கோவேறு கழுதைகள் – இமையத்தின் சுமையேற்றும் எழுத்து

(ஆம்னிபஸ் தளத்தில் வெளிவந்தது.)

அய்ன் ராண்ட எழுதிய ‘Atlas Shrugged’, பல இளைஞர்களின் ஆதர்ச நூலாக இருந்தது; இருப்பது. முதலாளிகளும், அறிவு ஜீவிகளுமே உலகத்தையும் அதன் சுமையையும் சுமப்பது போன்ற ஒரு சித்திரத்தை அளித்த நாவல் அது. அதற்கு முற்றிலும் எதிரான ஒரு சித்திரத்தை வரைகிறது இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’. சமூகத்தின் அடிநிலை மக்களின் முதுகில் ஒய்யாரமாய் அமர்ந்தே இந்தச் சமூகம் தன் சுகமான பயணத்தை மேற்கொள்கிறது. பலசமயங்களில் சுமையென்று கருதாமலே அவர்கள் இயல்பாகச் சுமக்கவும் செய்கிறார்கள்.

கோவேறு கழுதைகள் தலித் இலக்கியம் என்ற வகைமைகளுக்குள்ளெல்லாம் அடைபடாமல், என் பார்வையில், ஒரு மகத்தான இலக்கிய நூலாக மிளிர்கிறது.

படித்த, நடுத்தர, நகரத்து மக்களின் பார்வைக்கும் எட்டாத ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. ஆரோக்கியம் என்கிற ‘பற வண்ணாத்தி’தான் நாயகி. மேல் சாதியினர்க்கும் கீழ்ச்சாதியினர்க்குமான உரசல்களைப் பற்றியதல்ல இமையத்தின் இப்படைப்பு. இந்தியச் சமூக அடுக்கின் அடிநிலையிலும், மேலும் பல அடுக்குகள் இருப்பதை இந்நாவல் வெளிக்கொணர்கிறது. (அதனாலேயே இது வெளிவந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டது என்பதையும் அறிகிறேன்.) அடிநிலை மக்களின் முதுகில்தான் மேற்சாதியினர் பயணிப்பது என்பது ஒரு பொதுப்புரிதல். ஆனால, அந்தப் பொதுப்புரிதலைத் தாண்டி, அந்த அடிநிலை மக்களுக்கும் சுமைதாங்கியாய் இன்னுமொரு சமூகம் இருப்பதை நம் மூடிய கண்களுக்குள் காட்சியாக்குகிறார் இமையம். அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கும், ‘முண்டப் பயலே’ என்றழைத்து அதட்ட யாராவது இருக்கிறார்கள்; யாராவது தேவைப்படுகிறார்கள்.

அந்த கிராமத்தின் சமூக அடுக்கினை அக்கிராமத்தின் வடிவமைப்பே விளக்கிவிடுகிறது.

காலனியிருப்பது சற்றுச் சாய்வான பள்ளமான பகுதியில். ஆரோக்கியத்தின் வீடு அதைவிடப் பள்ளமான பகுதியில். ஆனால் நீர் வெளியேற சாய்கால் கொண்ட இடம். குடித்தெரு அவ்வளவு மேட்டுப்பகுதியில் இல்லையென்றாலும் மேடான இடத்தில்தான் இருந்தது.

ஆரோக்கியம் ஒரு பெரும் சமூக மாற்றத்தின் சுழலில் சிக்கித் தவிக்கிறாள். பல தலைமுறைகளாக மாறாதிருந்த ஓர் அமைப்பு அவளது காலத்தில் ஆட்டம் காண்கிறது. அந்த மாற்றங்கள் அவள் வாழ்வை அலைகழிக்கின்றன.

யதார்த்தமாகச் சொல்லப்பட்ட ஒரு கதையின் மூலமாகப் பல எதிர்நிலைகளைக் கட்டமைக்கிறார் இமையம். தன் கடந்தகால வாழ்க்கையை எண்ணியெண்ணி ஏங்குகிறாள் ஆரோக்கியம். அந்த ஏக்கம் நமக்கே பிடிக்காமல் நம்மையும் பீடிக்கிறது. ஆனால், அதே வேளை, அந்தக் கடந்த காலமும் அப்படியொன்றும் போற்றத்தக்கதாய் (நம் பார்வைக்கு) இல்லை. அவள் நிகழ்காலமும், எதிர்காலமும் அதைக்காட்டிலும் அதிகமாய் இருள்கவிந்திருக்கின்றன என்பதுதான் கடந்து காலத்தை உயர்த்திக் காட்டும் ஒரே காரணம். கடந்த காலச் சமூகச் செயல்பாடுகளின் விளைவுகளையும் சேர்ந்தே ஆரோக்கியமும் சவுரியும் சுமக்கிறார்கள். ஆசிரியர் குரல் என்று எதுவும் உரக்கக் கேட்பதேயில்லை. முழுக்க ஆரோக்கியத்தின் பார்வையிலேயே கதையை நகர்த்திச் செல்கிறார்.

ஆரோக்கியமும் பிறரும் பேசும் மொழி, பழக்கப்படாத நம் செவிகளில் பெரும்பாலும் வசைமொழியாகப் படுகிறது. ஆனால், அந்த வசைமொழிகளின் ஊடே, அவர்களின் உள்ளத்திலிருக்கும் பேரன்பினை உணரச் செய்ய முடிவதும் ஒரு பெருந்திறன்தான். எத்தனைதான் வசைகள் நிறைந்திருந்தாலும், வழக்குமொழியில் ஒரு தாளநயம் தொடர்ந்து தொனிக்கிறது.

“ஆரா மீனுக்கும், கொரல மீனுக்கும் நடு ஏரியில் சண்ட. விலக்கப் போன விரா மீனுக்கு உடைஞ்சுபோச்சாம் மண்ட.”
கற்பு பற்றிய பார்வையிலும் சில முரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு புறம், கருப்பாயி, பொன்னுசாமி போன்றவர்களின் கள்ள உறவுகளை அதிக எதிர்வினை இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் சமூகம்; ஆரோக்கியம் கூடத் தன் கணவனின் நடத்தை மீறலை மிக எளிதாகக் கடந்து செல்கிறாள்.
ஆரோக்கியம் களத்து மேட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, வைக்கோலுக்குப் பின்புறமிருந்து இரண்டு கருத்த நிழல்கள் வெளியே வருவதைக் கண்டாள். பிறகு வீட்டிற்கு வேகமாக நடந்தாள்.
“வரட்டும், இன்னிக்கு வூட்டுல வுடக்கூடாது.”
அதோடு அச்சம்பவம் முடிந்தது.
ஆனால், மேரி மற்றவர்கள் தன்னைப் பார்க்கும்போதும், கேலி பேசும்போதும் கூசிப்போகிறாள். பலாத்காரத்தின்போது கடுமையாகப் போராடுகிறாள். ‘மானம் மருவாத பூடும் சாமீ!’, ‘வேணுமின்னா என்னக் கொன்னு போடுங்கய்யா,’ என்று அலறுகிறாள். எனினும், என்னதான் மன உளைச்சலை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியிருந்தாலும், அதையும் அதிக சிதைவில்லாமற் கடந்துதான் போகிறார்கள் மேரியும், ஆரோக்கியமும்.
ஊர்ச்சோறு எடுத்து உண்பதை ஆரோக்கியமோ, சவுரியோ இழிவாகவே நினைப்பதில்லை.  “வண்ணாத்தி மவ வந்திருக்கேன், சாமீ, ” என்று சளைக்காமல் வீடுவீடாகச் சென்றுகொண்டேயிருக்கிறாள் ஆரோக்கியம். சாமியாரின் சமையற்காரனோடான உரையாடலின் போதுதான், அப்படி நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்ற உணர்வே ஆரோக்கியத்துக்கு ஏற்படுகிறது.
இப்படியே இருக்க வேண்டியதுதானா?
சமையற்காரனின் கேள்வி ஆரோக்கியத்திற்குப் பிடிபடவில்லை. எதற்காக இப்படியொரு கேள்வி கேட்கிறான். […] தன் வாழ்க்கையை, குடும்பத்தை, செய்யும் தொழிலைக் கேவலமானதாக்க் கருதித்தான் இப்படியெல்லாம் கேட்கிறான் என்று எண்ணிய ஆரோக்கியம் தன் வாழ்க்கை கேவலமானதுதானா என்று முதன்முறையாக எண்ணியவள் திடீரென்று குலுங்கி அழுதாள்.
அவர்களின் அடுத்த தலைமுறையோ, துணியெடுப்பதையும் ஊர்ச்சோறு வாங்கியுண்பதையும்விட்டு விலக எத்தனிக்கிறார்கள். மாற்றத்தை நாடும் புதிய தலைமுறையின் குரலாய் ஒலிக்கிறாள் சகாயம்.
“கட்டியிருக்கிற சேலைக்குள்ளார என்னா இருக்குனு ஒவ்வொரு வூட்ல ஆம்பளையும் மொறச்சிப் பாக்கறானுவ…அவனுவோ வூட்ல போயி துணியெடுக்கணுமா?”
மாற்றத்தை நோக்கி அவர்கள் செல்வதைத் தடுப்பது, ஊரார் அல்லர். ஆரோக்கியம் தான்.
அவர்களது வாழ்விடத்தைப் பற்றிய ஓர் எளிய வர்ணனை மூலம் எப்படிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள் என்கிற புரிதலை ஏற்படுத்திவிடுகிறார் இமையம்.
ஊருக்கும் வண்ணான் சக்கிலியக்குடிக்கும் இடையே கருவேலங்காட்டைப் பிளந்து ஒருபாதை இருக்கிறது. அது கொடிபோல் வளைந்து, நெளிந்து இருக்கும். ஒரு ஆள் மட்டுமே நடக்க வசதியான பாதை. இது மழைக்காலத்தில் முழங்கால் வரை சேறு வாங்கும். ‘சதக், புதக்’ கென்றுதான் நடக்கவேண்டும். வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இந்தப் புதருக்குள் பன்றிகளின் உறுமல், நாய்களின் குரைப்புக் கேட்கும். சில இரவுகளில் நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்கும். இந்தச் சத்தமெல்லாம் ஆரோக்கியம், பெரியான் குடும்பத்து நபர்களை ஒன்றும் செய்யாது.
இப்படியொரு வாழ்க்கைமுறை மீது அப்படி என்னதான் நம்பிக்கையும் பிடிப்பும் இருக்க முடியும் என்ற கேள்வி வாசகனைத் தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருக்கும்.  ஆரோக்கியத்துக்கோ, சிக்கல் அந்த வாழ்க்கைமுறையில் அல்ல. அவர்களை விரட்டுகிற மாற்றங்கள் தாம் அவளை வதைக்கின்றன. அவர்களுக்கு வரவேண்டிய கூலியான, மூணு முறம் வரகு இரண்டு முறம் ஆவதுதான் அவளுக்குப் பெரிதாகத் தெரிகிறது. அவர்களுக்குப் பாரம்பரியமாக தரப்பட்டுவந்த பலியிடப்பட்ட மாட்டின் தலை கிடைக்காதது தான் அவளுக்குப் பெருந்துயரமாகத் தெரிகிறது. அவளுக்குத் துணிகளைப் போடாமல், பறக்குடி மக்கள் புதிதாக வந்த இஸ்திரிக்காரனுக்குப் போடுவதுதான் மிகப்பெரிய சவாலாகத் தெரிகிறது. அவள் விரும்புவது வேறு வாழ்க்கைமுறையை அல்ல, அவள் செய்கிற வேலைக்குச் சரியான கூலியைத்தான். அதைக் கூலி என்றும் சொல்லமுடியாது. ஊர்மக்களின் வேலையைச் செய்கிறார்கள். ஊர்மக்கள் இவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்பதுதான் ஏற்பாடு. ஊர்மக்களின் அரவணைப்பு கிடைக்காத போது வருகிற ஆதங்கத்தில் தான்,
“எல்லாம் என்னுதுதான். ஆனா எனக்குன்னு எதுவுமில்லை. நான் எப்படிக் குடும்பம் பண்ணுறது சொல்லுங்கபாப்பம்?” என்கிறாள்.
“சாமீயோவ், வார்த்த என்னாமோ ருசிக்கிறது. வவுறு நெறயலயே சாமீ! மின்ன காலம்மாரி இல்லீங்க சாமி,” என்றும் புலம்புகிறாள்.
ஆரோக்கியத்துக்கும் விருப்புவெறுப்புகள் இருக்கின்றன. ஊர்ச்சோறு அவள் விரும்பியுண்ணும் உணவு. ‘இறங்குச் சோளம், சிகப்புச் சோளம், அரிசிச் சோளம், மரக்கட்டைச் சோளம், சம்பாச் சோளம் என்று காட்டில் விளைந்து கிடந்தாலும் சிகப்புச் சோளம்தான் ஆரோக்கியத்திற்குப் பிடிக்கும்.’
நிஜவாழ்வில் தான் சந்தித்த ஆரோக்கியத்தின் ஒப்பாரியைக் கேட்டுத்தான், இந்தக் கதை எழுதுவதற்கான உந்துதல் தனக்கு வந்ததாக, இமையம் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதனால்தானோ என்னவோ, ஒப்பாரிகள் கவித்துவமும் தத்துவமுமாய் நிறைந்து வருகின்றன.
பட்டேன் ஒரு கோடி
பாடுபட்டேன் முக்கோடி
எழுதி வெச்சிப் பாக்கியில்லே
எஞ்சினது ஒரு முயக் கோடித்துணி
—-*—-
எட்டுக்கால் நடந்து வரும்
ரெண்டுகால் நீட்டியிருக்கும்
சட்டியிலே நெருப்பு வரும்
சாதி சனம் கூட வரும்
கொட்டு மேளம் கொட்டி வரும்
கோடி சனம் கூட வரும்
மற்றவர்கள் மனம் கலங்கி
மவுன மாலை போட்டு வரும்
எட்டுக்கால் நடந்து வரும்
ரெண்டுகால் நீட்டியிருக்கும்
ஆங்காங்கே இயற்கையையும், விவசாயத்தையும், சுற்றச்சூழலையும் பற்றிப் பேசும் போது மட்டும், ஆசிரியர் குரல் கேட்கத்தான் செய்கிறது. 1994லேயே எழுதப்பட்ட நூல் என்பதைக் கணக்கில் கொள்ளும்போது இந்தக் குரலின் மதிப்பு கூடுகிறது.
மருந்தப் போடுறன், மாயத்தப் போடுறன்னு என்னத்தயோ கொண்டாந்து காட்டுல கொட்டுறானுவ. சோத்தத் தின்னா ருசியாவா இருக்கு? புள்ளெ உண்டாயி இருக்கிற பொம்மனாடிவோ களிமண்ணப் புட்டுப்புட்டுத் திம்பாளுங்க. அதுலகூட ஒரு மணம் இருக்கும். ஒரு ருசி இருக்கும். இந்தச் சோத்தத் தின்னா எந்தப் பயலுக்குத் தெம்பிருக்கும்?
——*——-
முன்பு மழை இல்லாமலிருந்தால்தான் பஞ்சம் ஏற்படும். இப்போது நிலைமை வேறு. முன்பு காடுகளாக இருந்தவற்றை எல்லாம் சீராக்கிப் பயிர் நிலமாக்கியும் உணவுப் பொருள் கிடைக்கவில்லை. கண்ணில் தென்படும் திசையெல்லாம் சவுக்கு, யூகலிப்டஸ் மரங்களாகத்தான் தெரிகின்றன. ஊரில் நிரந்தரப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. என்றென்றும் நீங்காப் பஞ்சம்.
“இந்த வருசம் சனங்க, கனமா பருத்திய இம்புட்டு ஊணித் தள்ளுறாங்களே, சோத்துக்கு என்ன பண்ணுங்க?
பணப்பயிரு செய்யுறாங்க. மய இல்ல. அதனால் பருத்திப் பணத்துக்குச் சோத்துக்கு வாங்கி நெல்லுச் சோறாத் திம்பாங்க.
அட யாங் கடவுளே! அநியாயத்துக்கு எல்லா ஊட்டிலும் பருத்தியா?”
வறுமையையே வாழ்க்கையாகக் கொண்டவோர் அறியப்படாத சமூகத்தைப் பற்றிய முக்கியமான ஆவணமாகவும், அதே சமயம் ஓர் அழுத்தமான இலக்கிய ஆக்கமாகவும் உருவாகியிருக்கிறது, கோவேறு கழுதைகள். வாசகன் மனதில் சில சுமையான கேள்விகளைச் சுமத்துகிறது: முக்கியமாக, ஒருவர் விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கைமுறையையும், அந்த வாழ்க்கைமுறைக்கு வரும் மாற்றங்களை அவர் எதிர்ப்பதையும், ஏற்றுக்கொள்ளமுடியாமல் விமர்சிக்க வெளியாட்களுக்கு இடமிருக்கிறதா? ஆனால், அந்த வாழ்க்கைமுறையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதே முந்தைய சமூகம் அதனையும் அதனோடு சேர்த்து அறியாமையும் அவர்கள் மீது சுமத்தியதால்தானே என்பதையும்  கணக்கில் கொண்டாகவேண்டும்.
“திங்கறதுக்குச் சோறும், படுக்கறதுக்கு எடமும் இருக்கிறவுங்களுக்குத்தான் கோவிலு, சாமீயெல்லாம். சொந்தம் பந்தமெல்லாம். சூத்துல துணியில்லாதவனுக்கு ஏது?” என்று முதல் பக்கத்திலேயே எழும் சவுரியின் கேள்வியில்,
“நல்ல காலை ஆகாரத்தை முடித்துவிட்டு, அதைவிடச் சிறந்த பகல் உணவுக்காகக் காத்திருக்கும்போது கடவுளைப் பற்றிப் பேசுவது இன்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் தினம் இரண்டு வேளைக்கு உணவில்லாத ஆயிரமாயிரம் பேர் முன்னே நான் எப்படிக் கடவுளைப் பற்றிப் பேசுவது? அவர்களுக்குள்ள ஒரே கடவுள் அவர்கள் உணவே. அவர்களுக்கும் வேலைவாய்ப்பு என்ற செய்தியை எடுத்துச்செல்லும் போதுதான் கடவுளின் செய்தியை எடுத்துச் செல்வதாகக் கூறமுடியும்,” என்ற காந்தியின் குரலும் கேட்கிறது.
நாவல்   :கோவேறு கழுதைகள்
 ஆசிரியர்: இமையம்
 க்ரியா பதிப்பகம், 1994.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: