என் காதலா, எங்கே எல்லோருக்கும் பின்னே நிழலுக்குள் மறைந்து நிற்கிறாய்?
உன்னை வெறும் வெறுமையாய் நினைத்து, புழுதியில் தள்ளித் தாண்டிச் செல்கிறார்களே!
உனக்காக நான் கடைபரப்பிக் காத்திருக்கிறேன். எல்லோரும் ஒவ்வொன்றாய், உனக்கான, என் பூக்களை எடுத்துவிட்டார்கள்.
காலை கடந்துவிட்டது. மதியமும் தான். மாலையின் நிழலில் என் கண்கள் சொருகக் காத்திருக்கிறேன்.
கடந்து செல்கிறவர்கள் என்னைக்கண்டு புன்னகைத்து என்னை நாணத்தால் நிரப்புகிறார்கள். பிச்சைக்காரியைப் போல சேலையால் முகத்தை மறைத்து அமர்ந்துள்ளேன். என்னதான் வேண்டும் என்று கேட்கிறவர்களுக்கு, முகத்தைத் தாழ்த்தி, விடையுரைக்க மறுக்கிறேன்.
ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை. எனைக்காண வருவேன் என நீ வாக்களித்திருப்பதை.
ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்கு வரதட்சனையாய் என் வறுமையை மட்டுமே வைத்திருக்கிறேன் என்பதை.
ஆ! என் இதயத்தின் ஆழங்களில் இந்தப் பெருமையை மறைவாய் அணைத்துக்கொள்கிறேன.
புல்வெளியில் அமர்ந்து உன் வருகையைக் கனவு காண்கிறேன். பொற்கொடி பறக்க, ஒளிவீசி, வரும் உன் தேர் கண்டு பிரமித்து வாய்பிளக்கிறார்கள். வெட்கத்தோடும், பெருமையோடும் படபடத்து நிற்கும் என்னைப் புழுதியிலிருந்து அள்ளி, அணைத்து, உன் அருகில் அமர்த்திக்கொள்கிறாய்.
ஆனால் நேரம் சறிந்துசெல்கிறது. ஆர்ப்பரிப்போடு நிறைய ஊர்வலங்கள் கடந்து செல்கின்றன. உன் தேர் வரும் ஓசை இன்னும் செவிகளில் விழவில்லை.
நீ மட்டும்தான் அந்த நிழலுக்குள் மறைந்து நிற்பாயா? நான் மட்டும்தான், வீண் ஏக்கத்தால், இதயம் தேயக் கண்ணீரோடு காத்திருப்பேனா?
– தாகூர்
(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)