தி இந்துவில் வெளியான கட்டுரை.
———————-
மூத்த காந்தியவாதியும், இளம் பருவத்தில் காந்தியோடு நெருங்கிப் பழகியவருமான நாராயண் தேசாய் மார்ச் 15-ம் தேதி தனது 90-வது வயதில் காலமானார். இரண்டாண்டுகளுக்கு முன்பு, நாராயண் தேசாய் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் ‘காந்தி கதா’ நிகழ்வுக்காக வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்குப் பின்னர் அவரோடு குஜராத்திலுள்ள வேட்சியில் அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்திருக்கிறேன். ஒரு மகத்தான மனிதரின் அண்மை நம் மனங்களையும் எந்த அளவுக்கு மேன்மைப்படுத்தும் என்பதை உணர முடிந்த தினங்கள் அவை.
காந்தியின் செயலாளராகவும் நண்பராகவும் இன்னொரு மகன் போலவுமே இருந்த மகாதேவ் தேசாயின் மகன்தான் நாராயண் தேசாய். காந்தியின் ஆசிரமத்தில் பிறந்ததால் காந்தியின் மடியிலும் கண்பார்வையிலும் வளர்ந்தவர். காந்தியை ஒரு அரசியல் தலைவராக, சமூகப் போராளியாக, மகாத்மாவாகப் பிறர் பார்த்தும் பதிவுசெய்தும் இருக்கிறார்கள். ஆனால், நாராயண் தேசாய்க்கோ அடிப்படையில் காந்தி ஒரு ‘விளையாட்டுத் தோழன்’. ஒன்றாகச் சேர்ந்து பொம்மைகளோடும் நீச்சலடித்தும் விளையாடியவர்கள். குழந்தையாக தேசாய் இருந்தபோது அவர் மீது படியத் தொடங்கிய காந்தியின் நிழல் இறுதிவரை தொடர்ந்தது.
நாராயண் தேசாய் தனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராகப் பள்ளிக் கல்விக்கு முழுக்குப் போட்டார். அப்போது அவரது மனதை மாற்றுவதற்காக காந்தியின் உதவியை அவர் தந்தை நாடியபோது, காந்தி நாராயண் தேசாய்க்கு ஆதரவாகத் திரும்பிவிட்டார். அந்த நிகழ்ச்சிதான், ஒரு வகையில், காந்தி ஆதாரக் கல்வி பற்றிய தனது புதிய சிந்தனைப் போக்கை முன்னெடுக்க அடிகோலியது என்பார் நாராயண் தேசாய்.
சாந்தி சேனா என்ற அகிம்சை சோதனை
ஆதாரக் கல்விப் பள்ளியில் ஆசிரியராகவும் பின்னர் ஒரு புதிய பள்ளியின் நிறுவனராகவும்தான் தேசாயின் சமூக வாழ்க்கை தொடங்கியது. வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியவர்களோடு இணைந்து அவரது சமூகப் பணி தீவிரமடைந்தது.
பூமி தான இயக்கத்தில் இணைந்து நாட்டின் பல பகுதி களுக்கும் பயணித்தார். அதன் பின் சாந்தி சேனா இயக்கத்தின் செயலரானார். சாந்தி சேனா சுதந்திர இந்தியாவில் நடந்த அகிம்சை சோதனைகளில் முக்கியமானது. சமூக நல்லிணக்கத்தைத் தொடர்ந்து உருவாக்கிக் கலவரங்களைத் தடுப்பதும், கலவரங்கள் வெடித்துவிடுகிறபோது அகிம்சை வழியில் தலையிட்டு அமைதியான தீர்வுகாண்பதும் சாந்தி சேனாவின் நோக்கங்கள்.
குஜராத்தில் சூரத் போன்ற இடங்களில் 60-களில் வெடித்த கலவரங்களில் சாந்தி சேனா அரும்பணி யாற்றியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திர இந்தியாவின் ஆரம்ப ஆண்டுகளில் தொடர்ந்து நீடித்து வந்த பதற்றமான சூழலில் அங்கே இணக்கமான நிலை உருவாவதற்கு ஜெயபிரகாஷ் நாராயண், நாராயண் தேசாய் ஆகியோர் தலைமையில் இயங்கிய சாந்தி சேனா ஆற்றிய பணியை நாம் மறந்துவிடக் கூடாது.
“சாந்தி சேனா மூலம் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் எங்களில் பலர் சிறப்பாகச் செயலாற்றியிருந் தோம். உதாரணமாய், சீனாவுடன் முதலில் உரசல்கள் தொடங்கியபோது எல்லைப் பகுதிகளில் 58 மையங்கள் அமைத்திருந்தோம். வெளிநாட்டுப் படையெடுப்பையும் அகிம்சை முறையில் எதிர்கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இயங் கினோம். அது ஒரு கனவு” என்று என்னுடனான நேர் காணலில் நாராயண் தேசாய் குறிப்பிட்டிருந்தார்.
ஆண்டுதோறும் நடைபெற்ற தருண் சாந்தி சேனா முகாம்களின் மூலமாக அகிம்சைப் பயிற்சி பெற்றவர்களில் பலர் இன்றும் முக்கிய சமூகப் பணிகளை ஆற்றிவருகின்றனர்; ஒருசிலர் மாநிலங்களின் முதலமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். “துரதிர்ஷ்டவசமாக, அவர்களும் மற்றவர்களைப் போலவே மாறிவிட்டார்கள்… மற்றவர்களிடமிருந்து நகலெடுத்துக் கற்றுக்கொண்டது அதுதான்,” என்று வறண்ட புன்னகையுடன் குறிப்பிட்டார்.
நேருவுக்கு சாந்தி சேனாவின் செயல்பாடுகளில் பெருமளவில் நம்பிக்கை இல்லையெனினும் நாராயண் தேசாய், ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோர் மீது இருந்த மதிப்பாலும், தனது ஜனநாயக உணர்வாலும் அவர்களுக்கு ஆதரவாகவே இருந்தார். ஆனால், இந்திராவுக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயண் போராட்டக் களத்தில் இறங்கியபோது, வட கிழக்கில் செயல்பட்டுவந்த சாந்தி சேனா இயக்கம் முடிவுக்கு வந்தது. சாந்தி சேனா இயக்கத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவர்களால் பயனடைந்த உள்ளூர் மக்கள் பல நாட்கள் அவர்களோடு நடந்துவந்து வழியனுப்பிவைத்த அனுபவத்தை நாராயண் தேசாய் அடிக்கடி குறிப்பிடுவார்.
வினாபா பாவே, ஜெயபிரகாஷ்…
ஜெயபிரகாஷ் நாராயணனும் வினோபா பாவேயும் வெவ்வேறு வழிகளில் செல்ல நேர்ந்தது, தேசாய்க்குச் சோதனையான காலம். அவர்கள் இருவரோடும் மிகவும் நெருக்கமானவர். ஜெயபிரகாஷ் நாராயணுடன் கைகோத்துச் செல்லும் கடினமான பாதையையே தேசாய் தேர்ந்தெடுத்தார். வினோபாவிடமிருந்து பிரிய நேர்ந்த அந்த கணத்தைப் பற்றி தேசாய் கூறினார் : “ ‘நாம் பிரிகிறோம். நான் எதிர்க் குழுவில் இருக்கப் போகிறேன்’ என்று அவர் மடியில் சாய்ந்து அழுதவாறே சொன்னேன். அவரைத் தொடுவதை அவர் பொதுவாக அனுமதிப்பதில்லை… நமஸ்கார் – அவ்வளவுதான். ஆயினும், அவர் தனது கைகளை என் தலைமீது வைத்து அரைமணி நேரம் என்னைத் தேற்றினார். ‘உனக்கு எது சரியானதோ அதை நீ செய்கிறாய். இதுதான் உனக்கு மிகவும் சரியானது.’ என்றுதான் சொன்னார். அத்தகைய சுதந்திரத்தை அவர் எங்களுக்குத் தந்தார்.”
அணுசக்திக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்களில் நாராயண் தேசாய் முதன்மையானவர். குஜராத் மாநிலத்தில் ஒரு அணுமின் நிலையம் நிறுவ முயற்சிகள் நடந்தபோது அதற்கெதிராகத் தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடினார். அதற்காக அவருக்கு ‘தேச விரோதி’ பட்டமும் வழங்கப்பட்டது. அகிம்சைப் போராட்டங்களிலும் நிர்மாணப் பணிகளிலும் ஈடுபடுபவர் களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ‘சம்பூர்ண கிராந்தி (பூரண புரட்சி) வித்யாலயா’ என்ற ஒரு ஆசிரமத்தை வேட்சியில் நிறுவினார்.
காந்தியக் கதைசொல்லி
நாராயண் தேசாய் ஓர் அற்புதமான கதைசொல்லி. குஜராத் கலவரங்களுக்குப் பின்னர் காந்தியின் செய்தியை மக்களிடம் இன்னும் தீவிரமாகக் கொண்டு சேர்க்கும் முனைப்புடன் ‘காந்தி கதா’ நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். மரபான கதாகாலட்சேப முறையில் காந்தியின் கதையையும் செய்தியையும் இந்தியாவெங்கும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் எடுத்துச்செல்லத் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட காந்தி கதா நிகழ்வுகளை நடத்தியுள்ளார். காந்தியைப் பற்றிய அவரது உரைகள் காந்தியின் சமூக, ஆன்மிக, அரசியல், குடும்பப் பார்வைகளை முழுமையாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்துவன. நாராயண் தேசாய் தேர்ந்த எழுத்தாளரும்கூட. பல மொழிகளில் புலமை கொண்டவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஒரு குழந்தையின் பார்வையில் காந்தியைப் பற்றி எழுதினார். மகாதேவ் தேசாய், காந்தி பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் முக்கியமானவை.
சர்வதேச மாணவர்கள் பலர் நாராயண் தேசாயைத் தேடிவந்து காந்திய முறைகளில் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளனர். நாங்கள் சென்றிருந்தபோது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 25 மாணவர்கள் அவரோடு இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார்கள். பின்னர், அவர்களில் ஒருவர் பிரேசிலில் காந்தியப் பள்ளி ஒன்றை நிறுவியிருப்பதாக எனக்கு மின்னஞ்சலில் எழுதியிருந்தார். நாராயண் தேசாயின் தாக்கம் அத்தகையதாக இருந்தது. ஒரு முழுமையான வாழ்வு வாழ்ந்து மறைந்த அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்துவோமாக!
– த. கண்ணன், திருக்குறள் வழியில் தலைமைப் பண்புகளைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பவர், நாராயண் தேசாயைப் பேட்டிகண்டு ‘காந்திய காலத்துக்கொரு பாலம்’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.