முதலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி. பாரதி ஒரு மகாகவி இல்லை என்ற விவாதத்தைத் தொடங்கி, பாரதியை விமர்சினங்களால் கண்டடைய முடியாது என்ற தெளிவை ஏற்படுத்தியதற்காக. அவர் எவ்வளவு அற்புதமான மகாகவி என்று எங்களுக்கு நினைவுபடுத்தி, மறுபடியும் நிறுவியதற்காக.
பாரதி ஓர் அற்புதமான நிர்வாணச் சிலை செய்துசென்றான். அதன் நிர்வாணமே அதன் அழகு. அச்சிலையை ரசிப்பதைவிட்டு, மற்ற சிலைகளின் ஆடை ஆபரணங்கள் போல் இதில் இல்லையே என்று விவாதிப்பதில் பொருளில்லை.
பாரதியின் பல கவிதைகள் நேரடித்தன்மையோடு இருக்கலாம்; ஆழ்படிமங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவற்றின் உணர்வெழுச்சியே அவற்றிற்கான தனியிடத்தை ஏற்படுத்துகின்றன. அவன் கவிதைகளை, உணர்ச்சிகளைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் விமர்சனப் பார்வையோடு பார்த்தால், வெற்று விவாதங்கள் தான் விளையும்.
பாரதியை வெறும் இசைப்பாடல் எழுதியவனாகவும், பக்திக் கவிஞனாகவும், உரைநடை முன்னோடியாகவும் மட்டுமே பார்க்க முடிகிறபோது, ஜெயமோகனின் இலக்கியப்பார்வைமீது எனக்கிருந்த மதிப்பு பலகாதம் கீழிறங்கிவிட்டது.
மற்ற மொழியினர் பாரதியை மட்டுமல்ல, கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் தான் இன்னும் அறியாமல், பாராட்டாமல் இருக்கிறார்கள். அந்த அளவுகோளின்படி தமிழில் கவிஞர்களே இல்லை என்றாகும். பாரதி உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தவன். வெறும் மேடைப்பேச்சு தரும் தற்காலிக உணர்வெழுச்சியல்ல அவனுடையது – நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் சற்றும் மங்காத உணர்வெழுச்சி. அத்தகைய உணர்வெழுச்சியை மொழிபெயர்ப்பதற்கு பாரதியின் திறத்தோடு இன்னொரு கவிஞன்தான் வரவேண்டும். என்னுடைய மொழிபெயர்ப்புகளையே நான் மறுபடி படிக்கும் போது, எனக்கு என்னுடைய போதாமை புரிகிறது. தமிழில் இருக்கும் வேகத்தையும், எளிமையையும், அழகையும் ஒருசேர என்னால் (மற்றவர்களாலும்) ஒருபோழ்தும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியவில்லை என்பது தெளிவு.
ஆனாலும், அது ஒரு பொருட்டல்ல. தொடர்ந்து முயல்வோம். மற்றவர்களை பாரதி சென்றடைந்தாலும், அடையாவிடினும், தமிழனுக்குப் பாரதி மகாகவிதான்.
பாரதியை பக்தி, சமூகம், வேதாந்தம், மொழி என்கிற கூட்டிலெல்லாம் அடைத்துப்பார்க்க முடியாது. அவன் கவிதைகளிற் பொங்கிநிற்பது மானுடம். ஆத்திகனையும், நாத்திகனையும் நகரவிடாமற் கிறங்கடிக்கும் மானுடம். பாரதி என்றொரு மானுடன் கவிபுனைந்த மொழியினை அறிந்தவன் நான். எனக்கு என்றும் அவன் மகாகவிதான்.
பாரதியின் படிமங்களற்ற, காலத்தை வென்று நிற்கும் இந்த நேரடிக் கவிதையையே எல்லா விமர்சனங்களுக்கும் பதிலாய்த் தரலாம்.
தேடிச்சோறு நிதந்தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்ப மிகவுழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்க்கூற்றுக் கிரையெனப்பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப்போல் நானும்
வீழ்வேனென்று நினைத்தாயோ ?
நல்ல சொன்னீங்க சார்! எனக்கும் இந்த விவாதத்துக்குப்பிறகு திரு ஜெயமோகன் மீது இருந்த மதிப்பு போய்விட்டது.
[…] பற்றிய இந்தப்பதிவுக்குப்பின், ஜெயமோகன் […]