Elitist இலக்கியவாதிகளும் இலக்கிய வளர்ச்சி(யின்மை)யும்

தமிழ் இலக்கியம் மக்களைச் சென்றடையாமல், மிகச்சிறிய வட்டங்களுக்குள் சிறைபட்டுக் கிடப்பது வருத்தத்திற்குரியது. இதற்கு முதன்மையான காரணம் தமிழ் இலக்கியவாதிகளிடம், கர்நாடக சங்கத வித்வான்களிடம் போல், பரவலாகக் காணப்படுகிற ஒரு வகையான தீவிர brahminical elitist mentality தான்.

தமிழ் வாசகர்கள் வட்டம் ஆங்கில உலகமளவிற்கு விரிவானதல்ல. ஆனால் இங்குள்ள இலக்கியப் பாகுபாடுகள் ஆங்கிலத்தைவிடவும் அதிகம் என்றே தோன்றுகிறது. முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், வட்டார இலக்கியம், தனித்தமிழ் இலக்கியம், திராவிட இலக்கியம், இடதுசாரி இலக்கியம், பெண்கள் இலக்கியம்  என்று எண்ணற்ற பிரிவுகள். இத்தனை வகைகள் இருப்பதில் தவறில்லை, ஆனால் ஒவ்வொரு வகையினரும் அவரவர்க்கென ஒரு வட்டமைத்து, அந்த வட்டத்திற்குள்ளேயே சிறைபட்டு, வெளியிலிருப்பவர்களை மட்டமாய் நினைப்பது ஒட்டுமொத்த இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே தெரிகிறது.

பல சமயங்களில் வர்த்தக வெற்றியை, இலக்கியத் தோல்வியாகவே கருதுகிறார்கள். வர்த்தக வெற்றி மட்டுமே இலக்கியத் தரத்திற்கு அளவுகோளாக முடியாது. அதேசமயம், எதிர்மறையாய், பெரும் வர்த்தக வெற்றி பெறுகிறவர்களை அந்த ஒரே காரணத்திற்காகத் தாழ்த்தி எடைபோடவும் கூடாது.

எடுத்துக்காட்டு – வைரமுத்துவிற்கு ஒரு சாராரிடம் கிடைக்கிற அவமரியாதை. இதோ ஜெயமோகன்  – ”’பில்லா’ கறுப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு முப்பது பாகையில் முகம் திருப்பி ‘தமிழின் நிகழ்காலம்’ [இறந்தகாலம் முதல்வர் கருணாநிதியா?] என்று சுவரொட்டி அடித்து வெட்கமில்லாமல் தெருத்தெருவாக ஒட்டும் வைரமுத்து எப்படி உணர்வாரோ தெரியவில்லை, நல்ல வாசகராக நான் அறிந்த நா.முத்துக்குமார் அதைக் கண்டால் கூசிப்போவார் என்றே நினைக்கிறேன். [இதழில் எனக்குப்பிடித்த இரண்டு கவிதைகளில் ஒன்று அவர் எழுதியது] ”.

இலக்கியத்திற்கும் விளம்பரம் தேவைதான். விளம்பரம் கிடைப்பதாலேயே (சுய விளம்பரமா, தெரியவில்லை) அவரது இலக்கியத்தரம் ஏன் தாழ்ந்து போவதாய் நினைக்க வேண்டும். அவரது படைப்புகளில் நிறைய சேறிருந்தாலும், சேற்றை மறைக்குமளவிற்குச் செந்தாமரைகளும் நிறைந்துதானிருக்கின்றன. படைப்பாளிகள் அத்தனை பேருக்கும் இதே கூற்று ஓரளவு பொருந்தும்.

தனிமனித விருப்புவெறுப்புகளை ஒதுக்கிவிட்டு, பலவகைப்பட்ட படைப்புகளையும் சுவைத்துப்பாராட்டுகிற பக்குவம் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் Naipaul, Rushdie போன்ற தனிமனிதர்கள் மீதும், அவர்கள் கருத்துகளுடனும் உடன்பாடில்லாதவர்கள்கூட அவர்களின் படைப்புகளுக்குத் தரவேண்டிய மதிப்பைத் தருவதைப் பார்க்கிறோம்.

எனக்கு Tolkien, Walter Scottம் பிடிக்கும், Franz Kafka, Albert Camusம் பிடிக்கும். அதேபோல கல்கியின் பொன்னியின் செல்வனும் பிடிக்கும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகளும் பிடிக்கும். ஜெயமோகனின் விஷ்னுபுரமும் பிடிக்கும், வைரமுத்துவின் சிகரங்களை நோக்கியும், ஏன், பல நயமான திரைப்பாடல்களும் பிடிக்கும். இவற்றில் முரண்பாடுகள் இருப்பதாய்த் தோன்றவில்லை.

ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் பிரபல வார இதழ்களில் எழுதியதாலேயே தரம்தாழ்ந்தவர்களாய்ச் சில சிற்றிதழ்கள் சித்தரிப்பதைப் பார்த்திருக்கிறேன். விந்தையான வாதம்தான். பத்துப்பேர் மட்டுமே படிப்பதுதான் இலக்கியம் என்று எண்ணுகிற இவர்களின் மனோபாவத்தைத்தான் brahminical elitist mentality என்று கூறினேன், ஜாதி அடிப்படையில் அல்ல (பார்ப்பனன் என்பதால் பாரதியை மட்டம்தட்டுகிறவர்களும் நம்மில் உண்டு!).

இலக்கியம் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் மென்மேலும் வளரும். அதற்காக நவீன வியாபர உத்திகள் தேவைப்பட்டால், அவற்றையும் பயன்படுத்தித்தான் பார்ப்போமே.  நாம் வறுமையால் இறந்த பாரதிகளையும் புதுமைப்பித்தன்களையும் பார்த்தது போதும்.  இலக்கியத்தால் செழிப்படைந்து, இன்னும் உற்சாகமாய் இலக்கியத்தைச் செழிப்படையச் செய்கிற நிலை, உலகெங்கிலும் போல் இங்கும், உதயமாகட்டும்.

7 Responses to Elitist இலக்கியவாதிகளும் இலக்கிய வளர்ச்சி(யின்மை)யும்

  1. thamilannan சொல்கிறார்:

    miha chariyaga sonneeergal.
    makkal ellorukkum sentru adaivathu than ilakkiyam

  2. cvalex சொல்கிறார்:

    உங்கள் கருத்தை வரவேற்கிறேன். இருபக்கமும் அடுத்தவர்களுக்கு இடம் தர முன்வரவேண்டும். இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும்.

    ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகளாலேயே இது சாத்தியம்.

  3. anamikan சொல்கிறார்:

    ஜெயமோகன் நீங்கள் வைரமுத்துவை நல்ல கவிஞராக ஏற்பதை உங்களுடைய ரசனைக் குறைவு என்பார். அவரால் தன் எழுத்தினை ரசிக்கும் ஒருவர் வைரமுத்துவை ரசிப்பது, கவிஞராக மதிப்பது ஏற்க முடியாத ஒன்று.

  4. Arivumani சொல்கிறார்:

    Merkanda moovarin karuthukaluden naan udenpadugeren..

  5. sankar சொல்கிறார்:

    This is right, i will appriciate the same

  6. amuthabalachandar சொல்கிறார்:

    u r right kannan.

  7. David.Y.C.J சொல்கிறார்:

    your views perfectly correct. i very much appreciate

sankar -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி