காந்தியக் கல்வி : காந்தியத்தின் ஆதாரம்

காந்தி இன்று இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மீள்பதிவு இது.


காந்தியின் கல்விச்சிந்தனைகள் அவரது பிற கருத்துகள் அளவுக்கு அதிகம் கவனம் பெறாதவை. பல காந்தியர்களாலேயே முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாதவை. ’ஆதாரக் கல்வி’/ ‘அடிப்படைக் கல்வி’ (Basic education) என்றும், பின்னர் நயி தாலீம் (Nai Talim – புதிய கல்வி) என்றும் காந்தி தனது கல்விச் சிந்தனைகளைத் தொகுத்துக் கொண்டார்.   இன்றைக்குப் பல்வேறு நவீனக் கல்விமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், காந்தியின் ‘நயி தாலீம்’ முறையைப் புதிய பார்வையுடன் அணுகிப் பார்த்தால் அது இன்றும் நவீனத் தன்மையுடன் மிளிர்கிறது; பல வகைகளில் இன்றைய சூழலுக்கும் புரட்சிகரமானதாகத் தென்படுகிறது. காந்தியின் தாக்கம் நிறைந்த பிற எல்லாத்துறைகளையும் போலவே, காந்தியின் கல்வி பற்றிய சிந்தனைகளும் கல்வி என்ற தளத்தில் தனித்து இயங்கவில்லை. அவை சமூகம் முழுவதையும் தொட்டுப் பரவி நின்றன. வரலாற்றுப் பார்வையும், சமூக அக்கறையும், தனி மனித உயர்வும் இணைந்து அவரது கல்விமுறையை தனித்துவம் மிக்கதாகச் செய்கின்றன.

இந்தியக் கல்வியின் வரலாற்றுப் பின்னணியும் காந்தியின் கல்வி சார்ந்த சிந்தனைகளைச் செதுக்கியிருக்க வேண்டும்-

“எனது புள்ளிவிபரங்கள் மறுக்கப்படமுடியாதவை என்கிற நம்பிக்கையோடு சொல்கிறேன் – ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய இந்தியாவில் படிப்பறிவு  குறைந்துள்ளது; பர்மாவிலும் அவ்வாறே; பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியா வந்தபோது, அங்கிருக்கும் முறைகளை ஏற்றுக்கொள்ளாமல், வேரறுக்கத் தொடங்கியதே இதற்குக் காரணம். மண்ணைத் தோண்டி, வேரைப் பார்க்கத் தொடங்கினர்; அப்படியே விட்டனர்; அழகிய மரம் மரித்தது,”

என்று 1931ல் லண்டனில்  சத்த்தம் ஹவுஸ் என்ற இடத்தில் காந்தி பேசினார். அதன்பிறகு சர் வில்லியம் ஹர்தோக் என்பவர் – டாக்கா கல்லூரியில் முதல்வராக இருந்தவர் – காந்தியின் கருத்துடன் முரண்பட்டு வாதாடினார். காந்தி அளித்த ஆதாரங்களைத் தொடர்ந்து நிராகரித்தார். அவர்களது விவாதம் 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. இருவரும் தத்தம் நிலைகளிலிருந்து விலகவேயில்லை. காந்தியின் கல்வி சார்ந்த கருத்துகளுக்கு இருந்த வரலாற்றுப் பார்வையை இந்த விவாதம் வலுப்படுத்தியது. இந்த விவாதத்தை மையமாக வைத்துத்தான், தரம்பால்(Dharampal)  ‘அழகிய மரம்’ (The Beautiful Tree) என்ற நூலை எழுதினார்.

வரலாற்றுப் பின்னணி

“இந்தியாவில் நீண்ட காலமாய் நிலைபெற்று வளர்ந்திருந்த பண்பாட்டின் மூலமாக நாம் உணர வேண்டிய உண்மை இதுதான்: முன்பு இந்தியாவுக்கென்று ஒரு கல்விமுறை இருந்திருக்கிறது; அதுதான் ‘தேசிய’ என்ற அடைமொழியோடு குறிக்கக்கூடிய ஒரே அம்சம்.”
– காந்தி, யங் இந்தியா, 20-3-1924.

சிந்து சமவெளி காலம் முதலே இந்தியாவில் எழுத்துமுறை என்று ஏதோவொன்று இருந்திருக்கவேண்டும். அதற்கான ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன. ஆனால், அந்த எழுத்துமுறையைப் படிக்கும் வழியை இன்னமும் அறிந்துகொள்ள முடியவில்லை. பல நூற்றாண்டுகளாய் வேதங்கள் வாய்மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. புத்த, சமண கல்வி மரபுகளும், பிற்காலத்தில் இஸ்லாமியக் கல்விமரபும்  உருவாயின. தக்சசீலம், நளந்தா போன்ற இடங்களில் ஆதி பல்கலைக்கழங்கள் அமைந்தன; மதுரை, காஞ்சி போன்ற நகரங்கள் கல்விக்குப் பெயர்பெற்றன. இலக்கியம், இலக்கணம், கலை, மதம், தத்துவம் என்று பலதுறைகளிலும், தமிழ், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் என்று பல மொழிகளிலும் நூல்கள் படைக்கப்பட்டன.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.’

என்று கூறும்படியான உயர்ந்த நிலை கல்விக்கு வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்புவரை இந்த நிலை ஓரளவு நீடித்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவின் கல்விநிலை குறித்து ஆராய்ந்த பல பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவில் ஆரம்பக் கல்வி பரவலாக இருந்ததைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளனர்.

சென்னை மாகாணத்தின் ஆளுனராக இருந்த ஸர் தாமஸ் மன்றோ, ‘ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது,’ என்று எழுதியுள்ளார். அவர் சேகரித்த புள்ளி விபரங்களின்படி, மூன்றில் ஒரு ஆண்பிள்ளை ஆரம்பக் கல்வி பெற்றுக் கொண்டிருந்துள்ளனர். இந்து, இஸ்லாமிய சமூகங்கள் இரண்டுக்கும் இப்புள்ளிவிவரம் பொருந்தும். தொடக்கக்கல்வி 5 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துள்ளது. வீட்டிலேயே படித்தவர்களின் எண்ணிக்கயை அவர்களால் அளவிடமுடியவில்லை. ஆனால், பெண்கள் மிக அரிதாகவே படித்திருக்கின்றனர். சோதிடம், வானவியல், மருத்துவம் தவிர பிறதுறைகளில் உயர்கல்வி பெரும்பாலும் பிராமணர்களுக்கே கிடைத்திருக்கிறது. தீண்டாமையின் காரணமாய் தலித்களுக்குப் பெரும்பாலும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிராமணர்கள் அல்லாத வேறு பிற சாதியினரும் (வைசியர்களும் சூத்திரர்களும்) பெருமளவில் ஆரம்பக் கல்வி பெற்றதை மன்றோவின் ஆய்வுகளின் சில பகுதிகளில் காணலாம்.

இதே போல, வங்காளம், பஞ்சாப், பம்பாய் மாகாணங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும் ஆய்வுகள் செய்து ஒத்த முடிவுகளை அடைந்துள்ளனர். வங்காளத்தில் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்ததாக வில்லியம் ஆதாம் என்பவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் பெரும்பாலும் சூத்திர சாதிகளைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். டாக்டர் ஜி. டபில்யூ. லீட்னர் பஞ்சாபில் 1850களில் 3,30,000 மாணவர்கள் இருந்ததாகவும், 1882ல் 1,90,000க்குக் குறைந்துவிட்டதாவும் எழுதியுள்ளார்.

அன்றைய கல்வியின் தரம் குறித்தும், ஆசிரியர்கள் தரம் குறித்தும் முரணான கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் குறைந்தபட்சமாக எழுத்துத்திறன், இலக்கணம்,  நீதி போதனைகள், வணிகத்துக்குத் தேவையான அடிப்படைக் கணிதம் கற்றுத்தரப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

இந்த ஆய்வுகள் நடந்தபோதே, இந்தியக் கல்விமுறை சரிந்து கொண்டிருந்துள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 1813ல் நிறைவேற்றப்பட்ட சார்ட்டர் ஏக்ட் (Charter Act), இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தியது; ஒரு லட்சம் ரூபாய் நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் ஆங்கிலேயர்களின் தலையீடு கல்வித்துறையில் அதிகரிக்கவும், இந்தியக் கல்விமுறை மேலும் சிதைந்துள்ளது.

18ம் நூற்றாண்டுக்கு முன் மதபோதகர்களின் செயல்பாடுகள் பெருமளவு இந்திய மொழிகளிலேயே இருந்துள்ளன. தங்கள் மொழியைத் திணிக்க அவர்கள் முயலவில்லை. மாறாக மக்களின் பேசுமொழி மூலமாக மதபோதனைகள் செய்வதன் சாதகங்களை அறிந்திருந்தனர். பிற போதகர்களின் பயன்பாட்டுக்காக இந்திய மொழிகளில் அகராதிகள், இலக்கண நூல்கள் ஆகியவற்றை எழுதினர். கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆரம்ப காலங்களில் இந்திய மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கல்கத்தா மதராஸா, பெனாரஸ் சமஸ்கிருதக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கினர். பின்னர் ராஜாராம் மோகன்ராய், மெக்காலே ஆகியோரின் தாக்கத்தில் ஆங்கிலத்துக்கான முக்கியத்துவம், குறிப்பாக உயர்கல்வியில், பெருகத்தொடங்கியது.

ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியப் பள்ளிகளை முனைப்புடன் மூடியதாகத் தெரியவில்லை. அரசின் ஆதரவு இல்லாமலும், வருவாய் போதாமலும் அவை தாமாகவே அழிந்துள்ளன.  ஆங்கிலேயர்களின் கடுமையான நிலவரிக் கொள்கைகள் கிராமங்களின் தற்சார்பினைச் சிதைத்ததும், குடும்பங்களை கல்விக்கென நிதி ஒதுக்க இயலாத ஏழ்மைக்குத் தள்ளியதும் இந்திய சுதேசப் பள்ளிகள் படிப்படியாக அழிவதற்குக் காரணமாயின.

இந்தியக் கல்விநிலை சரிந்த அதே காலகட்டத்தில்தான், நேர்மாறாக, இங்கிலாந்தின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள் 13/14ம் நூற்றாண்டுகளில் தொடங்கபட்டிருந்தாலும், மிகக்குறுகிய அளவில், உயர் வகுப்புகளுக்கு மட்டுமே உரித்தாயிருந்தன. ‘உழவன் மகன் உழவை மேற்கொள்ள வேண்டும்; கைவினையாளரின் மக்கள் அவர்களது பெற்றோர் தொழிலையே மேற்கொள்ள வேண்டும்; சீமான்களின் குழந்தைகள் அரசாங்கத்தையும் சாம்ராஜ்யத்தையும் நிர்வகிக்கும் அறிவினைப் பெறவேண்டும். மற்ற எல்லா நாடுகளைப் போலவும் நமக்கும் உழவர்களின் தேவை உள்ளது: எல்லா வகையான மக்களும் பள்ளி செல்ல வேண்டியதில்லை,’ என்னும் கொள்கைதான் இங்கிலாந்திலும் நிலவியது.

1792ம் ஆண்டில், 40000 மாணவர்கள்தான் பள்ளி சென்றுகொண்டிருந்தனர். அந்த எண்ணிக்கை, அடுத்த அரை நூற்றாண்டில் பன்மடங்கு பெருகி, 1851ல் 21,44,337 ஆக உயர்ந்தது. 1801ல் 3363 பள்ளிகளே இருந்துள்ளன; 1851ல் 461114 பள்ளிகள் உருவாகியிருந்தன. ஆனால் அப்போதும் தொடக்கக்கல்வி சராசரியாக ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்துள்ளது.

இங்கிலாந்து இவ்வளவு பெரும் மாற்றத்தைக் குறுகிய காலத்தில் அடைந்ததற்குப் பல காரணங்கள் கூறலாம். இந்த மாற்றத்தை நிகழ்த்திய முக்கியமான இருவர், ஆண்ட்ரூ பெல் மற்றும் ஜோசப் லான்கெஸ்டர். ஆண்ட்ரூ பெல் மதராஸ் முறை (Madras System) என்ற கல்வி முறையை, இந்தியக் கல்விமுறையைக் கவனித்து உள்வாங்கி, சென்னையில்தான் உருவாக்கினார். பின்னர் அதே முறையை இங்கிலாந்தில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தினார். அந்த முறையை மேலும் வளர்த்தெடுத்து, ஜோசப் லான்கெஸ்டர் பெரிய அளவில் தனது ‘மாணவர் தலைவர் முறை’ (Monitorial method) மூலம் எடுத்துச் சென்றார். இங்கிலாந்திலிருந்துதான் இந்தியா நவீனக் கல்விமுறையை இறக்குமதி செய்தது என்கிற பொதுபுரிதலுக்கு முற்றிலும் மாறானது, இங்கிலாந்து தனது கல்வி மலர்ச்சிக்கு இந்தியாவிற்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது என்கிற செய்தி.

தரம்பால், தனது ‘அழகிய மரம்’ நூலில் இச்செய்திகளைத் தொகுத்துத் தருகிறார். சுதந்திரத்திற்கு முன்பு எழுதிய ஜே.பி. நாயக், மேஜர் பி.டி.பாசு, ஃப்.இ.கீய் (Rev.FE Keay) ஆகியோர் தமது நூல்களிலும் இதே தரவுகளைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். அவர்களுக்கும் முன்பே, பல்வேறு அறிஞர்களால், இக்கருத்துகள் பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்தன. அவற்றின் தாக்கம் காந்தியின் மீதும் இருந்தது என்பதையும், அது மேலும் வலுப்பட்டதையும், சர் வில்லியம் ஹர்தோக் உடனான விவாதத்தின் மூலம் நாம் காணலாம்.

இத்தகையதொரு வரலாற்றுப் பின்புலத்தில்தான் காந்தி அன்றைய கல்விமுறையை முற்றிலும் நிராகரித்து, புதிய பாதையைத் தேடத் தொடங்கினார்.

காந்தியச் சிந்தனைகளின் வளர்ச்சி

காந்தி ‘அடிப்படைக் கல்வி’ என்ற பதத்தை 1938லும், நயி தாலீம் என்பதை 1944லும்தான் பயன்படுத்தினார். ஆனால், 1890களிலிருந்தே கல்வியில் அவர் பல்வேறு சோதனைகளைச் செய்து வந்திருக்கிறார். அவரது முதற்சோதனைகள் அவரது மகன்களின் வாயிலாகத்தான் நடந்தன. தென்னாப்பிரிக்காவிலிருந்த ஆங்கிலப் பள்ளிகளுக்கு அவரது பிள்ளைகளை அனுப்ப அவருக்கு மனமில்லை. பயன்களைவிட பாதிப்புகளே அதிகம் என்று கருதினார். அவரது பிள்ளைகள் நால்வருக்கும் அவரே கல்வி கற்றுத்தர முயன்றார். கடும் வேலைப் பளுவுக்கும், போராட்டங்களுக்கும் இடையில் அவர்களுக்கும் அவருக்கும் திருப்தியான கல்வியை அவரால் தரமுடியவில்லை. பின்னர் அவர் அமைத்த டால்ஸ்டாய் பண்ணையில் இருந்த குழந்தைகள் எல்லாருக்கும் காந்தியும் அவரது சகாக்களுமே கல்வி அளித்தனர். 20-30 குழந்தைகள் அங்கிருந்தனர்; தமிழ், குஜராத்தி, தெலுங்கு, ஹிந்தி என்று வெவ்வேறு மொழி பேசினர்;  ஹிந்து, முஸ்லிம், பார்சி, கிருத்துவம் என்று பல மதங்களைச் சார்ந்திருந்தனர். சமையல், தோட்டவேலை, பட்டறை வேலை, செருப்பு தைத்தல், கழிவகற்றல் என்று பல வேலைகளிலும் ஈடுபட்டனர். கூடவே 2-3 மணிநேரம் முறையான வகுப்புகளும் நடந்தன. எழுத்து, கணிதம், பொது அறிவு, வரலாறு, புவியியல், அறிவியல் என்று பல பாடங்களும் நடத்தப்பட்டன. காந்தி தான் சிறையில் கற்றுக்கொண்டதை வைத்து, தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் எழுதப் பழக்கினார். மதம் சார்ந்த நூல்களும் கற்பிக்கப்பட்டன. ‘எனது நம்பிக்கையும் துணிச்சலும் உச்சத்திலிருந்த நாட்கள் அவை,’ என்றார் காந்தி. அரசியல் காரணங்களால், அந்தச் சோதனை முடிவுக்கு வந்தது. ஒரு வருடமே நீடித்த இந்தச் சோதனை காந்தியின் சிந்தனையைச் செழுமைப்படுத்தியது.

இந்தியா திரும்பியபின், ஒத்துழையாமை இயக்கத்தின்போது, மாணவர்களைப் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். பிரிட்டிஷ் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அவர்களைத் துறக்கச் செய்தார். அவரது அழைப்பையேற்றுப் போராட்டத்தில் குதித்த மாணவர்களுக்காக குஜராத் வித்யாபீடம் உட்பட பல சுதேசிக் கல்வி நிறுவனங்களும் ஆசிரமங்களும் தொடங்கப்பட்டன. 1938ல் ‘அடிப்படைக் கல்வி’ பற்றி காந்தி எழுதத்தொடங்கிய பிறகு, தாலீமி சங்கம் என்று அமைப்பு உருவாக்கப்பட்டு, பல மாகாணங்களில் காந்திய முறையில் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின் காங்கிரஸ் அரசுகள் கலைக்கப்பட்டபின், அந்த முயற்சிகள் தடைபட்டன. வெகுசில இடங்களில் மட்டும் நயி தாலீம் பள்ளிகள் இயங்கின.

தென்னாப்பிரிக்கச் சோதனைகளின் ஆரம்ப நாட்கள் தொட்டு, நயி தாலீம் என்கிற ஒரு முழுமையான வடிவத்தை அடையும்வரை, காந்தியின் சிந்தனைகள் தொடர்ந்து வளர்ந்து, மாறி, செம்மையாகிச் செதுக்கப்பட்டு வந்தன. அவரது கல்விமுறையின் இறுதி வடிவத்தை அறியும்முன், அவரது சிந்தனைகளின் போக்கினைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

1. மக்களின் பண்பாட்டோடும் வாழ்க்கையோடும் கல்வி இயைந்திருக்க வேண்டும் என்று காந்தி கருதினார். நம் நீண்ட பண்பாட்டின் தொடர்ச்சியை இழக்கச் செய்ததையே, அன்றைய கல்வி முறையின் மிகப்பெரும் தீமையாகப் பார்த்தார்.

“ஆங்கிலப் பள்ளிகளுக்குத் தம் குழந்தைகளை அனுப்பிய பெரும்பாலான மக்கள் உழவர்கள்; கடவுள் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஆண்கள், பெண்கள். இந்த இளைஞர்கள் கல்வி கற்றுத் திரும்பும்போது விவசாயம் பற்றி எதுவும் அறியாதவர்களாகவும், தம் பெற்றோர்களின் தொழில் குறித்த வெறுப்பு நிறைந்தவர்களாகவும், கடவுள் நம்பிக்கையைத் தாண்டி வளர்ந்துவிட்டதாகத் தம்மைக் கருதுபவர்களாகவும் மாறிவிடுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பிட்ட குறைந்த அளவிலான குமாஸ்தாக்களும், உதவியாளர்களுமே அரசாங்கத்திற்குத் தேவைப்பட்டார்கள் என்பதாலேயே ஆபத்தான இப்பிளவு விளைவித்த துன்பியல் நிகழ்வு  மட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை நிலையை மறைக்கவிட்டுவிடக்கூடாது,” என்று எழுதினார் காந்தி. (யங்க் இந்தியா, 20-3-24)

2. ஆங்கிலவழிக் கல்வி குறித்துக் கடுமையான விமர்சனங்கள் கொண்டிருந்தார். ஆங்கிலம் ஒரு மொழியாகக்கூட அனைவரும் கற்கவேண்டியதில்லை, தேவைப்படுவோர் மட்டும் கற்றால் போதும் என்று கருதினார். அவரது தீவிரக் கொள்கைகளில் சில முரண்பாடுகள் கொண்டிருந்த ரவீந்திரநாத் தாகூரிடம்,

“எனது வீட்டைச் சுற்றிலும் சுவரெழுப்பிச் சாளரங்களை அடைத்துவிட நான் விரும்பவில்லை. எல்லா நிலங்களின் பண்பாடுகளும் என் வீடெங்கும் முடிந்தவரை சுதந்திரமாக உலவுவதையே விரும்புகிறேன். ஆனால் அவை எவற்றாலும் நான் அடித்துச்செல்லப்பட மறுக்கிறேன். மற்றவர்களின் இல்லங்களில் ஓர் ஊடுருவியாக, பிச்சைக்காரனாக, அடிமையாக வாழ மறுக்கிறேன். பொய்யான பெருமைக்காகவும், கேள்விக்குரிய சமூக ஆதாயங்களுக்காகவும் எனது சகோதரிகளின் மீது ஆங்கிலம் கற்க வேண்டிய பளுவினைச் சுமத்த மறுக்கிறேன்,”
என்று வாதிட்டார். (யங்க் இந்தியா, 1-6-21)

தாய்மொழிவழிக் கல்விதான் பயன்தரும் என்று நம்பினார். அது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றுகூட வாதிட்டார்.

“அந்நியமொழி பயிற்றுமொழியானது நம் குழந்தைகளைத் தம் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக்கிவிட்டது. நடப்பு முறையின் மிகப் பெரிய துன்பியல் விளைவு இதுதான். அந்நியமொழிக் கல்வி நம் பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துவிட்டது. ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரம் எனக்கிருந்தால், இன்றே நம் சிறார்களை அந்நிய மொழி மூலமாகப் பயிற்றுவித்தலை நிறுத்திவிடுவேன். எல்லா ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும், பதவிநீக்கம்கூட நிகழலாம் என்னும் அச்சுறுத்தலோடு, இந்த மாற்றத்தை உடனே அறிமுகப்படுத்தச்செய்வேன். பாடநூல்கள் உருவாக்கப்படுவதற்குக்கூட நான் காத்திருக்கப் போவதில்லை. இந்த மாற்றத்தை அவர்கள் உடனே பின்பற்றவேண்டும். இது உடனடித் தீர்வு தேவைப்படும் ஒரு கேடு.” (யங்க் இந்தியா, 1-9-21)

“எண்கணிதம், இயற்கணிதம், வடிவியல், வேதியல், வானவியல் போன்ற பாடங்களில் நான்கு ஆண்டுகளில் நான் கற்றவற்றை, பயிற்றுமொழி ஆங்கிலமாக அல்லாமல் குஜராத்தியாக இருந்திருந்தால், நான் ஒரே ஆண்டில் கற்றிருப்பேன். அந்தப் பாடங்களைப் புரிந்துகொள்ளுதல் இன்னும் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்திருக்கும். […] இந்த ஆங்கிலப் பயிற்றுமொழி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இடையே கடக்கமுடியாத ஒரு தடையை ஏற்படுத்தியது.” (ஹரிஜன், 9-7-38)

தாய்மொழியைப் பயிற்றுமொழியாக்கக் கோரிய அதே வேளையில், இந்துஸ்தானியை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ள எல்லா மொழியினரையும் அறிவுறுத்தினார்.

“ஒரு சராசரி வங்காளியால், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் ஒதுக்க முடிந்தால்,  இரண்டே மாதங்களில் இந்துஸ்தானியைக் கற்றுக் கொள்ளமுடியும்; திராவிடர்களால் அதே வேகத்தில் ஆறு மாதங்களில் கற்றுவிட முடியும். எந்த ஒரு வங்காளியாலும் திராவிடராலும் ஆங்கிலம் கற்பதில் இதே போன்ற நிலையை அடைந்துவிட முடியாது. ஆங்கில அறிவு, ஒப்பீட்டளவில், ஆங்கிலம் அறிந்த மிகச்சில இந்தியர்களோடுதான் உரையாடலைச் சாத்தியமாக்குகிறது; இந்துஸ்தானி அறிந்துகொள்வதன் சாத்தியமோ நம் நாட்டில் மிக அதிகமான குடிமக்களோடு உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.” (யங்க் இந்தியா, 2-2-21)

அவரைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தானி என்பது சமஸ்கிருதத்தின் தாக்கம் கொண்ட ஹிந்தியும், பாரசீகத்தின் தாக்கம் நிறைந்த உருதுவும் ஒன்றிய ஒரு மொழி. அவர் ஹிந்தியும் உருதுவும் இருவேறு எழுத்துமுறைகளைக் கொண்ட ஒத்த மொழிகளெனவே கருதினார்.  நடைமுறையில் வடநாட்டு மக்கள் பேசும் மொழி ஒன்றுதான், இந்து மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில்தான் சமஸ்கிருமயமாதலும், பாரசீகமயமாதலும் நிகழ்ந்துள்ளதாகக் கருதினார். அவர் ஹிந்தி என்று பொதுவாகக் குறிப்பிடுவதும் இந்த ஹிந்துஸ்தானியையே.

3. சமூக சேவை, கல்வியின் அங்கமாக இருக்கவேண்டும் என்று உறுதிபடக் கூறினார்:

“கல்வியின் இறுதிநோக்கம் சேவையாகத்தான் இருக்கமுடியும். ஒரு மாணவன் படிக்கும்போதே சேவை செய்யும் வாய்ப்பு கிட்டினால், அதை அவன் ஓர் அரிய வாய்ப்பாகக் கருதவேண்டும்; கல்வி தடைபட்டதாகப் பார்க்காமல், கல்வி முழுமை பெற்றதாகப் பார்க்கவேண்டும்” (யங்க் இந்தியா, 13-10-27)

“உண்மையான கல்வி என்பது உங்களிலிருந்து சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் உள்ளது. மனிதம் என்கிற புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறென்ன இருக்க முடியும்? தினம்தினம் ஹரிஜனக் குடியிருப்புக்குச் சென்று, ஹரிஜன மக்களை ஒரே குடும்பமாகக் கருதுவதைவிடச் சிறந்த கல்வி வேறென்ன இருக்க முடியும்? அது ஒரு மகத்தான, புனிதப்படுத்தக்கூடிய கல்வியாக இருக்கும். என்னுடைய நம்பிக்கை குறுகிய ஒன்றல்ல. மனித சகோதரத்துவத்தை அடைய வைக்கக்கூடியது.” (ஹரிஜன், 30-3-34)

4. பாட புத்தகங்களுக்குக் கொடுக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் காந்தி கவனிக்கத் தவறவில்லை. பாட புத்தகங்கள் யாருக்கானவையாக அமையவேண்டும் என்பதைக் குறித்து ஒரு புதிய பார்வையை முன்வைத்தார்:

“இந்தியாவில், பல்வேறு பாட புத்தகங்களைச் சார்ந்திருப்பதால் கிராமக் குழந்தைகள் பெருவாரியானவர்களுக்கு கற்கும் வழி பறிக்கப்படுகிறது. அதனால், இந்தியாவில், அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில், பாட நூல்கள் ஆசிரியர்களுக்கானவையாகவே இருக்க வேண்டும்; மாணவர்களுக்கல்ல.” (யங்க் இந்தியா, 16-9-26)

5. சிறந்த கல்வி முறைகள் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதிலும் காந்தி தெளிவாக இருந்தார். பாரம்பரிய இந்தியக் கல்வி முறையின் மிகப்பெரிய பலவீனம், அது எல்லாத் தரப்பு மக்களையும், பெண்களையும் ஒரே சீராகச் சென்றடையவில்லை என்பதுதான். இந்தக் குறைபாட்டினை விலக்கவேண்டும் என்கிற அவரது முனைப்பு, கல்வி உலகில் ஒரு புதிய மாற்றத்தைக் கொணர்ந்த மரியா மாண்டிசொரிக்கு, காந்தி எழுதிய ஒரு கடிதத்தில் வெளிப்படுகிறது.

“குழந்தைகள் மீதுள்ள அன்பினால், நீங்கள் உங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் அவர்களுக்குக் கற்பித்து, அவர்களிடமிருந்து மிகச்சிறந்த ஆற்றல்களை வெளிக்கொணர முனையும் அதே வேளையில், இத்தகைய பயிற்சியைப் பெறுவது செல்வந்தர்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பரம ஏழைகளின் குழந்தைகளுக்கும் சாத்தியமானதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.” (யங்க் இந்தியா, 19-11-31)

பெண்கல்வி குறித்த அவரது நிலைப்பாடு பண்பட்டுக்கொண்டே வந்தது. பெண்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்திய முன்னோடிகளில் ஒருவராக இருந்தபோதிலும், பெண்கல்வி பற்றிய அவரது ஆரம்பகாலக் கருத்துகள் சில, இன்றைய பெண்ணியப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வாய்ப்பில்லை. பெண்களுக்கு இல்லறத்தைச் சிறப்பாகப் பேண உதவும் கல்விதான் அவசியம் என்று 1918ல் கருதினார். அப்போதும் மற்ற துறைகள் பெண்களுக்கு மறுக்கப்படவேண்டும் என்று கூறவில்லை – ஆண்களும் பெண்களும் சமமென்ற போதும், ஒரே மாதிரியான கல்வி கூடாது; அவரவர் பொறுப்புகளுக்குப் பொருத்தமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால், 1939ல் அவரது பார்வை பிற திசைகளில் பயணித்திருப்பதைக் காணலாம்.

“பெண்களின் எழுத்தறிவின்மையைப் பொருத்தவரை, அதன் காரணம், ஆண்களிடம் இருப்பது போல், சோம்பலோ செயலின்மையோ அல்ல. இன்னும் வலிய காரணம், காலங்காலமாய் நம் பாரம்பரியம் அவர்களைக் கீழானவர்களாய் முத்திரை குத்தியதுதான். ஆண் அவளைத் தனது உற்ற துணையாகவும், மேலான பாதியாகவும் கருதாமல், வீட்டு வேலைப்பளுவைச் சுமத்தியும், தன் இச்சையைத் தீர்க்கும் கருவியாக்கியும் விட்டான்.  இதன் விளைவு நம் சமூகத்தில் இருக்கும் அரை-முடக்க நிலை. பெண் நம் இனத்தின் தாய் என்று சரியாக அழைக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்ய அவளுக்கும் நமக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.” (ஹரிஜன், 18-2-39)

6. காந்தியின் கல்விச் சிந்தனைகளில் அதிக அழுத்தம் பெற்ற அம்சம் தொழிற் பயிற்சி. தென்னாப்பிரிக்காவில், ஜான் ரஸ்கினின் கடையனுக்குக் கடைத்தேற்றம் நூலைப் படித்து மறுஆக்கம் செய்தது முதலே உடலுழைப்பின் அவசியத்தை வற்புறுத்துபவராக காந்தி  இருந்திருக்கிறார். உடலுழைப்பு சார்ந்த தொழிற் பயிற்சி, கல்வியின் பகுதியாக இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

“மழலைப் பருவம் முதலே உடலுழைப்பின் மதிப்பினைக் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும்; நம் குழந்தைகளுக்கு உடலுழைப்பை வெறுக்கக் கற்பித்துவிடக்கூடாது. ஒரு விவசாயியின் மகன், பள்ளி சென்று முடித்தபின், அவன் இப்போது ஆகிவிடுவதுபோல், நிலத்தில் வேலை செய்யத் தகுதியற்றவனாகிவிடுதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.” (யங்க் இந்தியா, 1-9-21)

தொழிற்பயிற்சி என்று சிந்திக்கத்தொடங்கியபின், அவரது விருப்பத்துக்குரிய தொழிலான நூல் நூற்றல் கவனப்படுத்தப்படாமல் இருக்க முடியுமா?

“எதிர்காலத்தின் எந்த ஒரு பாடத்திட்டத்திலும், நூற்றல் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். எப்படி நம்மால் சுவாசிக்காமலும் உண்ணாமலும் இருக்கமுடியாதோ, அவ்வாறே, வீட்டில் எல்லாரும் நூற்பதை மீட்டுயிர்க்காமல், பொருளாதாரச் சுதந்திரம் அடைவதும், இந்தப் பழம்பெரும் பூமியிலிருந்து வறுமையை விரட்டுவதும் சாத்தியமாகாது.” (யங்க் இந்தியா, 19-1-21)

7. கல்வி அறிவுக்கும் உடலுக்கும் மட்டுமானதன்று, இதயத்துக்குமானது என்று நம்பினார். தகைமையை, குணநலனை வளர்க்கும் கல்வியையே கல்வியாக ஏற்றுக்கொள்கிறார்.

“நாம் கற்றவை அனைத்தும், வேதங்களை ஓதுதலும், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், இன்ன பிறவற்றின் அறிவும் நமக்கு எதையும் ஈட்டித்தாரா – இதயத்தில் முழுமையான தூய்மையை வளர்த்துக்கொள்ள உதவாவிடில். எல்லா அறிதலின் முடிவும் தகைமையைக் கட்டமைப்பதாகவே இருக்கவேண்டும்.”  (யங்க் இந்தியா, 8-9-27)

8. பள்ளிகள் அரசாங்கத்தின் உதவியை மட்டுமே நம்பி இயங்குவதை காந்தியின் சுதந்திர வேட்கை கொண்ட மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதிலும் குறிப்பாய், அரசாங்கத்தின் வருவாய் மக்கள் குடிப்பதிலிருந்தே வருவது அவரது அறச்சிந்தனைக்கு எதிராக இருந்தது.

“குடியிலிருந்து வரும் வருவாய் மூலமாகக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவது, இந்நாட்டிற்குப் ஆழ்ந்த தலைகுனிவைத் தரும் செயல்பாடு.” (யங்க் இந்தியா, 8-6-21)

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகத்தான் பள்ளிகளுக்கான தற்சார்பு முறை பற்றி முற்றிலும் புதியதோர் பாதையில் அவரது சிந்தனை பயணிக்கத் தொடங்கியது.

“ஒவ்வொரு பள்ளியிலும் ராட்டையில் நூற்பது அறிமுகப்படுத்தப்பட்டால், கல்விக்கான நிதி திரட்டுவது குறித்த நம் சிந்தனைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படும். பள்ளியை 6 மணி நேரம் நடத்தி, மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கமுடியும். […] வகுப்பறைக் கல்விக்கு ஆறுமணி நேரத்தில் இரண்டு மணி நேரம் ஒதுக்கலாம். ஒவ்வொரு பள்ளியும் தற்சார்பு அடைந்ததாக அதிக முனைப்பின்றி எளிதில் மாற்றப்படுவதைக் காணலாம்; அனுபவமிக்க ஆசிரியர்களை நம் நாட்டின் பள்ளிகளில் அமர்த்தலாம்.” (யங்க் இந்தியா, 30-3-21)

9. கடைசியாக மனம், உடல், ஆன்மா மூன்றையும் இணைக்கும் ஒருங்கிணைந்த கல்வி முறையை அடைய விழைந்தார்.

“மனம் மற்றும் உடலின் வளர்ச்சி, ஒத்த ஆன்ம விழிப்போடு கூடி நிகழ்ந்தால் அன்றி, ஒரு குறைபட்ட, ஒருபுறம் சார்புடைய செயல்பாடாகவே அமைந்துவிடும்.” (ஹரிஜன், 8-5-37)

10. உயர் கல்வி குறித்த காந்தியின் நிலைப்பாடும் மற்றவர்களிடமிருந்து பெரிதும் மாறுபட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின்போது அரசாங்கக்கல்லூரிகளைப் புறக்கணித்து வெளியேறும் மாணவர்கள் சேர்வதற்கு ஒரு மாற்றாகத் தேசியக் கல்லூரிகளைக் கருதினார். மத நல்லிணக்கத்திற்கும், தேசியக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் ஏற்ற நிறுவனங்களாய் அவற்றைப் பார்த்தார்.

பின்னாளில் அவர் உயர்கல்வியைப் பற்றி அரசாங்கம் அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை என்கிற முடிவுக்கு வந்தார். துறைசார்ந்த கல்லூரிகள் அமைய வேண்டும்; அந்தந்தத் துறைகளில் இயங்கிய தனியார் நிறுவனங்களே, அந்தக் கல்லூரிகளை நடத்த ஆகும் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளோடு இணைக்கப்படவேண்டும், புரவலர்களின் நிதியுதவி அக்கல்லூரிகளை நடத்தப் போதுமானது என்று நினைத்தார். கல்லூரிகளுக்கும் தற்சார்பை வலியுறுத்தினார். உதாரணமாக:

“வேளாண்மைக் கல்லூரிகள் அப்பெயருக்குத் தகுதியானவையாக இருக்கவேண்டுமெனில், தற்சார்பினை அடையவேண்டும். வேளாண்மைப் பட்டதாரிகள் சிலரோடு எனக்கு வருத்தமூட்டும் அனுபவங்கள் ஏற்ப்பட்டுள்ளன. அவர்களது அறிவு மேலோட்டமானது. நேரடி அனுபவமற்றவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களது பயிற்சியை தற்சார்புடைய பண்ணைகளில் அமைத்துக்கொண்டு நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முன்வருவார்களேயானால், பட்டப்படிப்பு முடித்தபிறகு, அவர்களைப் பணியில் அமர்த்துபவர்களின் செலவில் பட்டறிவு பெறவேண்டிய அவசியம் நேராது.” (ஹரிஜன், 31-7-37)

ஆதாரக் கல்வி

வலுவான தனிச்சரடுகளாக இருந்த காந்தியின் பல்வேறு சிந்தனைப் போக்குகளும், 1937ல் மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, ஒன்றிணைந்து ஒரு முழுமையான வடிவம் பெறத் தொடங்கின. அப்போது  ’ஆதாரக்கல்வி’ என்றும், பின்னர் ‘நயி தாலீம்’ என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்ட காந்தியக் கல்விமுறை மிகப்பெரும் சாத்தியங்கள் நிறைந்தவொன்றாக, ‘மௌனமான புரட்சிக்கு வழிகோலும் ஈட்டிமுனையாக’  உருவெடுத்தது.  காந்திய வழியில் இயங்கும் ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல ஆற்றல்மிக்கதாக அமைந்தது. உழைப்புக்கும் அமைதிக்கும் அன்புக்கும் அறத்துக்கும் அறிவுக்கும் சமமான அழுத்தம் கொடுத்தியங்கும் ஒரு புதிய உலகுக்கு இளம் உள்ளங்களை வழிநடத்திச் செல்லக்கூடிய வாய்ப்பினைக் கொண்டதாக இருந்தது. வெறும் கல்விமுறையாக மட்டுமின்றி குழந்தைகளுக்கும் சமூகத்துக்கமான ஒரு வாழ்க்கை முறையாகத் தோன்றியது.

1937 அக்டோபரில் வர்தாவில் நடைபெற்ற தேசியக் கல்வி மாநாட்டில் அறிமுக உரை ஆற்றிய காந்தி, அவரது எண்ணப்போக்கையும், புதிய கல்விமுறைக்கான தேவையையும் முன்வைத்தார். அதே ஆண்டில் அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் அவரது உரையாடல்கள் வாயிலாக ஒரு புதியக் கல்விக் கொள்கை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஜம்னாலால் பஜாஜ், அரியநாயகம், ஆஷாதேவி அரியநாயகம், வினோபா பாவே, ஆச்சார்ய கிருப்பளானி, காகா காலேல்கர் என்று பலரும்  காந்தியின் புதிய பார்வையை ஆதரித்தனர்; மேலும் மெருகேற்றினர். ஜாக்கீர் ஹூசைன் தலைமையிலான ஒரு குழு, மாநாட்டின் முடிவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் விரிவான அறிக்கைகள், பாடத்திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் வரையப்பட்டன.  காங்கிரஸ் கட்சி இதையே தேசியக் கல்விக் கொள்கையாக ஏற்றுக்கொண்டது.

வர்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆதாரக் கல்விக்கு எளிதான அறிமுகம் தருகின்றன:

 • இலவசமான, கட்டாயக்கல்வி தேசம் முழுவதும் ஏழாண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
 • பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருக்கவேண்டும்.
 • இந்த கல்விக்காலம் முழுவதும் கல்விமுறை உடலுழைப்பு சார்ந்த ஓர் உபயோகமான தொழிலை மையமாக்கியே அமையவேண்டும். குழந்தையின் வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் மூலமாகவே, முடிந்தவரை மற்ற திறன்களுக்கான பயிற்சிகளும் ஒருங்கிணைப்படவேண்டும்.
 • இந்தக் கல்விமுறை மூலமாகப் படிப்படியாக ஆசிரியர்களின் ஊதியம் தற்சார்பான முறையில் வழங்கப்படும்.

காந்தியக் கல்விமுறை உடனடியாகப் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் (முக்கியமாகக் காங்கிரஸ் அரசுகள் கலைக்கப்பட்டதால்), முதிர்ச்சி அடையும் முன்பே கைவிடப்பட்டது. சுதந்திர இந்தியா காந்தியக் கல்விமுறைக்கு முற்றிலும் எதிர்த்திசையில் பயணித்தது. இன்று வெகுசில இடங்களைத் தவிர (அங்கும் முழுமையாக அல்ல) காந்திய முறை எங்கும் நடைமுறையில் இல்லை. ஆனால், அடிப்படையில் இன்றைக்கும் என்றைக்குமான ஒரு முறையாகதான் நயி தாலீம் தென்படுகிறது.

இனி, காந்திய ஆதாரக் கல்விக்கொள்கையின் சில முக்கியக் கூறுகளைச் சற்றே விரிவாகக் காணலாம்:

1. எழுத்தறிவு என்பது தன்னளவில் கல்வியின் முடிவாகிவிட முடியாது. கல்வியின் ஓர் அங்கமாக மட்டுமே இருக்கவேண்டும்.

“எழுத்தறிவுக்கு நான் எதிரானவன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இல்லவே இல்லை! மாறாக, அது எப்படிப் புகட்டப்பட வேண்டும் என்ற வழியைத்தான் கண்பிக்க விரும்புகிறேன்.” 

“நம் குழந்தைகளை நம் பண்பாடு மற்றும் நம் நாட்டின் அசலான மேதைமை ஆகியவற்றின் உண்மையான பிரதிநிதிகளாய் ஆக்கவேண்டும்.” (வர்தா உரை, 22-10-37)

2.  தொழில் சார்ந்த கல்வி தரவேண்டும். தொழிற்கல்வி என்று தனியாக இல்லாமல், கைத்தொழில் மூலமாகப் பிற பாடங்கள் அறிவியற்பூர்வமாக கற்பிக்கப்பட வேண்டும்.

“இதுவரை நான் சொல்லிவந்ததெல்லாம் அறிவுப் பயிற்சியோடு சேர்த்து, தொழிற்பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற அளவில்தான் என்பதை நான் ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆனால், இப்போது நான் சொல்வது – உடலுழைப்பு சார்ந்த தொழில்தான் அறிவாற்றலைத் தூண்டிவிடும் முக்கிய வழிமுறையாக வேண்டும்.”

“ஏதாவது கைத்தொழில் மூலமாகத்தான் கல்வி முழுவதுமே வழங்கப்படவேண்டும்”

அவ்வாறு செய்யும்போது, “தொழிற்கல்வி என்பது பல்வேறு அறிவுத்தளங்களிலும் குழந்தைகளின் மனங்களை விரிவடையச் செய்யக்கூடிய கருவியாகிறது.”

காந்தியின் சிந்தனைப் போக்கில் நிகழ்ந்த மிகமுக்கியமான மாற்றம் இதுதான். இன்று வரையில் பலரும், வகுப்பறையில் கல்வியும் வெளியில் ஏதேனும் தொழிற்கல்வியும் அளித்தால், அதுவே காந்தியக் கல்வி என்று நம்பி வருகிறார்கள். இது காந்தியின் ஆரம்பகாலச் சிந்தனையேயன்றி, அவரது ஆதாரக் கல்விக் கொள்கைக்கு சற்றே முரணானது. நூல் நூற்றல், தோட்டவேலை, சுகாதாரப்பணிகள் மூலமாக மொழியறிவும், கணிதமும், அறிவியலும், புவியியலும், வரலாறும் கற்பிக்க முடியும் என்பது மிகப்பெரும் மாற்றங்களை விளைவிக்கக்கூடிய ஒரு புத்தம்புதிய கல்விச்சிந்தனை.

செயல்கல்வியை மாண்டிஸோரி போன்ற பல கல்வியாளர்களும் வலியுறுத்திவந்தனர். உடலுக்கும், புலன்களுக்கும், உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு ஆழமானது என்பது அவர்களால் நிறுவப்பட்டது. ஆனால், கல்விக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கையான கருவிகளின் மூலமாகச் செயல்கல்வி அளிப்பதைவிட, காந்தி கூறுவது போல், ஓர் இயல்பான கைத்தொழில் மூலமாக அளிக்கப்படும் கல்வி பன்மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். மாணவர்களுக்குத் தங்கள் உற்பத்தியில் பெரும் தன்னிறைவு கிட்டும். உடலுழைப்பின்போது கிளறப்படும் ஆர்வத்தினைப் பயன்படுத்தி அறிவியற்பூர்வமாகக் கற்பிக்கப்படும் செய்திகள் மனதில் விரைவாகவும் ஆழமாகவும் பதியும்.

3. முழுமையான கல்வி கிராமங்களிலேயே வழங்கப்படவேண்டும். பள்ளிக்கல்விக்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்குச் செல்வது பயனற்றது. கிராம மக்களின் தொழிலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் அவர்களை அந்நியப்படுத்திவிடும்.

ஆதாரக் கல்வி பற்றிப் பேசும்போது வினோபா, “சேவாகிராமில் கற்பிப்பதுபோலவே பௌனாரில் (சில மைல் தொலைவில்தான் இருந்தாலும்) கற்பிக்கமுடியாது. ஏனெனில், பௌனாரில் நதி இருக்கிறது; சேவாகிராமில் இல்லை,” என்றார்.

4. தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டும் என்பதை காந்தி தொடர்ந்து வலியுறுத்தினார். ஆச்சார்ய கிருபளானி ஒருபடி மேலே சென்று நுட்பமான ஒன்றைப் பதிவுசெய்தார். ஆதாரக் கல்வியில், “உண்மையான பயிற்றுமொழி  வேலைதான்; மொழியே அல்ல; பேசுமொழி என்பது தகவல் பரிமாற உதவும் ஊடகமேயன்றி பயற்றுமொழியல்ல,” என்றார்.

5. ஆதாரக் கல்வியின் புரட்சிகரமான இன்னொரு சிந்தனை பள்ளிகள் தற்சார்பினையடைவது. காங்கிரஸ் மாகாணங்களில் ஆட்சி வந்தபிறகும், இலவசக் கல்வி வழங்க வேண்டுமாயின், குடியின் வாயிலாக வரும் வருமானத்தில்தான் பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை, காந்தியை மிகவும் ஆற்றாமை கொள்ளச்செய்தது. தொழில் சார்ந்த கல்வி வழங்கும்போது, அந்தத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலமாகவே தற்சார்பு அடைந்துவிட முடியும் சாத்தியத்தை உணர்ந்து வலியுறுத்தினார்.

“முழுமையாக நோக்கினால், இத்தகைய கல்வி தற்சார்பு உடையதாக இருக்க முடியும், இருக்க வேண்டும். தற்சார்புதான் அதன் நடைமுறைச் சாத்தியத்துக்கு உரைகல்.”

அப்படியொரு தற்சார்பு நிலையை அடையச்செய்வதில்தான் அரசாங்கத்தின் பங்கிருப்பதைக் கண்டார். பள்ளிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான சந்தையை உருவாக்கித்தரும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாக நம்பினார்.

6. பள்ளி என்பது தனித்தீவாக இயங்காமல், மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம வாழ்வோடு இயைந்து சேவை செய்யவேண்டும். அப்போது மாணவர் கல்வி என்பது சமூகம் முழுமைக்குமான கல்வியாக அமைந்துவிடும். காந்தியைப் பொருத்தவரை சமூகத்தின் ஆரோக்கியத்தை மருத்துவமனைகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது; அதேபோல, சமூகத்தின் கல்வி – சுயராஜ்ய உணர்வை ஊட்டி வளர்த்துப்பேணக்கூடிய கல்வி – வெறும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் மட்டும் அடைந்துவிடமுடியாது.

“நமது செயல்பாடு 7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நயி தாலீம் முறையில் கல்வி அளிப்பதோடு சுருங்கிவிடுவதில்லை; அது பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கை முழுவதையும் தீண்டுவதாக இருக்கவேண்டும். [….] கிராமத்தினர்க்கு நாம் ஆசிரியர்களாக வேண்டும்; உண்மையில் அதன் பொருள், கிராமத்தார்க்கு நாம் சேவகர்களாக வேண்டும் என்பதே. அதற்கான பரிசு அகத்திலிருந்து வரவேண்டும்; புறத்தேயிருந்தல்ல. உண்மையை நோக்கிய நமது தேடலில் நமக்கு மனிதத்துணை கிடைக்கிறதா இல்லையா என்பது ஒரு பொருட்டேயல்ல. நயி தாலீம் புறவயமான பொருளாதார உதவியைச் சார்ந்திருப்பதுமல்ல. விமர்சகர்கள் என்ன சொன்னாலும், அது அதன் வழியில் தொடரும். உண்மையான கல்வி தற்சார்புடையதாக இருந்தாகவேண்டும்.  இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. நாம் சொல்வதைச் செய்துகாட்டி, மனதின் உண்மையான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் ஒரே முறை இதுவென நிரூபித்தோமேயானால், இது ஒரு புதுமையான சிந்தனையாக ஏற்கப்படும். இன்று நயி தாலீமை நிந்தனை செய்பவர்கள் எல்லாரும் முடிவில் அதனைப் போற்றுபவர்களாக மாறுவார்கள்; நயி தாலீம் பரவலான ஏற்பினைக் கண்டடையும்.”  (சேவாகிராமில் காந்தியின் உரை, 11-1-45)

நயி தாலீம் – இதுவரையும் இனியும்

காந்தியின் காலத்தில் சில நயி தாலீம் பள்ளிகள் தொடங்கப்பட்டுச் சிறப்பாக இயங்கின. சேவாகிராமில் அவரது குடிலுக்கு அருகில் அரியநாயகம், ஆஷாதேவி அரியநாயகம் தம்பதியினர் நடத்திய பள்ளி இருந்தது. ஆரம்பத்தில் தக்ளியின் மூலமாக நூல் நூற்றல், பருத்தி விளைவித்தல், கொட்டைநீக்குதல், நூலுக்கு சாயம் பூசுதல், ஆடைகளை வடிவமைத்தல் போன்ற வேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாணவர்களின் முன்னேற்றம் கவனமாக கண்காணிக்கப்பட்டது. முடிவுகள் மிகுந்த நம்பிக்கையைத் தந்தன. வேறு பல இடங்கிளிலும் இதே போன்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், முன்பு கூறியதுபோல், இம்முயற்சி பரவலாவது பல்வேறு காரணங்களால் தடைபட்டது; காந்தியின் கவனமும் சிறைவாசம், பிரிவினை, மதக்கலவரங்கள் என்று வேறுவிஷயங்களால் சிதறவேண்டிய சூழல் உருவானது. கைத்தொழிலும், பயிற்றுவிக்கும் திறனும், அவற்றை ஒருங்கிணைக்கும் ஆற்றலும் கொண்ட ஆசிரியர்கள் அமைவதும் அரிதாகவேயிருந்தது.

சுதந்திர இந்தியா காந்தியின் தற்சார்பினை அடிப்படையாகக் கொண்ட கிராம மையக் கொள்கைகளில் அதிக நாட்டம் செலுத்தவில்லை. அதே போல, அவரது கல்விக் கொள்கைகளும் கைவிடப்பட்டன. ஆங்கில ஆட்சியில் நீடித்த அதே முறைகள் பின்பற்றப்பட்டன. அரசாங்க குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக வளர்ந்து வந்த ஒரு எந்திரத்தனமான கல்விமுறையின் மூலமாக அடிமைநாட்டு குமாஸ்தா மனநிலை கொண்ட மனிதர்களையும் சமூகத்தையுமே உருவாக்க முடிந்தது. வெகுசில இடங்களில் மட்டும் மாற்றுக் கல்விக்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவை எவையும் மைய நீரோட்டத்தின் மீது பெரிய அளவில் தாக்கம் செலுத்தவில்லை.

காந்திக்குப்பின் வந்த காந்தியர்களின் மிகப்பெரிய தோல்வி, ஆதாரக் கல்வியை ஒரு வலுவான மாற்றுத்தரப்பாக வளர்த்தெடுக்காததுதான். நயி தாலீம் முறையைப் பின்பற்றுவதாகக் கூறும் பல நிறுவனங்களிலும், ஒருவகை தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறதேயன்றி, தொழிலையும் வகுப்பறையையும்  ஒருங்கிணைக்கும் காந்தியமுறை பின்பற்றப்படுவதில்லை. காந்திய முறை என்ற அடையாளத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டு, குலக்கல்விமுறை என்று பிறரால் முத்திரை குத்தப்பட்டுக் கைவிடப்பட்ட, ராஜாஜியின் கல்வித்திட்டத்திலும் இதே குறைபாட்டினைக் காணலாம். காந்திய முறையை ஓரளவு முழுமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கடைபிடிக்கும் நிறுவனங்கள் என்று வெகுசில விதிவிலக்குகளே உள்ளன. அரசாங்கக் கொள்கைகள் சாதகமாக இல்லாத நிலையில், இந்தப் பள்ளிகள் எவற்றுக்குமே தற்சார்பு அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறுகிப்போய்விட்டன.

ஆனால் இன்றைக்கும், நயி தாலீம் முறை அளவிற்குப் பெரும் சமூகமாற்றத்தை விளைவிக்கக்கூடிய மாற்று முறைகள் இந்தியாவில் உருவெடுக்கவில்லை. அப்படி நடக்கும் பல சோதனைகளும் நகரத்து மேல்மட்டக் குழந்தைகளுக்கானவையாகவே அமைந்துள்ளன. பல்வேறு தரப்பட்ட கல்வி நிறுவனங்கள் சமூக ஏற்றதாழ்வுகளை அகலப்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளது கண்கூடு.   உடலுழைப்பு சார்ந்த தொழில்கள் மீதும் செயல்கள் மீதும் ஏற்பட்டிருக்கும் சமூக ஒவ்வாமை எதிர்காலத்தில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும். வளரும் வயதில் குழந்தைகள் மனனம் செய்யும் எந்திரங்களாகிக் கொண்டிருக்கின்றனர். அசல் சிந்தனைக்கான வெளி அவர்களிடமிருந்து அகற்றுப்பட்டுவிட்டது. பொருளாதார வெற்றியே பிரதானமாகிவிட்டதில், சமூக அக்கறையும் சேவை மனநிலையும் சுயநலத்திற்கு வழிவிட்டுவிட்டன. இயந்திர மயமாக்கலும், நகர மயமாக்கலும்  எற்படுத்தியிருக்கும் சூழியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிநிற்கும் இன்றைய பள்ளிக்குழந்தைகளுக்கு இல்லை.

இந்நிலையில், முன்னெப்போதையும் விட, நயி தாலீம் முறை கடைபிடிக்கப்பட வேண்டிய தேவை அதிகரித்திருக்கிறது. காந்தியச் சிந்தனையின் அடிப்படைகள் இன்றைய தேவைகளுக்கும் சூழலுக்கும் பொருத்தமாகவே உள்ளன. அவர் சிபாரிசு செய்த கைத்தொழில்கள் மாற்றம் பெறலாம். கணிப்பொறிகளும், இணையமும், தகவல் தொழில்நுட்பமும் ஏற்படுத்தியிருக்கும் புதிய சாத்தியக்கூறுகளும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இவற்றின் மூலமாக இதுவரை சாத்தியமற்றுத் தெரிந்த தற்சார்பும்கூட சாத்தியப்படலாம்.  கடந்த நூற்றாண்டில் உலகெங்கும் தோன்றிய பல்வேறு கல்வி முறைகளின் சாதகமான அம்சங்களை உள்வாங்கிக்கொள்ளவும் வேண்டும். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களுக்குப் பொருத்தமாக, தன் சாராம்சத்தை இழந்துவிடாமற் சமரசங்கள் சிலவற்றையும் தற்காலிகமாகச் செய்யவேண்டியிருக்கலாம்.

கடந்த இரு நூற்றாண்டுகளாய் உலகினை வழிநடத்தியுள்ள அரசியல் சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அவை விளைவித்திருக்கும் பொருளாதார, சமூக, சூழியல், மதச் சிக்கல்களுக்குத் தீர்வாக இன்று பல துறைகளிலும் காந்தியப் பார்வை முன்வைக்கப்படுகிறது. காந்தி கண்ட சுயராஜ்ஜியமும், கிராம சுயாட்சியும் அமைய, காந்தியின் சிந்தனையில் மலர்ந்த பள்ளிகளே அடித்தளமாக முடியும். அவரது சிந்தனைப் புள்ளிகள் அனைத்தையும் இணைத்து முழுமையாக்கக்கூடிய ஆற்றல் அவரது கல்விக் கொள்கைக்கு உண்டு.

பிற சமூக காரணங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் கூட, காந்தியக் கல்வி முறையைப் பின்பற்றுவதற்கு மிகச் சக்திவாய்ந்த ஒரு காரணமுண்டு. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மிகத் தரமான, ஆழமான, முழுமையான கல்வியை எளிய முறையில் வழங்க இதுவே சிறந்த வழி.

உதவிய நூல்கள்:

Collected Works of Mahatma Gandhi, Publications Division, 1999
The Story of Nai Talim, Marjorie Sykes, Nai Talim Samiti, 1988
The Beautiful Tree, Dharampal, Biblia Impex, 1983
Towards New Education, M.K.Gandhi, Bharatan Kumarappa, Navjivan Publishing House, 1953
History of Education in India during the British period, J.P. Nayak, Syed Nurullah,  1943
Ancient Indian Education, Rev. FE Keay, Oxford University Press, 1918

Advertisement

2 Responses to காந்தியக் கல்வி : காந்தியத்தின் ஆதாரம்

 1. அனாமதேய சொல்கிறார்:

  தமிழைப் பிழை இன்றி எழுதுங்கள்

  களைந்துகொண்டிருந்தது – கலைந்துகொண்டிருந்தது
  கறைவேட்டிகள் – கரைவேட்டிகள்

  (அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் -கோட்டை எதிரே – பற்றிய முகநூல் பதிவிலிருந்து)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: