குப்பைத்தொட்டியின் மீது அமர்ந்திருந்த காக்கை, தீடீரென்று பறக்கவும், அதிர்ந்து குனிந்தாள் மகிழ். நேற்று மொட்டைமாடியிலும் இதே போல் நடந்தது – அவளோடு சேர்ந்து நானும் ஒரு கணம் குனிந்திருந்தேன். அப்போது, ‘காக்கா தலைல கொட்டிருச்சுனா வலிக்கும், இல்லப்பா?’ என்று சொல்லியிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே தொடரான லிட்டில் கிருஷ்ணாவையும் நிறுத்திவிட அவளைச் சம்மதிக்க வைக்கவேண்டும்.
‘காக்காயைப் பார்த்து பயப்படக்கூடாதுடா. நீ தினமும் சாப்பாடு வைக்கறியில்ல? பாரதியார் என்ன சொல்லியருக்கார்:
காக்கைகுருவி எங்கள்…..’
‘என்னப்பா? காக்கைச் சிறகினிலேவா?’
‘இல்ல, இல்ல. காக்கைகுருவி எங்கள் ஜாதி. உனக்கு அந்தப் பாட்டு தெரியுமில்ல? நீ சொல்லு.’ அவள் கற்றுக்கொண்ட முதல் கவிதைகளில் இது ஒன்று. நோக்க நோக்கக் களியாட்டம் என்று ஆனந்தமாய்ச் சொல்வாள்.
‘எனக்கு மறந்து போச்சுப்பா’
‘நீ பாட்டுக்கு சொல்லத்தொடங்கு. உன்னோட மூளை அந்த புக் ஷெல்ஃபிலயிருந்து இந்தப் பாட்டை எடுத்துக் கொடுக்கும்.’
நேற்றுத்தான் அவள் மூளை எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்து கண்டுபிடித்திருந்தாள். அவள் கற்றுக்கொள்கிற விஷயங்கள், மூளையில் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டு, ஒரு பெரிய புத்தக அடுக்கில் வைக்கப்பட்டுவிடுமாம். தேவைப்படும்போது, தேவையான புத்தகம் திறக்கப்பட்டு சரியான செய்தியை மூளை அவளுக்குத் தெரிவிக்குமாம்.
‘இல்லப்பா. அந்தப் பாட்டை என்னோட பிரெய்ன் எழுதிவைக்காம விட்டுருச்சு. ஆசை முகம் எல்லாம் மறக்காம எழுதி, புக் ஷெல்ஃப்ல வைச்சுருச்சு. ஆனா இந்தப் பாட்டு இல்லை.’
‘சரி நான் சொல்றேன். உனக்கு ஞாபகம் வந்துரும். காக்கைகுருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும்…’
‘இங்க ரோட்ல வேண்டாம்பா. ஸ்கூல்ல இருந்து வந்தவுன்ன நீ எனக்கு சொல்லிக்குடு.’