ஓர் அழகான கலை, பழம்பெருமைகளுக்குச் சிறைபட்டதாலேயே வளராமல் தேக்கமடைந்துவிட்டது. ஒவ்வொரு முறை கர்நாடக இசைப்பாடல்களைக் கேட்கிற பொழுதும், இசைப் பாமரனான, என்னுள் எழுகிற முதல் எண்ணம் இது.
சந்தேகமில்லாமல் நம் இசை, உலக இசைக்கு இணையானது; பல வகைகளில் மேலானதும் கூட, என்றே தோன்றுகிறது. சில நாட்களாய் இரண்டையும் கேட்கிறேன், இரண்டுமே பிடித்திருக்கிறது என்பதால் சமநிலையில் எழுந்தது இந்த ஞானம். வேறு எந்தத் துறையைக் குறித்தும் நாம் இவ்வளவு உறுதியாய்க் கூறமுடியாது.
ஆனாலும், நம் நாட்டிலேயே மிகக் குறுகியவட்டத்திற்குள் சிறைபட்டிருக்கிறதே இக்கலை, ஏன்?
முதல் காரணம், மாற்று மொழியின் ஆதிக்கமே. இசை கற்க விரும்புகிற இளைஞர்கள், குழந்தைகள் உடன் வேறு மொழியையும் கற்க வேண்டியது எதற்காக? மொழி புரியாமல் என்னைப் போன்றவர்களும் எத்தனை நாட்கள் இந்த இசையை ரசிக்க முடியும் – ஒவ்வொரு முறையும் சில நாட்களில் சலிப்பு ஏற்பட்டு விலகியே சென்றிருக்கிறேன்.
அடுத்தது, புதிய முயற்சிகள் மிகக் குறைவாக இருப்பதால். தியாகராஜருக்கு மேல் சிறப்பாய் யாரும் படைக்க முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ஆனால், எத்தனை நாட்கள், புரியாமல் தியாகராஜரையே கேட்பது. இளையராஜாவின் படைப்புகளை மான்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது எந்த வகையில் அதற்கு குறைந்தது என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. பாலமுரளிகிருஷ்ணா அவரறிந்த தமிழில் எழுதியுள்ள பாடல்கூட அவரது கணீர் குரலில் அற்புதமாய்த்தான் இருக்கிறது. கல்கியின் எளிமையான பாடல்கள் எம்.எஸ். குரலில் வேறு தளத்திற்கு இட்டுச்செல்லப்படுகின்றன. காந்தி பற்றிய ஒரு பாடல், ‘வையத்தை வாழவைக்க வந்த மகாத்மா’ – அவர் இறந்த போது எழுதப்பட்டிருக்க வேண்டும் – இவ்வளவு சோகத்தை, உறுக்கத்தை, இவ்வளவு இனிமையாய் வெளிப்படுத்த முடியுமா என்று வியக்க வைக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் மிகக்குறைவானவையே. பெரும்பாலும், கர்நாடக சங்கீதத்தில், தரமான புதிய படைப்புகளுக்கு இடமில்லை.
ஒரு நல்ல இசைக்கலைஞர், ஒரு நல்ல தமிழ்க் கவிஞரோடு இணைந்தால் உருவாகக்கூடிய சாத்தியங்கள் பிரமிக்கவைக்கும். ‘திருவாசகம்‘ கேட்டவர்களுக்குப் புரியும் (மேற்கத்திய இசை என்றாலும் கூட, வேர்கள் இங்குதானே). புத்தம்புதிய தமிழ்ப்படைப்புகளோடு மட்டும் ஒரு முழுக் கச்சேரி நிகழ்கிற நாளன்று, சில நூற்றாண்டுகளைக் கடந்து நம் இசை நிகழ்காலத்திற்கு வந்தடையும். தமிழர்கள் குத்துப்பாடல்களை மட்டுமே படைக்க, சுவைக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பது கண்டறியப்படும்.