என் மகளும் நானும் எதற்கோ பச்சை நிறத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இயற்கையின் நிறம் பச்சை, என்று தொடங்கி வைத்தேன். இலையின் நிறம் பச்சை, கிளியின் நிறம் பச்சை என்று தொடர்ந்தாள்.
தாவும்புல் பச்சை என்று முடித்தாள். சீக்கிரம், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் துல்லியத்துடன், புல்தாவி என்று சொல்லும் திறன் பெற்றுவிடுவாள் என்பது அவள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை நீர்வீழ்ச்சியாய்ப் பொழிந்தது.
என் மனைவி கொஞ்சம் யதார்த்த தளத்தில் இயங்குபவள் – வெட்டுக்கிளியென்று திருத்துகிறாள். அவள் இப்படித்தான். காந்தி பற்றி கல்கி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலின் இரண்டாம் பகுதியை – 1956ம் ஆண்டு அச்சிடப்பட்ட பிரதியைப் பத்திரமாக பைண்ட் செய்து வைத்து, கண்டுபிடித்தும் கொடுத்துவிட்ட தியாகுவின் நூலகத்திலிருந்து நேற்று எடுத்துவந்திருந்தாள். மகிழ் அப்புத்தகத்தைப் பிரித்து, எழுத்துக்கூட்டி, மாந்தருக்குள் ஒரு மாணிக்கம் என்று தலைப்பைப் படிக்கிறாள். நான் மாந்தர் என்றால் மனிதர், மாணிக்கம் என்றால் என்ன தெரியுமா என்று அவளை கேட்கிறேன். மனைவி குறுக்கிட்டு, அந்தத் தலைப்பு மாந்தருக்குள் ஒரு தெய்வம் என்கிறாள். மோனை நயம் தெரியாத மனிதராக இருந்திருப்பாரோ என்று கல்கியை நொந்துகொள்கிறேன்.