மாணவர் போராட்டமும் தொலைக்காட்சி விவாதங்களும்

நேற்று CNN IBNல் தெரியாத்தனமாக, ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய ஐபிஎல் விவாதத்தைக் காண நேர்ந்துவிட்டது. பொதுவாக ராஜ்தீப், அர்ணாப் வகையறாக்களை நான் பொருட்படுத்தவதில்லை. ஆனால், இந்நிகழ்ச்சி என்னை நிறையவே கொந்தளிக்கச்செய்துவிட்டது. இவர்களும் இந்திய மக்களின் பொதுபுத்தியை ஏதோ ஒருவகையில் நிர்ணயிப்பவர்கள் என்பதால் இவர்களை நாம் முழுக்க ஒதுக்கவும் முடியாது.

சென்னையிலிருந்து ஜகத் காஸ்பர் மற்றும் ஓர் இளம் மாணவரை அழைத்திருந்தார்கள். டில்லி அரங்கில் ராஜ்தீப்புடன் சுப்ரமணியம் சுவாமி, வீரராகவ் போன்றோர். CNNல் சுவாமி, அதே சமயம் NDTVல் இந்து ராம் – ராஜபக்சே கொள்கைப்பரப்பு அணி நன்றாகவே செயல்படுகிறது.

இந்திய வெளியுறவுத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர் (சர்தார்ஜி – பெயர் நினைவில்லை) சுவாமியிடம், ‘ராஜபக்சே உங்களுக்கு நண்பர் என்பதால் நீங்கள் அப்படிச் சொல்லலாம்’ என்கிற ரீதியில் ஒரு முறை சொன்னது, அதிக கவனம் பெறாமல் கடந்துசெல்லப்பட்டது.

நம்மவர்களுக்கு, சுவாமி போல் தர்க்கரீதியாய்ப் பொய்களுக்கு அலங்காரம் செய்து அரங்கேற்றத் தெரிவதில்லை. சரி, அதுவேண்டாம் – நம் உண்மைகளையே நாம் தெளிவாக உரைப்பதில்லை. இன்று இலங்கைத் தூதர் கூறியிருக்கும் ‘ஒரிய-பிகார்-சிங்களவர்’ இணைப்பைப் பற்றி நேற்றே சுவாமி கூறினார். இதற்கு முன்னும் கூறியுள்ளார். (டிவிட்டரில்) பிராமணப் படை திரட்டப்போவதாய்ச் சொல்லி, தமிழகத்திலும் பிளவு ஏற்படுத்த முயல்கிறார். எந்த சுவிட்சைத் தட்டினால், எங்கே எது வெடிக்கும் என்பதை நன்றாகவே தெரிந்துவைத்திருக்கிறார்.

ஜகத் கேஸ்பர் பேசியவரை பெரும்பாலும் சரியாகத்தான் பேசினார். ஆனால், அவர் பேசுவதற்கு அதிகம் வாய்ப்பு தரப்படவில்லை. அவரும் குறுக்கிட்டு எடுத்துக்கொள்ளவில்லை.

உணர்ச்சிப் பிழம்பாக இருந்த அந்த இளம் மாணவரைத் துவைத்து எடுத்துவிட்டார்கள். ‘Don’t cross-talk’ என்று ஒரு கட்டத்துக்கு மேல் ராஜ்தீப், பள்ளி ஆசிரியர் பாவணையில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, அதன்பின் பேசவிடவே இல்லை. ஏதோ இவர்களது கூச்சல் நிகழ்ச்சிகளில் cross-talkஏ அனுமதிக்கப்படுவதில்லை போல.

உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் ஒரு பெரும் போராட்டத்தைக்கூட நடத்திவிடலாம். ஆனால், விவாதம் செய்வதற்கும், மாற்று தரப்பினை நம் பக்கம் ஈர்ப்பதற்கும் ஒரு தெளிவு வேண்டும். நடுநிலை வேண்டும்.

அவரது வாதங்களின் பலவீனத்துக்கு முக்கிய காரணம் புலி ஆதரவுப் பார்வை. உதாரணமாய், ‘கருணா போன்ற தமிழர்கள் ராஜபக்சேவை ஆதரிக்கிறார்களே!’ போன்ற அற்பத்தனமான ஒரு கேள்விக்கு, அந்த மாணவர் அளித்த பதில், ‘கருணா விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்; அதனால் அவரை நாங்கள் ஏற்கமாட்டோம்.’ பதிலைக் கேட்கும் நடுநிலையாளர்களிடம் இது என்ன மாதிரியான தாக்கத்தை விளைவிக்கும்? இதையே, ‘கருணா, ராஜபக்சேவிடம் விலைபோனவர். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர். அவரைத் தமிழர்களின் பிரதிநிதியாகக் கருதமுடியாது’ என்று சொல்லியிருக்கலாமே? இது அந்தத் துணிவுமிக்க மாணவரைக் குறை சொல்வதற்காக எழுதவில்லை; இனிமேல் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்; நம் தரப்பின் குறைகளைக் களைய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.

புலிகள் செய்ததையெல்லாம் நியாயப்படுத்தும்போது, இலங்கை அரசு செய்த மாபெரும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிடுகிறோம். புலிகள் வேறு, ஈழத் தமிழர் வேறு என்பது புரிய வேண்டும். பாலச்சந்திரன் படத்தை வைத்துப் போராடுவது வேறு; பிரபாகரன் படத்தை முன்னிறுத்திப் போராடுவது வேறு. நாம் கோறும் சர்வதேச விசாரணையில் புலிகளின் கொடுஞ்செயல்களும் அம்பலமாகப் போகின்றன என்பதை மறந்துவிடவேண்டாம். நம்மில் பலரும் போராடுவது ஈழத் தமிழருக்காக, புலிகளுக்காக அல்ல. உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஈழத் தமிழர் நலனுக்காகவேனும் உங்கள் புலி ஆதரவை மூட்டைகட்டி வைப்பது உத்தமம்.

அதே போல், இலங்கை அரசு வேறு, இலங்கை மக்கள் வேறு என்கிற புரிதலும் வேண்டும். வணிகத்தொடர்பு, விளையாட்டுத் தொடர்புகளைத் துண்டிப்பதில் நிறையவே நியாயம் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் ஒரே பிடி அதுதான் – இவற்றை நான் முழுமையாய் ஆதரிக்கிறேன். ஆனால், இங்கே வரும் சிங்களவர்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்துவதில் (அது யார் செய்திருந்தாலும்) எவ்வித அறமும் இல்லை. அதை தேசிய, உலக அரங்குகளில் நியாயப்படுத்த முயல்வது அறிவார்ந்தது அல்ல.

வெறுப்பை உமிழ்வதன் மூலம் நாம் நண்பர்களைப் பெறப்போவதில்லை. தனிமைப்படுத்தப்படுவோம். தனிமைப்படுத்தப்பட்டால் நாம் அடையப்போவது என்ன? பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்த பிறகாவது நாம் கற்க வேண்டிய பாடம் அது.

அந்த அனுபவமற்ற மாணவனைப் பேசவிட்டு, ‘எவ்வளவு அபத்தமிது’ என்பதுபோல் ராஜ்தீப், சுவாமி, வீரராகவ் ஆகியோர் முகத்தில் தாண்டவமாடிய ஏளனப் புன்னகை இன்னும் என்னைச் சுடுகிறது. தன்னிச்சையாய் நடக்கும் ஒரு போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசிப்பூசிக் கொச்சைப்படுத்துவது வலிக்கிறது. இன்று மாணவர்கள் ஆட்டுவிக்கப்படுபவர்கள் அல்ல; அதிமுகவையும், திமுகவையும் ஆட்டுவிப்பவர்கள் – இதை ஏன் நம்மால் தேசிய அளவில் நிறுவமுடியவில்லை.

இந்த மாணவர் போராட்டம் இதுவரை நம் அறிவுஜீவிகள் எவரும் சாதித்ததைவிட அதிகமாய் ஏற்கனவே சாதித்துவிட்டது. அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டிய நேரமிது. இனி வெறுப்பு கோஷங்களையும், பிரபாகரன் துதியையும், (இந்திய) பிரிவினைவாதங்களையும் நாம் விடுத்துவிட்டு, ஈழத்தமிழர்களுக்கு நியாயத்தையும், உரிமைகளையும் பெற்றுத்தரும் ஒரே நோக்கத்தோடு, நமது தரப்பை இன்னும் தெளிவாய் வலிமையாய் உலகத்திற்கு எடுத்துரைக்கவேண்டும். கல்லூரிகள் தொடங்கிவிட்ட பின்னரும் விடாது செய்யக் கூடிய பணிதான் இது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: