மாடுகளுக்கு அமைத்திருந்த தகரக்கொட்டகையில், கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி, தோப்புக்காரரோடு சாவகாசமாய்ப் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாளாகக் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டேன். தோற்றத்தைப் பார்த்து எடைபோட்டு, என் மகளுக்கு அவரைத் தாத்தா என்றழைக்கச் சொல்லிக்கொடுத்திருந்தாலும், அந்தளவுக்கு அவருக்கு வயது இல்லையோ என்று கணக்கு இடித்தது. அவரது மகள் இப்போதுதான் கல்லூரியில் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கிறாள். மகன் இரண்டாண்டு இளையவன்.
‘உங்களுக்கு என்ன வயசாகுதுங்க?’
‘இந்த வருஷத்தோட அறுபது முடியுது.’
‘ரொம்பத் தாமதமாத்தான் கல்யாணம் செஞ்சீங்களோ,’ என்று அவரது சொந்த வாழ்வில் என் பெரிய மூக்கை நுழைத்துத் துழாவினேன்.
‘ஆமாங்க. முப்பத்தஞ்சு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குடும்பத்துல நிறையப் பிரச்சனை. எல்லாம் முடிஞ்சு வர்றதுக்கு அத்தனை வருஷம் ஆயிடுச்சு. அப்புறம் அஞ்சு வருஷத்துக்குக் கொழந்த இல்ல. நாற்பது வயசிலதான் பொறந்துச்சு.’
ஆற்றின் மறுகரையில் கோயில் நிலங்களைப் பரம்பரையாகக் குத்தகைக்கு எடுத்துப் பராமரிக்கும் பெரியவர் வந்தார். பெயர் தெரிவதற்கு முன் நம் கிராமங்களில் சாதியை அறிவித்துவிடுகிறார்கள். அவர் பண்டாரம் என்று சொல்லியிருந்தார் தோப்புக்காரக் கவுண்டர். முன்பொருமுறை சந்திருக்கிறேன். குறுகிய வெண்தாடி வைத்திருந்தார். இரண்டு பொடியன்கள் உடனிருந்தார்கள். சின்னவன் வெற்றுடம்போடு துடியாய் இருந்தான். இடுப்பில் மட்டும் ஒரு சிறிய கருப்பு வேட்டித்துணி. முடி ஒட்டவெட்டிய தலை. சபரிமலை செல்ல மாலை போட்டிருக்கிறான். இரண்டாவது படிக்கிறான். பெரியவன் ஐந்தாவது படிக்கிறான். 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கு இரண்டு பஸ் மாறிச்செல்லவேண்டும். நடக்கவைக்கச் சங்கடமாக இருக்கிறதாம்.
‘சீக்கரம் சைக்கிள் வாங்கித்தாங்க’
இந்த விசாரிப்புகளோடு என் வாய் சும்மாயிருந்திருக்கலாம். அன்றுதான் நாக்கின் மீது மூக்கு ஏறி அமர்ந்துகொண்டிருந்ததே.
‘பசங்க உங்க பேரங்களா?’
‘காலாகாலத்துல கொழந்தை பிறந்திருந்தா எனக்கும் இந்த வயசில பேரம்பேத்தி இருந்திருக்குந்தான். இல்லீங்க தம்பி – இவங்க எம் பிள்ளைக.’
வெறுமையாக என்னைப் பார்த்தார். வருத்தம் எதையும் வெளிக்காட்டவில்லை. இந்தக் கேள்வி அவருக்குப் பழகியிருக்கவேண்டும்.
‘மொத சம்சாரத்துக்குக் கொழந்தை இல்லை. அதனால ரொம்ப வருஷத்துக்கப்புறம் ரெண்டாங்கலியாணம் பண்ணிக்கிட்டேன்.’
…
‘கொழந்தை இல்லாதப்போ சாதிசனம் எல்லாம் ஒதுக்கிவைச்சிட்டாங்க. ஜாஸ்தி பேச்சுவார்த்தை யாருகிட்டயும் கிடையாது. இப்ப இதுக பொறந்த பின்னாடித்தான் அண்ணன் தம்பின்னு உறவெல்லாம் மறுபடியும் ஒட்டத்தொடங்கியிருக்காங்க.’
பெரியவன் செய்தித்தாளைச் சத்தமாய்ப் படித்துக்கொண்டிருந்தான்.
‘என்ன நீ, இன்னும் எழுத்துக்கூட்டிப் படிக்கிற. இங்க வா…எப்படி எழுத்துக்கூட்டாம அப்படியே படிக்கிறதுன்னு சொல்லித்தர்றேன். உம் பேரென்ன?’
கட்டிலுக்கடியில் ஓடி ஒளிந்துகொண்டு பெயரை மட்டும் சொன்னான்.
‘நவீன் குமார்’
‘அட, ரொம்ப நவீனமாகத்தான் பேர் வைச்சிருக்கீங்க.’
‘உம் பேர் என்னடா,’ என்றேன் இளையவனிடம்.
‘சந்தியா,’ என்றாள்.
‘ஆத்துலேயே எந்நேரமும் குதிச்சு வெளையாடிகிட்டிருக்கறதாச்சு. தலைல ஈறும்பேனுமா இருக்குன்னு முடிய்ய ஒட்ட வெட்டிவிட்டிருக்கங்க,’ என்றார் அவள் தந்தை.
பின்னர் ஆற்றோரம் நடந்து சென்றபோது, அக்கரையில் அவர்களது தாயோடு சேர்ந்து ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். என் கண்படாத இடத்திற்கு தாய் அவசரமாக நகர்ந்துவிட்டார். இளம்பெண்ணாகத்தான் தெரிந்தார்.
‘அண்ணா, வாங்க, காப்பி சாப்பிடலாம்,’ என்று கூவினாள் சந்தியா.