ஆத்தா – நிறைவாய் வாழ்ந்தாய்!
வயதுகூடச் சரியாகத்தெரியாத மூப்புநிலையில்
இன்று உன் வாழ்வு நிறைவடைந்தது.
ஊருக்குச் செல்லும்போதெல்லாம் எனக்கு
உன் சீலையில் சொறுகிய பைமுடிப்பிலிருந்து
காசு கொடுப்பாய். இன்று நீ
உலகைவிட்டுச் செல்கிறாய்.
எதை நான் கொடுப்பேன்.
உனக்காக நான் கண்ணீர்விடுவதைப்
பார்த்திருந்தால் மகிழ்ந்திருப்பாய்.
நீ இல்லை என்பதால்தானோ என்னவோ
கண்ணீர் மட்டும் வரவேயில்லை.
உனக்குப் படிக்கத் தெரியாத
கவிதைதான் வருகிறது.
துறுதுறுவென்று தொடர்ந்து உழைத்து,
காடுகள் களைந்து காய்கறிவிற்று,
ஐந்து பெண்களைக் கரைசேர்த்தாய்.
இனி உனக்கு விடுதலை.
நிரந்தரமாய் ஓய்வெடு.
வாழ்வோடு போராடி
உழைத்த போது இருந்த புன்னகை,
நீ சாவோடும் வலியோடும் போராடிக்
களைத்திருந்த கடந்த ஆண்டுகளில்
காணாமல் போயிருந்தது.
தொலைந்து போயிருந்த
அந்த அமைதியை இன்று
அந்த மயானத்தில் உன் முகத்தில்
மீண்டும் கண்டேன்.
பொய்யான கண்ணீருக்கும் சடங்குகளுக்கும்
மத்தியில், அந்த மயானத்தில்
உன்னை மூடிய சீலைமட்டும்
காற்றில் ஆடிய படியிருக்க
உன் பேசாத உடலோடு
உரையாட
இன்று கிடைத்த அந்தச் சில
தருணங்கள் அருமையானவை.
உன் உடலைச் சுமக்க
நிறையப்பேர் முந்தி நின்றனர்.
என்றும் உன் நினைவுகளை
நான் சுமந்து நிற்பேன்.
நீ வாழ்க!
அழகு கவிதை!