காந்தியும் திருக்குறளும்

‘காந்தி இன்று’ தளம் மின்னிதழாக மாறியிருக்கிறது. முதல் இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை.

(6-நவம்பர்-2019: இக்கட்டுரையை மேலும் விரிவுபடுத்தித் தனியே பதிந்துள்ளேன்.)

காந்தியும் திருக்குறளும்

ஓர் இலக்கியப் படைப்பின் மீது பெருந்திரளான மக்கள் பேரன்பைப் பொழிய முடியுமா என்ற கேள்வி எழுந்தால், திருக்குறள் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் உணர்வையே உதாரணமாகக் காட்டமுடியும்.  பெரும்பாலும் ஒரு நீதி நூலாகவே அறியப்படுகிற ஒரு படைப்பு (அது நீதிநூல் மட்டுமே அல்ல என்றாலும்கூட), எப்படி இத்தனை அன்புக்குப் பாத்திரமானது என்பது ஆச்சரியமானதுதான். அந்தத்  திருக்குறள் காட்டும் நெறிக்கு மிக நெருக்கமான வாழ்வை வாழ்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில், தமிழர் அல்லாத போதினும், காந்தியின் பெயரைத் தவிர்க்கமுடியாது. காந்தி, திருக்குறள், தால்ஸ்தோய் குறித்து நிறையப் புனைவுகள் உள்ளன. காந்தியைத் திருக்குறள் எந்த அளவுக்கு நேரடியாகப் பாதித்தது என்பதை உறுதியாகக் கூறவியலாது.  ஆனால், காந்தி திருக்குறளைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவரது பதிப்புகளிலும், எழுத்துகளிலும் காணலாம்.


தென்னாப்ரிக்காவில் தமிழர்களோடு ஏற்பட்ட தொடர்பிற்கு முன், காந்தி திருக்குறள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க  வாய்ப்பில்லை. அறிந்திருந்தால், அது அவரைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. சிறுவயதில் அவரை மிகவும் ஈர்த்து வழிநடத்தியவை என்று இரண்டு கோட்பாடுகளைத்தான் குறிப்பிடுகிறார் : உண்மை மற்றும் தீமையிழைத்தவர்க்கும் நன்மையே செய்தல். இரண்டுமே திருக்குறள் முன்வைக்கும் முக்கிய நெறிகள். அப்போது அவரைக் கவர்ந்த ஒரு குஜராத்திப் பாடலை, சத்திய சோதனையில் குறிப்பிடுகிறார். லண்டனில் இருந்தபோதும், ஷாமல் பட் எழுதிய அதே பாடலை மீண்டும் நினைவுகூர்கிறார்.

 

பெற்ற ஒரு குவளை நீருக்கு, நிறைவான ஒரு வேளை உணவை அளி:

ஓர் எளிய வாழ்த்துக்கு, உற்சாகமாய்ப் பணிந்து வணங்கு:

சில நாணயங்கள் பெற்றிருந்தால், பொற்குவை திரும்பக் கொடு:

உயிர்காத்தவனுக்காய் உயிரையும் தரத் தயாங்காதே.

சொற்களையும் செயல்களையும் இங்ஙனமே கருதுவர் அறிவோர்,

பெற்ற சிற்றுதவிக்குப் பதிலாய் பன்மடங்கு பேருதவி புரிவர்.

ஆனால், பெருஞ்சான்றோர் மனிதன் ஒன்றே என்றரிவர்;

இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்திடுவர்.

 

இந்தப் பாடல், பல குறட்பாக்களின் இணைவடிவமாகத் தெரிகிறது:

 

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். [104]

 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. [102]

 

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. [987]

 

அதற்குப்பின்னும் காந்தியைப் பாதித்த, அவரே எழுதிய பலவற்றுள்ளும் குறளின் கருத்துகள் பொதிந்திருந்தாலும், வளரும் பருவத்தில் அவரை ஈர்த்த இப்பாடல் குறிப்பிடத்தகுந்தது.

 

1909ல்தான் காந்தியின் வாழ்வில் திருக்குறள் நேரடியாக நுழைந்ததற்கான தடயத்தைக் காண்கிறோம். லியோ தால்ஸ்தோய் எழுதிய ‘ஓர் இந்துவுக்குக் கடிதம்’ (A Letter to a Hindu)  என்ற கட்டுரையைக் காந்தி தனது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையில் பதிப்பித்தார். அந்தக் கட்டுரையில் தால்ஸ்தோய் கீதையிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார்.  (1)

 

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள். [311]

 

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள். [312]

 

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும். [313]

 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல். [314]

 

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை. [315]

 

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும். [317]

 

இந்த ஆறு குறட்பாக்களையும் குறிப்பிட்டு,  ‘இவ்வாறே எங்கும் நடந்தது. அன்பே மிக உயர்ந்த அறம் என்கிற புரிதல் எங்கும் மறுக்கப்படவில்லை. ஆனால், இந்த உண்மை பல்வேறு பொய்களோடு பிணைந்து  சிதைந்திருந்ததால், வெறும் சொற்களே எஞ்சியிருந்தன,’ என்கிறார் தால்ஸ்தோய். ‘இல்வாழ்க்கைக்கு மட்டுமே இந்த உயர்ந்த அறம் அவசியமாகக் கற்பிக்கப்பட்டது. பொது வாழ்வில் எல்லாவிதமான வன்முறையும் (சிறை, மரணதண்டனை, போர்கள்) பெரும்பான்மை மக்களைக் காக்க, அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சிறுபான்மையினர் மீது ஏவப்படுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது – இன்னமும் சிறிதே எஞ்சியிருக்கும் அன்புக்கு அது நேர்மாறாக இருந்தபோதிலும்.’

 

காந்திக்கு இந்தக் குறள்களும், தால்ஸ்தோயின் கருத்துகளும் உறுதியாகப் பிடித்திருக்கும். தனிவாழ்வையும் பொதுவாழ்வையும் என்றைக்கும் அவர் பிரித்து வைத்ததில்லை. இந்தக் கட்டுரையை முன்வைத்துத்தான் காந்திக்கும் தால்ஸ்தோய்க்கும் இடையிலான கடிதப் பரிமாற்றம் தொடங்கியது. ஆனால், திருக்குறள் பற்றிக் குறிப்பாக எந்த உரையாடலும் நடைபெறவில்லை.

 

இதன்பிறகு காந்தி, திருக்குறள் பற்றிப் பேசியதாகப் பதிவாகியுள்ளது 1927ல். தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தமிழுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று எழுந்திருந்த ஒரு குற்றச்சாட்டை மறுத்துரைத்தார். அப்போது,

‘திருக்குறளில் காணக்கிடைக்கிற புதையல்களின்பால் எனது கவனத்தை நீங்கள் ஈர்த்தது சரிதான். உங்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறேன் – சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், திருக்குறளை அதன் மூலமொழியில் படிக்கவேண்டும் என்கிற ஆசையோடும் குறிக்கோளோடும் நான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். தமிழைக் கற்று முடிப்பதற்கு எனக்குக் கடவுள் போதிய நேரம் கொடுக்கவில்லை என்பது என் ஆழ்ந்த வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். பிராந்திய மொழிகளையேப் பாடமொழியாக ஆக்குவதற்கு நடத்தப்படும் போராட்டங்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். நாம் தமிழ்மொழியைக் கற்க வேண்டும்; ஆங்கிலத்தைவிட தமிழையே விரும்பவேண்டும்; தமிழை மற்ற மொழிகளுக்கெல்லாம் மேலான இடத்தில் இருத்தவேண்டும்,’ என்று கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வெளியானது. (2)

 

அடுத்து, 1935ல், ஹரிஜன் இதழில் திருக்குறள் பற்றித் ‘தமிழ் மறை’ என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளார் காந்தி. (3)

 

‘திருவள்ளுவர் ஒரு தமிழ்த் துறவி. அவரை ஒரு ஹரிஜன நெசவாளர் என்கின்றன தொன்மங்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். புகழ்மிக்க திருக்குறளை அவர் அளித்துள்ளார் – திருக்குறள் புனித முதுமொழிகளைக் கொண்டது; தமிழர்களால் தமிழ்மறை என்று அறியப்படுகிறது; எம்.ஏரியலால், ‘மனிதச் சிந்தனையின் வெளிப்பாட்டில் மிக உயர்ந்த, தூய்மையானவற்றில் ஒன்று,’ என்று போற்றப்பட்டது. இதில் 1330 முதுமொழிகள் உள்ளன. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஹரிஜன மற்றும் பிற சேவைகளுக்காகச் சர்மாதேவி (சேரன்மாதேவி) ஆசிரமத்தை நிறுவிய, அமரர் வ.வே.சு.ஐயர் அண்மையில் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்திருந்தார். சர்மாதேவி ஆசிரமத்தையும், இந்த மொழிபெயர்ப்பையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு மறைந்துவிட்டார். சர்மாதேவி இப்போது ஹிரிஜன் சேவா சமிதியின் வசம் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள் மீதமுள்ளன. இந்த நூலின் விலை ரூ.5 ஆக இருந்தது. இப்போது ரூ.2/8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் எழுதியுள்ள ஒரு விரிவான முன்னுரையை இந்நூல் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் வருமானம் ஹரிஜன சேவைக்காகப் பயன்படுத்தப்படும்.  வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்ட, இரண்டு குறள்களை நேர்ந்தவாக்கில் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறேன்.

 

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. [327] (4)

 

இதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய வரிகளோடு ஒப்புநோக்குவோம்:

 

சுதந்திரமாய் இப்பள்ளத்தாக்கில் உலவும் எந்த மந்தைக்கும்

மரணத்தை நான் விதிப்பதில்லை;

என்னைக்கண்டு இரங்கும் பேராற்றலால் கற்பிக்கப்பட்ட நான்,

அவற்றைக் கண்டிரங்கவும் கற்றுக்கொண்டேன். (5)

 

அடுத்த தேர்வு:

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. [339] (6)

 

இதனை வேர்ட்ஸ்வொர்த்தின் வரிகளோடு ஒப்புநோக்கலாம்:

 

மரணம் என்பது உறக்கமும் மறதியும் அன்றி வேறில்லை. (7)’

 

காந்திக்குத் திருவள்ளுவர் ஒரு ஹரிஜன் என்றும், நெசவாளர் என்றும் கூறப்பட்டது இரட்டை ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்போது தீண்டாமை இயக்கமும், கதர் இயக்கமும் தான் அவரது ஈடுபாட்டை மிகவும் அதிகமாய்க் கோரிய இயக்கங்கள். திருவள்ளுவர் முன்வைக்கும் அன்பு, அறம், கொல்லாமை, வாய்மை, ஈகை என்ற பல கருத்துகள் காந்தியின் கருத்துகளுக்கு முழுக்கவே இணையானவை.

 

காந்தியின் முதன்மைச் சீடரான வினோபா, திருக்குறளை நன்றாகக் கற்றிருந்தார். பல உரைகளில் திருக்குறளைத் தமிழிலும் பிற மொழிகளிலும் மேற்கோள் காட்டுவார் என்று அவரோடு நெருங்கிப் பழகிய நாராயண் தேசாய், என்னுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். காந்தியோடு தன் குழந்தைப் பருவத்தில் வளர்ந்த நாராயண் தேசாயை,  குஜராத்தில், அவரது சம்பூர்ண கிராந்தி வித்தியாலயத்தில் சந்தித்தபோது, புதிதாக வெளிவந்த ஒரு குஜராத்தி இலக்கியச் சிற்றிதழில் இருந்த திருக்குறள் பற்றிய ஒரு கட்டுரையை எனக்கு இந்தியில் மொழிபெயர்த்துப் படித்துக் காட்டியது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

 

காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், மார்க்கண்டன் அவர்களோடு ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, வினோபாவிடம் அவர் ஏதேனும் செய்தி கேட்டதாகவும், அப்போது அவரது கைப்பட எழுதித்தந்த ஒரு குறள் பற்றியும் குறிப்பிட்டார்.

 

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்

நாமம் கெடக்கெடும் நோய். [360]

ஆனால், காந்தியைப் பொருத்தவரை, இந்த இரு குறிப்புகளைத் தவிரத் திருக்குறள் பற்றிப் பேசியதற்கான வேறு தரவுகள் இதுவரை தென்படவில்லை. எனினும், ‘என் வாழ்க்கைதான் எனது செய்தி’ என்று சொன்னவரின் அச்செய்தியில் பல குறள்கள் மிளிரக் காணலாம்.

 

குறிப்புகள்:

 

  1. The aim of the sinless One consists in acting without causing

sorrow to others, although he could attain to great power by ignoring

their feelings.

 

The aim of the sinless One lies in not doing evil unto those who

have done evil unto him.

 

If a man causes suffering, even to those who hate him without

any reason, he will ultimately have grief not to be overcome.

 

The punishment of evil doers consists in making them feel ashamed of

themselves by doing them a great kindness.

 

Of what use is superior knowledge in the one, if he does not

endeavor to relieve his neighbour’s want as much as his own?

 

If, in the morning, a man wishes to do evil unto another, in the

evening the evil will return to him.

THE HINDU KURAL.

 

[From ‘A Letter to a Hindu’, Leo Tolstoy, Dec 14th, 1908.]

  1. Collected Works of Mahatma Gandhi, Vol 35, Page 91
  2. Collected Works of Mahatma Gandhi, Vol 61, Page 235
  3. Take not away from any living thing the life that is sweet unto all, even if

 

it be to save thine own.

 

  1. No flocks that range the valley free

To slaughter I condemn,

Taught by the Power that pities me

I learn to pity them.

 

  1. Death is like unto sleep and life is

like the waking after that sleep.

 

  1. Death is but a sleep and a forgetting.

 

One Response to காந்தியும் திருக்குறளும்

  1. […] முன் ‘காந்தி இன்று’ தளத்துக்காக எழுதிய கட்டுரையின் விரிவுபடுத்தப்பட்ட […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: