கேணி சந்திப்பு – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

ஒரு பழைய கேணி. அந்தக் கேணி எதிரினிலே ஒரு வளாகம். அந்த வளாகத்திலே ஒரு கூட்டம். அதுவும் இலக்கியக் கூட்டம். திங்களை உற்சாகத்துடனோ எரிச்சலுடனோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலைப் பொழுதில் நான் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகவே இருந்தது கூட்டம்.

பெங்களூரிலிருந்த காலங்களில், எழுத்தாளர்கள் ஞாநியும் பாஸ்கர் சக்தியும் நடத்துகிற கேணி சந்திப்பு பற்றிக் கேள்விப்பட்ட போது எப்போதாவது போக வேண்டும் என்று எண்ணியதுண்டு. சென்னைக்கு வந்துவிட்டபின் நேற்று சாத்தியமாகியது.

Federer-ன்இறுதியாட்டம் இருந்தபோதும், அரையிறுதியில் Federer ஆட்டத்தின் போது ‘Even if your world is burning, you should watch this music on green grass.’ என்று நான் முகநூலில் எழுதியிருந்தபோதும், அதை ‘தியாகம்’ செய்துவிட்டு கேணிக்குப் பயணமானேன்.

காரணம், நேற்றைய சந்திப்பு கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு.

எழுத்தாளனுக்கு இருக்கிற சமூகப் பொறுப்பினைக்குறித்துப் பேசி, அன்றைய உரையாடலின் போக்கினை நிர்ணயித்தார் மனுஷ்யபுத்திரன். சமூகப் பிரச்சினைகளைக் எதிர்கொண்டு பேசாத எழுத்தாளன் தனக்கு வாய்த்த தனித்திறனையும் வாய்ப்பையும் வீணடிக்கிறான் என்கிற புள்ளியில் அவர் பல நவீன படைப்பாளிகளிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார்.

கடவுள் நம்பிக்கையின்மை ஏன் பாரதியின் பக்திப்பாடல்களை ரசிக்கத் தடையாயில்லை என்று விளக்கியது பிடித்திருந்தது. நல்லதோர் வீணை ஒரு சிவசக்தி பாடல் தானா? – தன்னுடைய ஆசைகளைக்குறித்தது, எந்த மனிதனிடமும் வேண்டுகோளாய் விடுக்கமுடியாத விஷயங்களைக் குறித்து மன்றாடுவதற்கு  கடவுள் என்கிற உருவகம் தேவைப்படுவதாய்க் கூறியது, கவிதை வாசிப்புக்கு இன்னொரு திறவுகோளைத் தருகிறது.

மார்க்ஸியக் கோட்பாடு அவருக்கு உகந்தது. சோவியத்  ரக மார்க்ஸிய அரசியலில் அவருக்கு உடன்பாடில்லை.  இந்த நிலைப்பாட்டினைத் தெளிவாக விளக்கிய பின்னும் அதுகுறித்துத் தொடர்ந்த கேள்விகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். எனக்கு அவர் சமூகக்கருத்துகளைவிட, சமூகத்தை அவருடைய கவிமனம் எப்படி அணுகுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஆவல் அதிகமாயிருந்ததால் அப்படித் தோன்றியிருக்கலாம்.

மனதில் தங்கிய இன்னொரு கருத்து : நல்ல கவிதையைப் புரிந்து கொள்ளவதில் கவிதைப்பழக்கமுள்ள வாசகனுக்கு சிக்கலிருப்பதில்லை. அந்தக் கவிதையை அடைய அவனுக்குப் பல்வேறு வாயில்கள் உள்ளன. அவனுக்கான திறவுகோளை அவன்தான் கண்டறிய முடியும். புரியாத கவிதைகள் பெரும்பாலும் நல்ல கவிதைகளாக இருப்பதில்லை.

நான் அவரிடம் கேட்டவை இரண்டு கேள்விகள்:

1. தமிழ் நவீன இலக்கியத்தை தமிழகத்துள்ளும் வெளியிலும் இன்னும் அதிகம் பேரிடம் எப்படி எடுத்துச் செல்வது; எழுத்தாளர்கள் முழுநேரப் பணியாக இலக்கியத்தை எடுத்துக்கொள்ளும் துணிவை எப்படி உருவாக்குவது; தமிழ்ப் பதிப்புலகில் அதிகம் எழுத்தாளர்களே இருப்பதுதான் இதற்குக் காரணமா?

தமிழ் இலக்கியத்துக்கான வாசகர் வட்டம் மிகக் குறுகியது. கிழக்கு பதிப்பகத்தால் கூட பிரபல புத்தகங்களைத் தான் விற்க முடிகிறதே தவிர இலக்கிய ஆக்கங்களை பெரிய அளவில் விற்கமுடிவதில்லை. நமது பள்ளிகளும் சமூக அமைப்பும்  நமக்கு நவீன இலக்கிய வாசிப்புப் பயிற்சையை அளிக்கவில்லை என்றார்.

தொழில்முறை வல்லுனர்களால் இலக்கியத்துக்கான வாசகர் வட்டத்தையும் விரிவு படுத்தமுடியும் என்பதே இன்னும் என் நம்பிக்கையாக இருக்கிறது (இவற்றை நான் அங்கே விரிவாய் விவாதிக்கவில்லை). இந்தத் தளத்தில் மேலாண்மை உத்திகளைப் பயன்படுத்திச் செய்யவேண்டியவை நிறைய உள்ளன. எழுத்தாளர்களுக்கு அத்தகைய உத்திகள் உகந்ததாக இருப்பதில்லை – எழுத்தை விற்கவேண்டும் என்பகிற கருத்து எந்த நல்ல எழுத்தாளனுக்குத்தான் ஏற்புடையதாயிருக்கும்? இருந்தாலும் வேறு வழியில்லை, செய்துதான் ஆகவேண்டும் என்பதே என் எண்ணம்.

2. ‘இது மனுஷ்யபுத்திரன் கவிதை’ என்று பார்த்தவுடன் அடையாளப்படுத்தக்கூடய, அவருக்கே அவருக்கென்று இருக்கும் ஒரு கவிதை நடையை எப்படி அமைத்துக்கொண்டார்?

இது பலராலும் அவர்மீது ஒரு விமர்சனமாய் வைக்கப்படுவதாய் அவர் கூறிய போது ஆச்சர்யமளித்தது. பாரதிக்கென்று ஒரு குரல் இருப்பதுபோல, ஷெல்லி, நெருதா போன்றவர்களுக்கென்று தனித்த குரல் இருப்பது போல, தனக்கென்று ஒரு மொழியைக் கண்டடைந்ததில் ஆச்சர்யமில்லை என்று கூறினார். ஒரு நல்ல கவிஞனுக்கு அப்படியொரு தனித்த குரல் அமைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கடைசியில் அவர் கவிதையை அவர் படிக்கக்கேட்ட மனநிறைவோடு வீடு திரும்பியபோது, Federer இன்னும் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் வெல்லத் தொடங்கியிருந்தார். ஆஹா, அழகான கவிதைக்குப்பின் இசை.

நவீன இலக்கியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல இத்தகைய சந்திப்புகள் அவசியம் தேவை. பள்ளி தினங்களில் , எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் பெரிய அளவில் நடந்த கம்பன் விழாவும் சிலப்பதிகார விழாவும் தான் என்னையும் என்னைப்போன்ற பலரையும் தமிழ் இலக்கியத்தை நோக்கி இழுத்துவந்தன. நவீன இலக்கியத்துக்கான வாசகர் வட்டத்தை விரிவு படுத்தவும் அத்தகைய  விழாக்களும் விவாதங்களும் அவசியம் தேவை. கம்பன் ஆராயப்பட்டு சிலாகிக்கப்படுகிற அளவுக்கு மனுஷ்யபுத்திரனும் பிற வாழும் கவிஞர்களும் ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும்.

ஞாநி பாணியில், இந்த வாரப் பூச்செண்டு : கேணி சந்திப்பினை 36 வாரங்கள் நடத்தியிருக்கும் ஞாநிக்கும் பாஸ்கர் சக்திக்கும்.

(இந்நிகழ்வு குறித்து பத்ரி சேஷாத்ரியின் பதிவு இங்கே.)

Advertisements

3 Responses to கேணி சந்திப்பு – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

  1. மனுஷ்யபுத்திரனோடான கேணி நிகழ்வைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வாசிப்பு பழக்கத்தை வீடுகள், வீதிகள், பள்ளி-கல்லூரிகள் என எடுத்துச் சென்று பரப்ப வேண்டும்.

  2. Bhaskar சொல்கிறார்:

    மிக அழகாக எழுதியுள்ளீர்கள் கண்ணன். மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் பல வாசல்களைத் திறக்கும். சந்தேகமில்லை. எழுத்தாளர்கள் சொல்லும் கருத்துக்களை யார் கேட்கிறார்கள். தமிழ் நாட்டில் பொதுவாக அரசியல் மற்றும் சினிமா தான் பிரதானம். அதோடு சேர்ந்து இலக்கியமும் கொஞ்சம் படிக்கலாம்.
    மேலும் உங்கள் திருக்குறள் பணிக்கு என் வாழ்த்துக்கள். உங்களைப் போல் சிலரால் தான் தமிழ் வலை உலகத்திற்கு ஒரு பொருள் உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: