதுகோப்பாடு இணைத்துவிட்டதால் பாராளுமன்றத்தில் கூட இதுகுறித்து எளிதாக உரையாட முடியாது. சிந்தித்துப்பார்த்தால் முட்டாள்த்தனமாக உள்ளது,” என்று நாராயண் தேசாய் முன்பே சொல்லியிருந்தது இத்தகைய செயல்பாடுகளின் விளைவாகத்தான் இருக்கவேண்டும்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் காந்தியைப் பற்றி அறிந்துகொள்வதற்காக நாராயண் தேசாயை நாடி வந்துகொண்டிருந்தனர். குஜராத் வித்யாபீடம் நடத்திய ஒரு பயிற்சியின் பகுதியாக, 25 சர்வதேச மாணவர்கள் இரண்டுமூன்று வாரங்கள் வேட்சியில் தங்கியிருந்தனர். அவர்களில் இருவர் தென் சுதான் நாட்டிலிருந்து வந்திருந்தனர். அந்த வேளையில் அவர்களது நாட்டில் கடுமையான போர் நடந்துகொண்டிருந்தது. அத்தகைய ஒரு சூழலிலும் அகிம்சை வழியில் எப்படிச் செயல்பட முடியும் என்பதை தேசாய் அவர்களுக்கு எடுத்துக்கூறினார். ‘முதலில் நிர்மாணப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். அதுதான் மக்களுக்கு உங்களிடம் நம்பிக்கை ஏற்படச் செய்யும். அதன்பின்னரே நமக்கு அவர்கள் செவிசாய்க்கத் தொடங்குவார்கள்,’ என்பது அவர் கூறிய முக்கியச்செய்தியாக இருந்தது.
மிகக்குறைந்த வசதிகளுடன், உடலுழைப்பை விரும்பிச் செய்தவாறு சர்வதேச மாணவர்கள் பல வாரங்கள் அங்கு தங்கியிருந்தது அவர்களுக்கு நாராயண் தேசாய் மீதிருந்த மதிப்பையும், காந்தியின் மீதிருந்த நாட்டத்தையும் எங்களுக்கு உணரவைத்தது. அவர்களில் ஒருவர் பிரேசிலில் காந்தியப் பள்ளி ஒன்றை நிறுவியிருப்பதாக எனக்கு மின்னஞ்சலில் எழுதியிருந்தார். நாராயண் தேசாயின் தாக்கம் அத்தகையதாக இருந்தது. நாராயண் தேசாய் அதிகாலை வேளைகளில் நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்களின் போது, காந்தியைப் பற்றியும் சாந்தி சேனா பற்றியும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். அவற்றின் மூலமாக காந்தியின் பிரார்த்தனைக் கூட்டங்கள் எப்படியானவையாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்கமுடிந்தது.
வளர்ச்சி, வறுமைக்கோடு ஆகியவை பற்றி அவர் சொன்னார்: ‘அவர்கள் பார்ப்பதில்லை. அதனால்தான் அளக்கிறார்கள்.’ [‘They don’t see. That is why, they measure.’]. கடந்த காலங்களில் பெருமளவு புள்ளிவிவரங்களில் கவனம் செலுத்திப் பழகியிருந்த என்னுடைய பார்வையில் பெரும் மாற்றத்தை விளைவித்த நுண்ணிய வாசகம் அது.
நான் அவரோடு கழித்த சில நாட்களில், ஒரே ஒரு முறைதான் அவர் எவரையேனும் கடிந்துகொள்வதை கண்டேன். கடைசி நாளன்று, வட அமெரிக்காவிலிருந்து வந்திருந்த, நடுத்தர வயதுள்ள ஒரு மாணவி அவரிடம் தனியே புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வந்தார். பொதுவாக புகைப்படங்களுக்குப் பொறுமையாக, எல்லாருடனும் நட்புடனும், அழகான புன்னகையுடனும் அமர்ந்துகொள்பவர்தான் அவர். ஆனால், இம்முறை மறுத்தார். முதலில் ஆச்சரியமடைந்தபோதும், பிறகு அவர் சொன்ன விளக்கம் என் மனதைத் தைத்தது. பின்னர் மனமிளகி அந்த மாணவியோடு அமர்ந்தபோதும் அந்தப் புன்னகையைக் காணமுடியவில்லை. “இரண்டு வாரங்களுக்கும் மேலாக, நீ என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இப்போது இந்தப் புகைப்படத்தை மட்டும் ஒரு நினைவுச்சின்னமாக எடுத்துச்செல்ல விரும்புகிறாய். இதனால் என்ன பயன் கிடைக்கப்போகிறது?”
நாராயண் தேசாய் காந்தி, வினோபா, ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோரின் வாழ்க்கையை, அவர்களது செய்திகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார். அவரது வாழ்வுமே ஓர் அரிய செய்தயைப் பிரகடணப்படுத்தியது. அவரோடு கழித்த சில நாட்களைப் பற்றிய அந்தரங்க நினைவுகளை விடவும், அந்தச் செய்தியையே அதிகம் பற்றிக்கொண்டு செயல்பட விரும்புகிறேன். அதுவே நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய பொருத்தமான அஞ்சலி.