கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி

முகநூலில் ‘காலை 10 மணிக்குக் கோட்டையில் முற்றுகைப்போராட்டம்’ என்ற சில பதிவுகளைப்பார்த்துவிட்டு, நானும் கலந்து கொண்டு என் எதிர்ப்பைப் பதிவு செய்யலாம் என்று முடிவுசெய்தேன். அதில் விதவிதமான அரசியல் கட்சிகளின் பங்கெடுப்பு பெரும் தயக்கத்தை விளைவித்தது. பலமாதங்களாய்ப்போராடும் மீனவர்களின் நினைவு தயக்கத்தை அகற்றியது. விடுப்பெடுக்க எவரிடமும் சொல்லவேண்டிய தேவையில்லாதபோது இதுகூடச் செய்யாமலிருந்தால் எப்படி? கோட்டூர்புறத்திலிருந்து கோட்டையை நோக்கித் தனியாகப் புறப்பட்டேன்.  புதிய உள்ளாடையும், கசங்கிய டீ-ஷர்ட் ஜீன்ஸும் அணிந்தேன். மனைவி, பர்ஸிலிருந்த ஏடிஎம் கார்டு, க்ரெடிட் கார்டெல்லாம் எடுத்துவிட்டுக் கொஞ்சம் பணம்மட்டும் வைத்தாள். ஆரத்தியெடுத்து வீரத்திலகமிடமாட்டாயா என்றேன். பதிலில்லை.

பேருந்தில் சென்றேன்; நீண்ட ஆண்டுகளுக்குப்பின் காலை நெரிசலில் ஒரு பேருந்துப் பயணம். கடற்கரையை நெருங்கும்போதே கூட்டம் களைந்துவிட்டிருந்தது. கண்ணகி சிலையில் கைக்குழந்தையோடு ஒரு பெண் இறங்கினாள். அவளது பையினை எடுத்து அவள் இறங்கியபின் நடத்துனர் கொடுத்தார். இப்படியும்கூட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  இவர்களுக்காகப் போராடலாம்.

கோட்டை வாசலிலேயே இறங்கினேன். மேலும் கீழும் நடந்தேன்; கோட்டைக்கெதிரில் பேருந்து நிறுத்தத்தில் அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன்.

முற்றுகையிடப்பட்டுத்தானிருந்தது கோட்டை – காக்கிச்சட்டைகளால். பிராட்வேயிலிருந்து வரும் பேருந்துகளைக்கூடச் சோதனையிட்டுக்கொண்டிருந்தனர் முற்றுகைப்படை. சற்று தூரத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பாகவோ வேறு எதற்காகவோ திரண்டிருந்தது, தாய்ப்பாசத்தோடு ஒரு கறைவேட்டிப்படை; இன்னும் தள்ளிச்சென்றால் பிரியாணிக்காகக் காத்திருக்கும் கூலிப்படை; பேருந்துநிறுத்தங்களில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பார்க்கவந்து முடிந்தும்,முடியாமலும் திரும்புகிற பொதுமக்கள்; ஏமாற்றத்தோடு சுற்றிச்சுற்றிச் செல்கின்ற சில ஊடக வாகனங்கள்.

பாதுகாப்பு வளையத்தைத் துளைத்து நுழைந்த, கூடங்குளம்-எதிர்ப்பாளன் நான் மட்டும்தான் போலிருக்கிறது என்று அண்ணா சதுக்கம்வரை இறுமாப்புடன் மெதுவாக நடந்து சென்றேன். என்னைத்தடுத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எந்தக் காவலரையும் தூண்டும் அளவிற்கு இறுமாப்பான நடையாக இல்லைபோலும். அணுஉலையெல்லாம் தேவையில்லை, இந்த கூவம்நதியிலிருந்து கிளம்பும் நறுமணம் போதும், நம்மை அழிக்க, என்று நேப்பியர் பாலத்தைக் கடந்தேன். இதுவும் விழுப்புண் படாமல் வழுக்கினுள் எடுத்து வைக்கும் நாளாயிற்றே என்று பேருந்து ஏறினேன்.

வீட்டிற்கு வந்து புதிய தலைமுறையைப் போட்டால் நேரலையில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. பலரும் கைதாகிவிட்டனர். ஆ, அத்தனை நேரம் நடந்துதிரிந்தும் கண்ணுக்குத்தெரியாமல் இத்தனை பேர் எப்படிக் கூடினார்கள் என்று பார்த்தால், அது எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கமாம். அட…நானெல்லாம் போராட்டம் என்று வாசல்தாண்டுவதே அபூர்வம். அதில் இப்படியொரு சோதனையா? தனிநபர் சத்யாகிரகம் நடத்தினாரே காந்தி – அந்தக் கணக்கில் சேர்த்துவிடலாம் என்று தேற்றிக்கொண்டேன்.

நடுத்தரவர்க்க நகரவாசிகளை நம்பினால் வேலையாகாதோ என்று மீண்டும் கடலில் கைகோர்த்து நிற்கின்றனர் இடிந்தகரையில், இத்தனைக்குப்பின்னும் இடியாத இதயங்களோடு.

 

தொடர்புடைய பதிவுகள்:

The unusual allies and a rightful protest

Koodankulam : connecting the dots

One Response to கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி

  1. dr suneel சொல்கிறார்:

    கண்ணன்,
    போராட்டம் நோக்கி எடுத்துவைத்த அந்த அடி முக்கியம்..அதற்கு துணிவு வந்துவிட்டதால் பிரச்சனை இல்லை..வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: